Published:Updated:

`ஜெயமோகன்னு தெரியாமல் சென்றுவிட்டேன்!' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்

சிந்து ஆர்
`ஜெயமோகன்னு தெரியாமல் சென்றுவிட்டேன்!' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்
`ஜெயமோகன்னு தெரியாமல் சென்றுவிட்டேன்!' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் தி.மு.க நிர்வாகியாக உள்ளார். அவருக்கு ஆதரவாக தி.மு.க நகரச் செயலாளர் காவல் நிலையத்துக்குச் சென்று பேசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

`ஜெயமோகன்னு தெரியாமல் சென்றுவிட்டேன்!' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்

எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் சாரதா நகரில் வசித்து வருகிறார். இவரது வீடு அருகே உள்ள மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவது வழக்கம். நேற்று இரவு அந்த மளிகைக் கடையில் தோசைமாவு பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சென்று தோசை சுட்டு சாப்பிட்டபோது மிகவும் புளிப்புச் சுவையுடன் இருந்துள்ளது. அதன்பிறகுதான் மாவு கெட்டுப்போயுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த மாவு பாக்கெட்டில் ஒரு நாளைக்கு முந்தைய தேதி போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் ஜெயமோகன். எனவே, அந்த மாவு பாக்கெட்டை அப்படியே எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்குச் சென்றார். கடையில் இருந்த கீதாவிடம் மாவு கெட்டுப்போனது குறித்துக் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நின்ற கீதாவின் கணவர் செல்வம் கோபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான பின்னரும் எதையும் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்று அமைதியாக இருந்துள்ளார் ஜெயமோகன். ஆனால், செல்வம் விடாமல் ஜெயமோகன் வீட்டுக்குச் சென்று கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார். அப்போதுதான் ஜெயமோகனின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு தாக்குதல் நடந்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று இரவே கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

`ஜெயமோகன்னு தெரியாமல் சென்றுவிட்டேன்!' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்


செல்வம் தி.மு.க-வின் 17-வது வட்ட பிரதிநிதியாக உள்ளார். செல்வத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனிடம் சென்று பேசியுள்ளார். ``இவருக்காக நீங்கள் பேச வரலாமா" என ஜெயமோகன் கூறியதைத் தொடர்ந்து மகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தி.மு.க நகரச் செயலாளர் மகேஷிடம் கேட்டோம்,  ``செல்வம் தி.மு.க.காரர்தான். ஆனால், தாக்கப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் என்பது தெரியாமல் அங்கு சென்றுவிட்டேன். ஜெயமோகன் எனத் தெரிய வந்ததும் உடடியாக நான் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்" என்றார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ``செல்வம் நேற்று குடிபோதையில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில்தான் எழுத்தாளர் மீது தாக்குதல் நடத்தினார். செல்வம் தனது வாக்குமூலத்தில், `ஜெயமோகனை நான் சார் என்றுதான் அழைப்பேன். அவரின் மனைவியை அம்மா என அழைப்பேன். மாவு பாக்கெட்டை என் மனைவி மீது வீசுவதற்காகச் சென்றதால் நான் தாக்கினேன்' என கூறிக்கொண்டே இருந்தார். செல்வம் மீது கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல், கெட்டவார்த்தையால் திட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளோம்" என்றனர். மளிகைக் கடைக்காரருக்கு ஆதரவாக தி.மு.க பிரமுகர் சென்றதைத்தான் ஜெயமோகன் தனது வலைதளத்தில் அரசியல் தலையீடு எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஜெயமோகன் கொடுத்த புகாரின்பேரில் மளிகைக்கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செல்வத்தின் மனைவி கீதா ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் இன்று காலை அட்மிட் ஆகியுள்ளார். இதுபற்றி கீதாவிடம் பேசினோம், ``எங்கள் மளிகைக் கடை பக்கத்திலேயே ஆவின் பாலகம் மற்றும் தோசை மாவு விற்பனை செய்துவருகிறோம். நேற்று அந்த கடையில் இருந்து எடுத்து மளிகைக் கடையில் மாவை வைத்திருந்தேன். ஜெயமோகனை யார் என்றே எனக்கு தெரியாது. அவர் என்னிடம் மாவு பாக்கெட் கேட்டார். 13-ம் தேதி உள்ள மாவு பாக்கெட்தான் இருக்கிறது என்றேன். 14-ம் தேதியிட்ட பாக்கெட் இல்லை என்றேன். தெரிந்துதான் வாங்கி சென்றார். வாங்கிச்சென்ற அரை மணி நேரத்தில் கோபமாக வந்து என் தலைமுடியை பிடித்தார். அதனால்தான் அங்கு நின்றிருந்த எனது கணவர் செல்வம் அவரை தாக்கினார். என்னிடம் போலீஸ் வாக்குமூலம் வாங்கியது, ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

Vikatan