Published:Updated:

`கமிஷன்தான் வாங்குறாங்க, ஒரு வசதியும் செஞ்சு தர்றதில்ல!' குமுறும் கல்வராயன் மலை மக்கள்

கண்ணதாசன் அ

இந்தச் சாலையை போட்டு எட்டு வருஷத்துக்கு மேல ஆகுது. இங்கு சாலை இருந்ததற்கு அடையாளமாக இப்போ ஜல்லிகள்தான் பெயர்ந்து கிடக்குது. குண்டும் குழியுமாக மாறிப்போச்சு.

`கமிஷன்தான் வாங்குறாங்க, ஒரு வசதியும் செஞ்சு தர்றதில்ல!' குமுறும் கல்வராயன் மலை மக்கள்
`கமிஷன்தான் வாங்குறாங்க, ஒரு வசதியும் செஞ்சு தர்றதில்ல!' குமுறும் கல்வராயன் மலை மக்கள்

சென்ற வருடம் பருவமழை என்பது பொய்த்துப்போனதால் தற்போது வெப்பமும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை அன்றாட தேவைகளுக்கே திண்டாட வைத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மலைவாழ் மக்களின் நிலை என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வதற்காக விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி என நான்கு மாவட்ட எல்லைகளை தன்னகத்தே கொண்ட கல்வராயன் மலைக்குப் பயணப்பட்டோம்.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு அங்கமாகத் திகழும் இந்த மலை, தன்மீது பல்வேறு கிராம மக்கள் வசிக்க இடமளித்துள்ளது.
கருநாக பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், நறுமணம் கமழும் மலர்களின் காட்சி, சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் ஓசை, மனதை வருடும் தென்றல் காற்று என நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறது மலையின் இயற்கை எழில். ஆனால், அம்மலையின் காட்சிக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்திருக்கிறது ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வாதாரம். குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகள், அதில் தட்டுத்தடுமாறி வாகனம் ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள், கீழே உள்ள குழிகளைப் பார்த்தவரே தலைநிமிராமல் சென்ற பள்ளிக்குழந்தைகள், ஏதோ தொலைவிலிருந்து தண்ணீர் சுமந்து வந்த பெண்மணிகள் என விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட `தாழ்வெல்லார்' கிராம மக்களின் அன்றாட வாழ்வு, பல்வேறு இன்னல்களுக்கிடையே நடந்துகொண்டிருந்தது. அந்தக் கிராம மக்களைச் சந்தித்துப் பேசினோம்.

`கமிஷன்தான் வாங்குறாங்க, ஒரு வசதியும் செஞ்சு தர்றதில்ல!' குமுறும் கல்வராயன் மலை மக்கள்

``எங்களுக்குத் தண்ணீர் பிரச்னையும், சாலைப் பிரச்னையும்தான் பெரும் பிரச்னையா இருக்கு. இங்கே 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். ஆனால், எங்களுக்குத் தண்ணீர் என்பதே சரியாக கிடைப்பதில்லை. அருகில் இருக்கிற ஒரு போர்வெல்ல அரை மணி நேரம் மெதுவாகத் தண்ணீர் வரும். அப்புறம் அதுவும் நின்றுவிடும். அதனால் வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதும் கஷ்டம்தான். சில நாளுக்கு முன்னாடி அந்தத் தண்ணீரும் கிடைக்காமல் போய்டுச்சு. அதனால ஆற்றில் பள்ளம் தோண்டி ஊத்து சுரக்கும் வரை காத்திருந்துதான் தண்ணீர் எடுத்துவந்தோம். அந்த ஆற்றுக்குப் போகணும்னா இந்தக் கரடுமுரடான பாதை வழியாக ஒரு கிலோமீட்டருக்கு நடக்க வேண்டியதாயிருக்கும். எங்க ஊர்ல அரசு ஊழியர் தண்ணீர் விநியோகம் செய்றதுக்கு இருந்தும் பயனில்லை. சர்க்கார் கிணத்தில் இருக்கிற தண்ணீரைக்கூட டேங்க்கில் நிரப்ப மாட்டாரு. நாங்கள் கேட்டால், ’அந்த சர்க்கார் கிணறு என் காட்டுல (நிலத்தில்) இருக்கு’ எனத் திமிரா பேசுறாரு.

