Published:Updated:

ஊழியர்கள் வீட்டையும் விட்டுவைக்காத அதிகாரிகள்! - லாட்டரி மார்ட்டினுக்கு செக் வைத்த ஐ.டி ரெய்டு

விகடன் விமர்சனக்குழு
ஊழியர்கள் வீட்டையும் விட்டுவைக்காத அதிகாரிகள்! - லாட்டரி மார்ட்டினுக்கு செக் வைத்த ஐ.டி ரெய்டு
ஊழியர்கள் வீட்டையும் விட்டுவைக்காத அதிகாரிகள்! - லாட்டரி மார்ட்டினுக்கு செக் வைத்த ஐ.டி ரெய்டு

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், பிரபல லாட்டரி அதிபராக இருந்துவருகிறார். தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதால், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி தொழில்  செய்துவருகிறார். தி.மு.க-வின் நிழலாக வலம்வருபவர். கருணாநிதி வசனத்தில் உருவான `இளைஞன்' திரைப்படத்தைத் தயாரித்தவர். லாட்டரி தொழில் என்பதால், இவர் அவ்வபோது மோசடி மற்றும் வரி ஏய்ப்புப் புகார்களில் சிக்குவது வழக்கம். இந்நிலையில், கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்கள் என நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து மார்ட்டினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். குறிப்பாக, மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்களின் இல்லங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மார்ட்டின் தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என்பதாலும், தமிழகத்தில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடக்க இருப்பதும்கூட ரெய்டுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று தி.மு.க பிரமுகர்கள் கூறுகின்றனர்.