Published:Updated:

`சோலைவனம் பாலைவனமாகிடுச்சு!' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி

கே.குணசீலன்
`சோலைவனம் பாலைவனமாகிடுச்சு!' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி
`சோலைவனம் பாலைவனமாகிடுச்சு!' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி

`கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் பசுமையான எங்க பகுதி பாலைவனமாக மாறிவிட்டது மீண்டும் பசுமை பூமியாக மாற்ற வேண்டும்' என பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் மரக்கன்றுகளை இலவசமாக கொடுப்பதுடன், வீட்டுக்கு மரக்கன்றுகளை நட்டு கொடுத்தும் வருகின்றனர். அந்த இளைஞர்களைப் பொதுமக்கள் மனதார பாரட்டி வருகின்றனர்.

`சோலைவனம் பாலைவனமாகிடுச்சு!' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி

பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் அந்தப் பகுதி இளைஞர்கள் இணைந்து `உயிர்' என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின்  மூலம்  அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, தங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றியுள்ள 5 கிராமங்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதோடு, ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் மரக்கன்றுகளை நடவும் செய்கின்றனர். இளைஞர்களின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த பாலமுருகனிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் எங்கள் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதோடு லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விண்ணை நோக்கி உயர்ந்து நின்று தென்னை மரங்களும் பாதியோடு முறிந்தும் வேரோடும் சாய்ந்தன. இதனால் எங்க பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினோம். மரங்கள் விழுந்ததால் சோலைவனம்போல் பசுமையாக இருந்த எங்கள் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இன்று பாலைவனம்போல் வறண்டு காட்சியளிக்கிறது. மரங்கள் இல்லாததால், இந்தக் கோடையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களில் மழை இருக்கும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் துளி மழைகூட பெய்யவில்லை. மரங்கள் இல்லாமல்போனதால் மனிதர்கள் மட்டுமன்றி கால்நடைகளும் கடும் அவதிப்படுகின்றன. 

`சோலைவனம் பாலைவனமாகிடுச்சு!' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி

மரங்கள் இல்லாமல்போனதே இதற்கு முக்கிய காரணம் என்பதால், இளைஞர்கள் சேர்ந்து மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்தோம். அதன்படி எங்கள் ஊர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கும் மரக்கன்றுகளை கொடுக்கிறோம். மேலும் வீட்டுக்கு முன்பு மரக்கன்றுகளை நட்டு வைக்கிறோம். முதற்கட்டமாகப் புங்கை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை 250 குடும்பங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அதோடு, `இந்த மரக்கன்றுகளை குழந்தைபோல் கவனித்து வளர்த்துவிட வேண்டும்' என அனைவரிடத்திலும் அன்போடு கோரிக்கை வைத்திருக்கிறோம். புயல் ஏற்படுத்திய பாதிப்பில் பாலைவனமாக மாறிய எங்கள் பகுதி மட்டுமல்ல எல்லாப் பகுதியும் பசுமையாக மாற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்'' என்றார் நம்பிக்கையுடன்.