Published:Updated:

`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்

ராம் பிரசாத்
`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்
`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்
`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்  கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  தமிழ்நாட்டில், மேலும் ஓ.என்.ஜி.சி நிறுவனம், 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். 

''விவசாயிகள் நலனுக்காகத் திட்டங்கள் தீட்டுகிறோம் என கூறிக்கொண்டே தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.  காவிரிப் படுக்கையில் ஏற்கெனவே, 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க  ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா அனுமதி பெற்றுள்ளது.  இவர்கள், வேளாண் மண்டலத்தையே சிதைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் பொருளாதாரத்தையும் பிடுங்கியெறியும் விதத்தில் தொடர்ந்து அனுமதி கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,  திருவாரூரில் 59, தஞ்சாவூரில் 17, அரியலூரில் 3 ,கடலூரில் 7, ராமநாதபுரத்தில் 3 என்று மொத்தம் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து, வேளாண்மையை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டிவிட மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்துவிட்டதா என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்

தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், இப்போது இந்த அனுமதிகளை வழங்குவது ஏன்? மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெட்டிப் பாம்பாய் அடங்கி, அரவமற்றுக் கிடப்பது ஏன்? அடக்குமுறை சட்டங்களை ஏவி - விவசாயிகளின் உரிமைக்குரலை அடக்கிஒடுக்கி முறித்துப் போட்டுவிடலாம் என்பதில் மட்டுமே முதலமைச்சர் ஆர்வமும் கவனமும் செலுத்தி, விவசாயிகளின் நலனைப் புறக்கணிப்பது கடும்  கண்டத்திற்குரியது.

இது ஒருபுறமிருக்க, காவிரி மேலாண்மை ஆணையம், தபால் அலுவலகம் போல் செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி நீரும் திறந்துவிடப்படவில்லை. இப்போது, இரண்டாவதாக ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று போட்ட உத்தரவின்பேரில், 31.24 டி.எம்.சி நீரும் திறக்கப்படவில்லை. காவிரியில் நீர்வரத்து இருந்தால், ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுங்கள் என்று காவிரி மேலாண்மை ஆணையம் போட்டிருக்கும் இரண்டாவது உத்தரவு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயலாகும் .

`அடங்கிக் கிடக்கும் எடப்பாடி; பாலைவனமாகும் டெல்டா!' - கொந்தளித்த ஸ்டாலின்

காவிரியில் ஜூன், ஜூலைக்கான 40.43 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடக மற்றும் மத்திய அரசுகளிடம் வலியுறுத்தும் துணிச்சல் இல்லாது தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு. ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமித்து, காவிரியில் நீர் திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.  தமிழகத்தை  சகாரா பாலைவனமாக்கும் விதத்தில்,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாகக் கைவிட்டு, மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நாட்டின் நலனை வளர்த்தெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Vikatan