Published:Updated:

`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை

பி.ஆண்டனிராஜ்
`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை
`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அணு மின்நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். கூடங்குளம் அணு மின்நிலைய அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் அவர் இதைத் தெரிவித்தார்.

`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிகளை இன்று பார்வையிட்டார். கூடங்குளம் வளாக  இயக்குநர் சஞ்சய்குமார், திட்ட இயக்குநர் சுரேஷ்குமார் பிள்ளை  மற்றும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த வீடியோ படங்கள் அவருக்குக் காட்டப்பட்டன. கூடங்குளம் அணு உலைகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருவது குறித்து அதிகாரிகள் விளக்கமாகத் தெரிவித்தனர். பின்னர், அணுக்கழிவு சேமிப்பு குறித்தும் அதனால் ஆபத்து உள்ளதா என்பது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் சேமிக்கப்படுவதால் அபாயகரமான சூழல் ஏற்படும் என்ற கருத்து பரவி வருகிறது. அத்துடன், கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும்  உள்ள அணு உலைகளில் இருந்து சேகரிக்கப்படும் அணுக்கழிவும் இங்கே சேமிக்கப்பட இருப்பதாகவும் தவறான தகவல் பரவியிருக்கிறது.


அணுக்கழிவு தொடர்பான தவறான தகவல்களின் காரணமாகவே பொதுமக்களிடம் அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது.  இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதை அணுமின் நிலைய நிர்வாகம்,  அரசுத்தரப்பு, அரசியல்வாதிகள் ஆகியோர் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஆக்கபூர்வமான திட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் அரசியல் கட்சியினர் எதிர்க்கருத்தைப் பதிவு செய்து ஆர்ப்பாட்டம், போராட்டம்  நடத்தி மக்களைத் திசைதிருப்புகிறார்கள். அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடுவதுதான் அரசியல் கட்சியினரின் கவனமாக இருக்கிறது. 

`அணுக்கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' - கூடங்குளம் ஆய்வுக்குப் பின் தமிழிசை

அதனால் தான் கூடங்குளம் அணு உலையின் அனைத்துப் பகுதிகளையும் இன்று பார்வையிட்டு அணுக்கழிவு குறித்து அதிகாரிகளிடம் நீண்ட விவாதத்தில் கலந்துகொண்டேன். கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அது அணுக்கழிவு என்பதுகூட கிடையாது. எரிபொருளின் மிச்சம் என்றே அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒரு அணு உலையில் இருந்து ஏழு ஆண்டுகள் கழித்துதான் அணுக்கழிவு அகற்றப்படும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். கூடங்குளத்தைப் பொறுத்தவரை அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் இப்போதே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை அதிகாரிகள் மூலம் தெரிந்துகொண்டேன். 

அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக இங்கு வைப்பது தொடர்பாக ஜூலை10-ம் தேதி கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதில் மக்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம். அன்றையதினம் அணுக்கழிவு சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஆனால், அதற்குள்ளாக அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறார்கள். அதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்.

நமக்கும் நாட்டுக்கும் மின்சாரம் என்பது மிகவும் அவசியம். மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் மட்டுமே தொழில் வாய்ப்புகள் பெருகும். எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்குத்தான் ஆதரவு. ஆனாலும் இந்தப் பிரச்னையில் மக்கள் திசை திருப்பப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். 

அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு முன்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக மக்களின் கருத்து கேட்கப்பட உள்ளது. அணு உலை என்றதும் ஃபுகுஷிமா விபத்தைத்தான் எல்லோரும் கூறுகிறார்கள். அங்குள்ள அணு உலைகளை விடவும் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. அணு மின் நிலைய பாதுகாப்பு அம்சங்களில் உலக நாடுகளை விடவும் நாம் பல மடங்கு முன்னேறியுள்ளோம்" என்று தெரிவித்தார்.