Published:Updated:

அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்

துரை.வேம்பையன்
அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்
அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்

85 வயது மூதாட்டி ஒருவர் தன் மகனுடன் பேருந்தில் பயணிக்கும்போது இரண்டு ஓய்வூதிய புத்தகங்கள், 5,000 பணம் அடங்கிய பேக்கை பறிகொடுக்க, அதைத் திருடனிடமிருந்து மீட்டுக்கொடுத்து, மூதாட்டிக்கு உதவியிருக்கிறார், தனியார் பேருந்து நடத்துநரான இளைஞர் ஒருவர். அந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்

 கரூர் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அருணாசலம், அவரின் மனைவி திரிபுரசுந்தரி ஆசிரியை. இதில் அருணாசலம் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். பெங்களூருவில் செட்டிலாகிவிட்ட மகன் பிச்சுமணியோடு வசித்துவருகிறார் திரிபுரசுந்தரி. அதோடு, திரிபுரசுந்தரி தன்னுடைய ஓய்வூதியம் மற்றும் கணவருடைய ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்பு ஓய்வூதியத்தை எடுப்பதற்காக கரூருக்கு மகன் பிச்சுமணியோடு வருகைதந்தார் திரிபுரசுந்தரி.

ஓய்வூதிய புத்தங்கங்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, மகனோடு பயணித்திருக்கிறார். கரூர் பேருந்து நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் அரசுப் பேருந்தில் செல்லும்போது, அவருடைய பையை யாரே எடுத்துக்கொண்டார்கள். இதனால் திரிபுரசுந்தரி பதறிப்போனார். பணம் போனால் பரவாயில்லை, ஓய்வூதியம் வழங்கக்கூடிய புத்தகம் இரண்டும் கிடைத்தால் போதும் என்று அல்லாடியிருக்கிறார். உடனே, பிச்சுமணி கரூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 

ஆனால், அங்கிருந்தவர்கள், 'அது தாந்தோணிமலை காவல்நிலைய லிமிட். அங்கே போய் புகார் பண்ணுங்க' என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். தன் உறவினர் வீட்டில் தாயை விட்டுவிட்டு, அரக்கப்பரக்க தாந்தோணிமலை காவல்நிலையத்துக்கு ஓடி இருக்கிறார் பிச்சுமணி. ஆனால், அங்கிருந்த எஸ்.ஐ, "நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது, நீங்கள் ஓய்வூதியம் புத்தகம், பணம் வைத்திருந்ததுக்கு என்ன அத்தாட்சி. பணத்தை நீயே எடுத்து வைத்துக்கொண்டு நாடகமாடக் கூடாது?" என்று எடக்குமடக்காகக் கேட்க, நொந்துபோயிருக்கிறார். 'நானே பார்த்துக்கொள்கிறேன்' என்றபடி வந்திருக்கிறார்.

நண்பர்கள் உதவியுடன் மேற்படி ஓய்வூதியம் பெறும் புத்தகங்களையும், 5,000 பணத்தையும் பறிகொடுத்த தகவலை சமூகவலைதளங்களில் தொடர்பு எண்ணோடு பகிர்ந்திருக்கிறார். மறுநாளே குணசேகரன் என்ற தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் இளைஞர் ஒருவர், 'என் பேருந்தில் உங்க பையைத் திருடன் ஒருத்தன் போட்டுட்டு ஓடிட்டான். யாருதா இருக்கும்னு குழம்பினேன். அப்பதான், வாட்ஸப்புல தகவல் வந்துச்சு. உங்களுக்குப் போன் பண்றேன்' என்று சொல்ல, பெங்களூருவுக்குத் தாயை அனுப்பிவிட்டு, பாதியிலேயே கரூருக்குத் திரும்பி, பையைப் பெற்றுக்கொண்டார்.


 

அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்

இதுகுறித்து, பிச்சுமணியிடம் பேசினோம். "குணசேகரன் போன் செய்ததும் குழம்பிபோயிட்டேன். நாங்க பயணிச்சது அரசுப் பேருந்தில். ஆனால், குணசேகரன் தனியார் பேருந்தில் பை கிடந்ததா சொன்னதால்தான் அந்தக் குழப்பம். ஆனா, குணசேகரன் விவரிக்கவும்தான், உண்மை புரிஞ்சது. அரசுப் பேருந்தில் பயணிச்சு எங்ககிட்ட அந்தப் பையை அடிச்ச திருடன், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இறங்கி இருக்கிறான். கையோடு அங்கே நின்றிருந்த தனியார் பேருந்தில் ஏறி கரூர் பேருந்துநிலையம் வர பார்த்திருக்கிறான். கடைசி சீட்டுல உட்கார்ந்துகிட்டு, பையில் இருந்த 5,000 ரூபாய் பணத்தை எண்ணிகிட்டு இருந்திருக்கிறான். அவன் தோற்றத்தைப் பார்த்து சந்தேகப்பட்ட குணசேகரன் அந்த நபரை நெருங்கி இருக்கிறார். இதனால், அந்தத் திருட்டுப் பேர்வழி பணத்தை பையில் அமுக்கிட்டு, பையை சீட்டுல கடாசிவிட்டு, பேருந்தைவிட்டு இறங்கி ஓடியிருக்கிறான்.

அவனைப் பிடிக்க குணசேகரனும் ஓடியிருக்கிறார். ஆனா, அவன் சிட்டா பறந்துட்டானாம். பணம் போனால் என்ன? எங்கம்மா, அப்பாவோட ஓய்வூதியம் பெறும் புத்தகங்களை விட்டுவிட்டு ஓடினானே, அதுவரை சந்தோஷம். எங்காச்சும் குப்பையில் தூக்கிப்போடாம, பஸ்ல கொண்டு வந்துபோட்டவரைக்கும் சரிதான். குணசேகரன், 'எனக்கென்ன'னு இல்லாம, பையை எடுத்து வச்சுக்கிட்டு, சமூகவலைதளங்களில் நம்பரை பார்த்து எனக்குப் போன் பண்ணினார். சின்ன வயதில் பொறுப்பா இருந்த அவரை மனதாரப் பாராட்டினேன். அவருக்கும் டிரைவருக்கும் தலைக்கு 5,00 ரூபாய் கொடுத்தேன். ஆனா, வேண்டாம்னு மறுத்துட்டார். இந்த காலத்திலும் இப்படி ஒரு இளைஞரானு நெகிழ்ந்துபோயிட்டோம். என் அம்மாவும் பெங்களூருவில் இருந்து குணசேகரனுக்குப் போன் பண்ணி, நா தழுதழுக்க நன்றி சொன்னார்" என்றார்.


 
 

அரசுப் பேருந்தில் பையைப் பறிகொடுத்த மூதாட்டி! - திருடனிடமிருந்து மீட்ட தனியார் பேருந்து நடத்துநர்

நடத்துநர் குணசேகரிடமே பேசினோம். "இது சாதாரண விஷயம். அந்தத் திருடனை பிடிக்க முடியவில்லையேனு வருத்தமா இருக்கு. இருந்தாலும், வயசான ஒருவரிடம் பணத்தைத் திருட எப்படிதான் மனசு வருதோ?" என்று `உச்' கொட்டினார். 

Vikatan