Published:Updated:

பாரபட்சம் காட்டும் அரசு… தாகத்தில் தவிக்கும் நான்கு தொகுதி மக்கள்!

ஆர்.குமரேசன்
பாரபட்சம் காட்டும் அரசு…  தாகத்தில் தவிக்கும் நான்கு தொகுதி மக்கள்!
பாரபட்சம் காட்டும் அரசு… தாகத்தில் தவிக்கும் நான்கு தொகுதி மக்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில், 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம் ஆகிய நான்கு தொகுதிகளில், தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் திண்டுக்கல்,வேடசந்தூர்,நிலக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள்.

பாரபட்சம் காட்டும் அரசு…  தாகத்தில் தவிக்கும் நான்கு தொகுதி மக்கள்!

இந்நிலையில்,  'தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ள 4 தொகுதிகளுக்கும் குடிநீர் தடை செய்யப்படுகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ள தொகுதிகளுக்கே  அனைத்து குடிநீர் திட்டங்களும் பயன்படுத்தப்படுகின்றன’ என தி.மு.க குற்றம் சாட்டுகிறது. இன்று காலை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினய்யை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், நத்தம் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் ஆகியோர் சந்தித்தனர்.

‘மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். நான்கு தொகுதிகளுக்கு தண்ணீர் தராமல் செயல்படும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என மனு அளித்தனர்.

 பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, ‘’தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ஆத்தூர் காமராஜர் அணை, நிலக்கோட்டை பேரணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய அனைத்தும் கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். ஆனால் ஆத்தூர்,ஒட்டன்சத்திரம் தொகுதிகளில், கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீரைத் தடைசெய்கிறார்கள். அனைத்து பொதுமக்களையும் ஒன்றாகப் பார்க்கவேண்டிய அரசு, இந்தச் செயலை செய்யக் கூடாது.

ஆத்தூரிலிருந்து திண்டுக்கல் மாநகராட்சிக்குக் குடிநீர் வருகிறது. வழியோர கிராமங்களுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக நீர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, அவை ஆத்தூர் தொகுதிக்குள் வருகிறது என்ற காரணத்திற்காக, தண்ணீரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் தண்ணீரை எரியோடு பகுதியில் அடைத்து, வேடசந்தூர், திண்டுக்கல்லுக்கு மட்டும் அனுப்புகிறார்கள். அங்கு, ஏகப்பட்ட தண்ணீர் வீணாகிறது.

வேடசந்தூர்-ரெட்டியார்சத்திரம்-ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், வேடசந்தூர் தவிர மற்ற இரண்டு பகுதிகளுக்கும் தண்ணீர் தருவது இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு நடந்து கொள்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். விரைவில் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்வோம்.

ஒரு மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். பொன்மாந்துரை கிராமத்திற்கு ஆறு ஆண்டுகளாகத் தண்ணீர் வருவதில்லை. நான் எனது சட்டமன்ற உறுப்பினர் தொகையில் தொட்டி கட்டி, அந்த மக்களுக்கு குடிநீர் கொடுக்கலாம் என முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், அதற்கான அனுமதியையும் தர மறுக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுத் தொகை முழுவதையும் குடிநீர் திட்டங்களுக்கே ஒதுக்கீடு செய்கிறோம். ஆனால், அரசு போர்கூட போட்டுத் தருவதில்லை. ஒரு மாதத்திற்குள் நிலைமை மாற வேண்டும். இல்லாவிட்டால், மாபெரும் போராட்டம் மூலம் மாற்றுவோம்’’ என்றார்.

Vikatan