Published:Updated:

`மக்களிடம் அச்சம் இருக்கு!'- ஒருநபர் ஆணையத்திடம் துப்பாக்கிச்சூடு வீடியோ ஆதாரம்

இ.கார்த்திகேயன்
`மக்களிடம் அச்சம் இருக்கு!'- ஒருநபர் ஆணையத்திடம் துப்பாக்கிச்சூடு வீடியோ ஆதாரம்
`மக்களிடம் அச்சம் இருக்கு!'- ஒருநபர் ஆணையத்திடம் துப்பாக்கிச்சூடு வீடியோ ஆதாரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சுற்றுச்சூழல் போராளி முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் ஆணையத்திடம் ஒப்படைத்ததுடன் முகிலனைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.  

`மக்களிடம் அச்சம் இருக்கு!'- ஒருநபர் ஆணையத்திடம் துப்பாக்கிச்சூடு வீடியோ ஆதாரம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, திடீரென ஏற்பட்ட கலவரத்தால் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு.

கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இச்சம்பவம் தொடர்பாக பிரமாணம் அளித்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

`மக்களிடம் அச்சம் இருக்கு!'- ஒருநபர் ஆணையத்திடம் துப்பாக்கிச்சூடு வீடியோ ஆதாரம்

தற்போது இந்த ஆணையத்தின் 12-வது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 11 கட்ட விசாரணையில் மொத்தம் 329 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 12-வது கட்ட விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஒருநபர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கமளிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீது கடந்த ஆண்டு மே 22-ம் தேதி அரசு பயங்கரவாதத்தை ஏவி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆணையத்திடம் சாட்சியம் அளித்துள்ளோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி என்பதை நிரூபிக்கும் வகையில் சுற்றுச்சூழல் போராளி முகிலன் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். அந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த ஆதாரங்களை வெளியிட்ட அன்று மாலையே முகிலன் காணாமல் போனார். 100 நாள்களுக்கு மேல் ஆகியும் அவர் என்ன ஆனார் என்பது குறித்து தெரியவில்லை. முகிலன் குறித்த உண்மையை தமிழக அரசும் காவல்துறையும் திட்டமிட்டு மறைத்து வருகிறது. முகிலனைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஆணையத்திடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆலை தற்போது மூடப்பட்டிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் திறக்கப்படலாம் என்ற  அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. சட்டமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

Vikatan