Published:Updated:

கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பா?

த.ராம்
கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பா?
கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பா?

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி கொச்சியில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலில் விஷ சாராயத்தில் கலக்கக்கூடிய மெத்தனால் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உடல் வேதியல் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. கலாபவன் மணியை யாராவது திட்டமிட்டு  விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று சாலக்குடி போலீஸாரும் குற்றப்பிரிவு போலீஸாரும் விசாரணையைத் தொடங்கினார்கள். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றக் கோரி கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக கலாபவன் மணி வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக மலையாள இயக்குநர் பைஜூ கொட்டாரக்கரா கூறியிருந்தார். இந்தச் சம்பவம் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று அவர் கொச்சி சி.பி.ஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் ஒன்றை அளித்தார். 

கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணனும், திலீப்புக்கு கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். கலாபவன் மணி பல இடங்களில் நிலங்களை வாங்கி வைத்துள்ளார். திலீப்புடன் சேர்ந்தும் நிலங்களை வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக நடிகர் திலீப்பை விசாரிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை. இப்போது இயக்குநர் பைஜூ புகார் அளித்ததைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனும் திலீப்புக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ-யும், கலாபவன் மணி மரணத்தில, நடிகர் திலீப்புக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை தொடங்கி உள்ளது. மொத்தத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்னைகள்தான் திலீப் வழக்கின் குற்றச் சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என கேரள மக்கள் சொல்கிறார்கள்.