Published:Updated:

`ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஆர்.டி.ஒ.வை கொல்ல முயற்சி!” - சாமியார் மீது போலீஸில் புகார்

ஜி.சதாசிவம்
`ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஆர்.டி.ஒ.வை கொல்ல முயற்சி!” - சாமியார் மீது போலீஸில் புகார்
`ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஆர்.டி.ஒ.வை கொல்ல முயற்சி!” - சாமியார் மீது போலீஸில் புகார்

ஆக்கிரமிப்பு அகற்ற வந்த இடத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்ணெய் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குச் சாலையில் கருப்புசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பின்புறம் நீர் வழிப்பாதையில் கோயில் சாமியார் ஆறுமுகசாமி ஆக்கிரமித்து 3 மாடி கட்டடம் கட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்புக் கட்டடத்தை ஒவ்வொரு முறை வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்த வரும்போது நீதிமன்றத் தடை மற்றும் பல காரணங்களால் ஆக்கிரமிப்பு அகற்றுவது
தள்ளிப்போனது.

இந்த நிலையில், நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், ஒரு சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர். அப்பொழுது சிதம்பரம் கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்ணெய் பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும்,
பதற்றமும் ஏற்பட்டது.

இதையடுத்து கோட்டாட்சியர் ராஜேந்திரன் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை கொல்ல முயன்றதாகப் புகார் அளித்துள்ளார். இது குறித்து சேத்தியாத்தோப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மதியம் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு, ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் 3 மாடிக் கட்டட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.