Published:Updated:

`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி!

கே.குணசீலன்
`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி!
`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி!

தனியார் பேருந்து ஒன்றில் ஏறிய பயணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி பிரச்னை செய்த  ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்துசெய்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். 

`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி!

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, கடந்த 15-ம் தேதி,  திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் பேருந்து ஒன்று கும்பகோணத்திலிருந்து திருச்சிக்கு புறப்படுவதற்குத் தயாராக நின்றது. சென்னையிலிருந்து வந்த பயணி ஒருவர், தனது சொந்த ஊரான பண்டாராவாடை செல்வதற்காக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர்,  பேருந்து நிலையத்தில் நின்ற தனியார் பேருந்தில் ஏறியதோடு, கடைசி இருக்கையில் அமர்ந்தார். அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் எந்த ஊர் போக வேண்டும் எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பயணி, பண்டாராவாடை செல்ல வேண்டும் எனச் சொன்னதும், பேருந்து இடையில் எங்கும் நிற்காது, நேரா தஞ்சாவூர் சென்றுதான் நிற்கும். எனவே, இறங்கிக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பயணி, பேருந்து இருக்கைகள் காலியாகத்தானே இருக்கின்றன. ஏன் என்னை இறங்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார். ``உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு'' என்றதற்கு, ``சரியான காரணத்தைச் சொல்லவில்லை என்றால் நான் இறங்க மாட்டேன்'' என்று சொல்லி, நடந்த சம்பவங்களைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் அந்தப் பயணி. அதற்கு ஓட்டுநரும், நடத்துநரும் நல்லா எடுத்துக்க எனக் கூறியதோடு, நடத்துநர் அவரைத் தாக்க முயன்று தகாத முறையிலும் பேசியுள்ளனர்.

பின்னர், தான் எடுத்த வீடியோவை பயணிகளிடம் காட்டி, 'எப்படி நடந்துகொள்கின்றனர் பாருங்கள்' எனச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு, அந்த வீடியோ வைரலாகப் பரவ, பலரும் ஓட்டுநர் நடத்துநருக்கு எதிராகப் பேசினர். சமூக ஆர்வலர்கள் சார்பில் கலெக்டர் அண்ணாதுரையிடமும் மனு கொடுக்கப்பட்டது. அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், இதுகுறித்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், திருச்சியைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஷியாம்சுந்தர், கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கோகுல்பிரசாத், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை செய்தார். இதில் இருவரும், நடந்த சம்பவத்தில் எங்கள் மேல் தவறுள்ளது என ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும், பொது மக்களிடம் தகாத வார்த்தைகள் பேசியதற்காகவும், இவர்களின் நடத்தை சரியில்லாததாலும், இருவரின் உரிமத்தை வரும் 6 மாத காலத்திற்கு தகுதிநீக்கம் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உத்தரவிட்டார். பல பகுதிகளில் பயணிகளிடம் இது போன்றுதான் பெரும்பாலான ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நடந்துகொள்கின்றனர் எனவும் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Vikatan