Published:Updated:

கமல் வருகை நெடுவாசல் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்..! கிராம மக்கள் நம்பிக்கை

பாலஜோதி.ரா
கமல் வருகை நெடுவாசல் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்..! கிராம மக்கள் நம்பிக்கை
கமல் வருகை நெடுவாசல் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்..! கிராம மக்கள் நம்பிக்கை

'நாங்கள் போராட்டம் நடத்தியபோதே கமல் எங்கள் ஊருக்கு வந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு கட்சித் தலைவராக எங்கள் ஊருக்கு வருவதில் எங்களுக்கு சந்தோஷம்தான் என்கின்றனர், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புக் குழுவினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்துக்கு, வரும் ஏப்ரல் 4-ம் தேதி சென்று, அந்தக் கிராம மக்களை சந்திக்க இருப்பதாக,  கடந்த 24-ம் தேதி கமல் அறிவித்தார். 'கமலின் வருகை ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்கு இன்னும் வலு சேர்க்கும்' என்று அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

கடந்த 21-ம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த கமல், அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் முதல் பொது கூட்டத்தை நடத்தி, புதிய கொடி, கட்சியின் பெயர் ஆகியவற்றை அறிவித்தார். மறுநாள், பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், இரண்டாவது பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறும் என்று கூறினார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் முதல் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, தனது முதல் அரசியல் பயணம், மதுரை பொதுக்கூட்டம், மக்களுடைய வரவேற்பு, எதிர்பார்ப்பு போன்றவைகுறித்துப் பேசிய கமல், இனி செய்ய வேண்டிய பணிகள்குறித்தும் ஆலோசனைசெய்தார்.

ஏப்ரல் 4-ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் நெடுவாசல் சென்று, அந்த மக்களை கமல் சந்திக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் பேசினோம்.

'மரம்' இயக்கத்தின் அமைப்பாளர் தங்க.கண்ணன், "போன வருஷம் நாங்க போராட்டம் நடத்தியபோதே கமல் நெடுவாசலுக்கு வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் இளைஞர்களும் இளம்பெண்களும் அன்றைக்கு நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு, ஹைட்ரோ கார்பன் பாதிப்புகள்குறித்த புரிதல் இருந்தது. அவர்கள்தான் ஹைட்ரோ கார்பனால் ஏற்படும் பாதிப்புக்கள்பற்றி கிராம மக்களுக்கு எளிதாகப் புரியும்படி பேசினார்கள். எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல், தன்னுணர்வுடன் வந்த அந்த அசலூர் பசங்க எங்களுக்கு ஆதரவாக நெடுவாசலுக்கு வந்ததுபோல, கமலும் அன்றைக்கு வந்திருக்கலாம். இப்போது கட்சியை ஆரம்பித்து, ஒரு கட்சித் தலைவராக வருவதுகுறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான். அவரின் வருகை எங்கள் போராட்ட இயக்கத்துக்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறோம்" என்றார். 

அடுத்து, இயற்கை விவசாயியான 'பசுமை' ராமநாதனிடம் பேசினோம். ''நெடுவாசல் பிரச்னைக்காக கமல் எங்கள்  ஊருக்கு வருவதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்களுடைய முடிவில்லாத இந்தப் போராட்டத்துக்கு அவரின் வருகை வலு சேர்க்கும் என்று நம்புகிறோம். அவருடைய வருகையை  நெடுவாசலும் அதனைச் சுற்றியுள்ள மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்றார்.