Published:Updated:

`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்!'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்

மு.இராகவன்
`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்!'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்
`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்!'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்

நாகை நம்பியார் நகர் மீனவக் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னதம்பி என்பவருக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு கடலில் முழுவதுமாக மூழ்கியது. 

`அனுமதி கிடைக்கல, நடுக்கடலில் நங்கூரமிட்டனர்!'- கடல் சீற்றத்தால் ரூ.1 கோடி மதிப்புள்ள படகு மூழ்கி நாசம்

நாகப்பட்டினம் புதிய மீன்பிடித் துறைமுகம் 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் நாகப்பட்டினம் தாலுகாவுக்கு உட்பட்ட மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைத்தும், கடலில் பிடித்து வரும் மீன்களை துறைமுகத்தில் இறக்கி வைத்தும்  விற்பனை செய்து வந்தனர். 

இடையில் நம்பியார் நகர் மற்றும் அக்கரைப்பேட்டை கிராம மீனவர்களிடையே ஏற்பட்ட தொழில் பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலால் நம்பியார் நகர் மீனவர்கள் தங்கள் படகுகளை புதிய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். நம்பியார் நகர் மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழைய மீன்பிடித் துறைமுகத்திலும், அவர்கள் கிராமத்துக்கு நேராக நடுக்கடலில் நங்கூரமிட்டு விசைப்படகுகளை நிறுத்தி வைத்தும் அங்கேயே மீன்களை இறக்கியும் விற்பனை செய்யும்படியும் மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

ஆனால், நம்பியார் நகர் மீனவர்கள் தங்கள் படகுகளை பழைய மீன்பிடித் துறைமுகத்திலும், தங்கள் கிராமத்திலும், நிறுத்துவதற்கு  இடவசதி இல்லாத காரணத்தினால், புதிய மீன்பிடித் துறைமுகத்திலேயே நிறுத்தி தொழில் செய்ய அனுமதிக்கும்படி மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பயன் ஏதுமில்லை. இப்பிரச்னை காரணமாக மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து மூன்று நாள்களாகியும், நம்பியார் நகர் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் தங்கள் படகுகளை பழைய மீன்பிடித் துறைமுகத்திலும், தங்கள் கிராமத்துக்கு எதிரே கடலில் நங்கூரமிட்டும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நம்பியார் நகர் மீனவக் கிராமத்தில் இன்று அதிகாலையில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னதம்பி என்பவரது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு, கடல் சீற்றம் காரணமாக  தண்ணீர் புகுந்து முற்றிலுமாக கடலில் மூழ்கியது. படகிலிருந்த வலைகள் மற்றும் பொருள்களை பைபர் படகு மூலம் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்த மீனவர்கள், கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியுள்ள விசைப் படகை மீட்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை புதிய துறைமுகத்தில் படகுகளை நிறுத்துவதற்கு இடம் கிடைக்காத காரணத்தினால் இதுபோல கடல் சீற்றத்தால் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகு மூழ்குவது இரண்டாவது முறையாகும். நம்பியார் நகர் கிராமத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கும்  திட்டம்  அரசிடம் உள்ளது. அத்திட்டம் நிறைவேறும் வரையில் நம்பியார் நகர் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும், கடலில் பிடித்துவரும் மீன்களைப் புதிய மீன்பிடித் துறைமுகத்தில்  இறக்கவும் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட மீனவருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நம்பியார் நகர் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Vikatan