Published:Updated:

`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

மணிமாறன்.இரா
`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி
`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வரும் வகையில், கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து வேன் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த வேனில், எந்த வித கட்டணமுமின்றி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி முடிந்ததும், வீட்டுக்குக் கொண்டுபோய் விடுகின்றனர்.

`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆவணத்தாங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து 109 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வகுப்பு எனப் பள்ளி சிறந்து விளங்குகிறது. கரேத்தே, சிலம்பம் உள்ளிட்டவற்றுக்குச் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் சுமார் 2 முதல் 3 கி.மீ வரையிலும் நடந்தே வர வேண்டும். இதனால், மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், தான் பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் முயற்சியால், நம் பள்ளி - நம் திட்டம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் கிராம மக்கள், தன்னார்வலர்களை இணைத்து அவர்களிடம் நிதி பெற்று, பள்ளிக்குப் புதிய வேனை வாங்கியுள்ளனர். 4 ஷிப்டாகப் பள்ளியிலிருந்து வேன் இயக்கப்படுகிறது. இந்த வேனில், அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகமாகச் சவாரி செய்து வருகின்றனர்.

`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

ஆசிரியர் பாஸ்கர் கூறும்போது, "ஆவணத்தாங்கோட்டை, மாளிகைபூஞ்சை, கோணாங்கொல்லை, அழிஞ்சிரங்காடு, வாடிக்காடு, வைத்தியநாதன் வயல் உள்ளிட்ட ஊர்களிலிருந்து இங்குள்ள பள்ளியில் படிக்கிறாங்க. சில மாணவர்கள் சைக்கிளில் வந்துவிடுவாங்க. பெரும்பாலான மாணவர்கள் நடந்துதான் வருவாங்க. அரசுப் பள்ளியில அனைத்து வசதிகள் இருந்தும் பிள்ளைகள் நடக்கணும்ங்கிறதால, பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு அனுப்பத் தயங்கினாங்க. வாகன வசதி இருக்கிற தனியார் பள்ளிக்கு அனுப்புவாங்க. வாகனம் ரொம்ப முக்கியம்ன்னு தெரிஞ்சிக்கிட்டோம். வாடிக்காடு கிராமத்தில இருந்து வரும் மாணவிகள் ரொம்பவே சிரமப்பட்டு வருவாங்க. மெல்ல, மெல்ல அங்க இருந்து வருகிற பிள்ளைகள் எண்ணிக்கையும் குறைஞ்சிருச்சு. உடனே ஆசிரியர்கள் நாங்க எல்லாம் சேர்ந்து சொந்த செலவில் ஆட்டோ ஒன்றைத் தினமும் வாடகைக்கு எடுத்து அந்த ஊர் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்தோம். இதேபோல், எல்லா ஊர்ல இருந்தும் பள்ளிக்கு வரும் மாணவர்களையும் வீட்டுக்கே போய் கூட்டிக்கிட்டு வரணும்ங்கிற எண்ணம் எங்களுக்கு வந்துச்சு. இதற்காகத்தான் நம் பள்ளி- நம் திட்டத்தை ஆரம்பித்தோம். ஆசிரியர்கள் எல்லாரும் பங்களிப்பு செஞ்சாங்க. அதே நேரத்தில, கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நண்பர்கள், தன்னார்வலர்கள் எனப் பல்வேறு  இடங்களிலிருந்தும் நிதி உதவி கிடைச்சது. கிடைத்த நிதியை வைத்து பள்ளிக்காக, இந்தப் புதிய வேனை வாங்கியுள்ளோம்.

`இனி நடந்து வர வேண்டாம்; வேனில் பயணிக்கலாம்!' - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த அரசுப் பள்ளி

அனைவரின் ஒத்துழைப்பாலும் இன்று மாணவர்களுக்காக வேன் வாங்க வேண்டும் என்ற எங்களின் கனவு நினைவாகியிருக்கிறது. தினமும் மாணவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கே கொண்டுபோய் விடுகிறோம். இதற்காக, பெற்றோரிடம் எந்தக் கட்டணமும் நாங்கள் வாங்குவதில்லை. பள்ளிக்கு புதிய வேன் வாங்கியதையடுத்து, கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் ஒரே நேரத்தில் 40 பேர் வரையிலும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். வேன் வாங்கியதற்கு உதவிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி" என்கிறார்.