இந்தச் சாலையைப் போட்டு எட்டு வருஷத்துக்கு மேல ஆகுது. இங்கு சாலை இருந்ததற்கு அடையாளமாக இப்போ ஜல்லிகள்தான் பெயர்ந்து கிடக்குது. குண்டும் குழியுமாக மாறிப்போச்சு. அண்மையில்கூட மேல் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் விழுந்து பயங்கர அடி. சில மாதத்துக்கு முன்னாடி ஸ்கூல் வேன் சாய்ந்துடுச்சி. நல்லவேளை பிள்ளைகள் அதில் இல்லை. சாலை சரியில்லாததால், இந்த வழியாக வந்துகொண்டிருந்த சேலம் பஸ்கூட வருவதில்லை. அவசரத்துக்கு ஆஸ்பத்திரி போகணும் என்றாலும் 3 மைல் தூரம் நடந்து போய்தான் பஸ் ஏற வேண்டியிருக்கு. இன்னும் மேல் கிராமத்தைச் சேர்ந்தவங்க, மேல்வெல்லாறு கிராமத்தைச் சேர்ந்தவுக எல்லாம் ஏழு கிலோ மீட்டருக்கு கீழே நடந்துவர வேண்டியிருக்கு. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) இதைப்பற்றி முறையிட்டால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. சாலையைப் போட்டது மாதிரி அரசு பலகை வைத்ததாக சொல்லுறாங்க. இதுவரை சாலை எதுவும் இங்கு போடல. எங்க நிலை தனித்துவிடப்பட்ட தீவு போலதான் இருக்கு. இதோடு எங்கள் நிலைமை முடிந்துவிடவில்லை.

குடிசை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு உதவி மூலம் வீடு கட்டும் திட்டங்களும் இருக்கு. இதில் எந்த அரசு திட்டத்தின்கீழ் குடிசை வீட்டில் இருப்பவர்கள் வீடுகட்டணும் என்றாலும் கமிஷன் வாங்கிக்கொண்டுதான் வீட்டை அலாட் பண்ணுறாங்க. ஒரு வீட்டை கட்டணும்னா 20,000 வரை கமிஷன் வாங்கிக்கிறாங்க. அதுமட்டும் இல்லாம ஒவ்வொரு பில்லுக்கும் காசு பிடுங்குகிறார்கள். 2.10 லட்சரூபாய்  மதிப்பு வீடு என்றால் 1.7 லட்சம் ரூபாய் வரைதான் பயனாளிக்கு வந்து சேருது. அதேபோல ஏரி வேலை (ஊரக வேலை)யை இரண்டு வருஷத்துக்கு முன்னாடி செய்தோம். இப்போ அந்த வேலை இருக்குதா இல்லையா என்றுகூட தெரியலை. இரண்டு வருஷம் ஆச்சு வேலை நடந்து. அப்பப்போ சில பேரிடம் அட்டையை மட்டும் வாங்கிட்டு போவாங்க. இதுபற்றி எல்லாம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை” என்றனர் கவலையோடு.

`கமிஷன்தான் வாங்குறாங்க, ஒரு வசதியும் செஞ்சு தர்றதில்ல!' குமுறும் கல்வராயன் மலை மக்கள்

இதுதொடர்பாக அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்புகொண்டு மக்கள் கூறிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம்.
முதலில் நேரில் சந்தித்துப் பேசலாம் எனத் தயக்கத்தோடு பேசுவதைத் தவிர்த்த அவர், பின்னர் சிறிதுநேரத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். ``இன்னும் சாலைப்பணி தொடங்கவில்லை. வேலை துவங்குவதற்கு முன்பாக துவக்கப் பணிக்கான பலகையை மட்டும் வைத்துள்ளார்கள். அது வனப்பகுதி என்பதால் விழுப்புரம் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற கோப்புகளை அனுப்பியுள்ளோம். அங்கிருந்து அனுமதி வந்தபின்தான் வேலை துவங்குவார்கள். சாலையை அமைத்துவிட்டதைப்போல் நாங்கள் பலகை வைத்ததாக மக்கள் கூறுவது தவறு. டெண்டர் முடிந்த பின்னர் சாலை அமைக்கப் போவதற்கான பலகையைதான் வைத்துள்ளார்கள்” என்றார்.

``அரசு வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் கமிஷன் வாங்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்களே?" எனக் கேட்டதற்கு ``எங்களுக்கும், அலுவலகத்துக்கும் இதில் சம்பந்தம் இல்லை” என்றவாறு முடித்துக்கொண்டார்.

Vikatan