Published:Updated:

`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை

கலிலுல்லா.ச
`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை
`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை

'தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், எதிர்கால சந்ததியினர் தண்ணீரை குப்பியில்தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக் கூடும்' என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது..

`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை

கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, மழை நீர் கடலில் கலப்பதை தடுக்க, நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி, வி.பி.ஆர். மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,  `வருவாய்த் துறை ஆவணங்களில் ஏரிப் புறம்போக்கு என கூறப்படும் நிலங்களைப் பயன்படுத்தி, ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியும். நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ளச் சேதங்களுக்குக் காரணமாக அமைகிறது’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை

இந்த வழக்கில், பொதுபணித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பாக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில் 4161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன, அடையாறு நதி 6.18 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளதோடு, அடையாறு நதிக் கரை ரூ. 50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, சென்னையில் உள்ள ஏரிகளில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழு மூச்சாக செயல்பட்டுவருவதாகவும், தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களைப் பாதுகாக்க 100 கோடி ரூபாய் செலவில் குடி மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.. 

`தண்ணீரை கேப்சூலில்தான் பார்க்கவேண்டி வரும்!' - நீதிபதிகள் வேதனை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித் தடங்கள், கழிவு நீர்க் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கடமை தவறும் அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.. 

தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், ''நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், முன்னோர் ஆறு, குளம், ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் (capsule) தான் பார்க்கவேண்டிய அவலநிலை ஏற்படக் கூடும்'' என வேதனை தெரிவித்தனர்.  ''மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்கப் பயன்படுத்துவதை விடுத்து, மக்களுக்குப் பயன்படும் வகையில் மாநிலம் முழுதும் கூடுதல் அணைகள் கட்டுவதுகுறித்து சிந்திக்க வேண்டும். இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால், தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப்டவுன் நகருக்கு ஏற்பட்டதைப் போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை'' என கவலை தெரிவித்துள்ளனர். 

Vikatan