Published:Updated:

`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

லோகேஸ்வரன்.கோ
`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு
`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் கொள்முதலில் 300 கோடி ரூபாய்க்குத் தவறு நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் இருக்கிறது. குடிக்க ஒரு வாய் தண்ணீர் கொடுப்பதற்கு இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. எந்த திட்டமிடலும் இல்லாத காரணத்தால் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த 100 ஆண்டுக்காலத்தில் இதைப்போன்று குடிநீர் பஞ்சம் வந்ததில்லை. அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் கிடையாது. விஞ்ஞானம் வளரவில்லை. இந்தக் காலத்தில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. விஞ்ஞானமும் வளர்ந்திருக்கிறது. இன்னமும் கற்காலத்தில் இருப்பதைப் போன்றே லாரிகள் மூலமாகத் தண்ணீர் கொடுக்கிறார்கள். லாரிகள் மூலமாகத் தண்ணீர் கொடுப்பதால் ஆட்சியாளர்களுக்குப் பயன் இருக்கலாம். மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, தமிழக அரசாங்கம் குடிநீருக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறது. அதனால், எவ்வளவு குடிநீர் வழங்கமுடிகிறது என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை பொய்க்கும். தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று இந்திய வானிலை மையம் சொன்னது. முன்னெச்சரிக்கையாகத் தமிழக அரசு, ஏரி, குளங்களை உடனடியாக ஆழப்படுத்தியிருக்க வேண்டும். அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் கூடுதல் தண்ணீர் பெற பேசியிருக்க வேண்டும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்ற பிரச்னையில் அவர்கள் மூழ்கிவிட்டார்கள். இவ்வளவு பொறுப்பற்ற அரசாங்கத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவருவதாக சொன்னார்கள். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் வர 10 நாளா ஆகும். இன்னும் தண்ணீரை கொண்டுவரவில்லை. பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினி திட்டத்தைப் பற்றி தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மிகவும் மதிப்பு குறைவான மடிக்கணினிகளை வாங்கி உயர்தர மடிக்கணினியைப் போல் தர முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் முதலமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும். 

`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

கருணாநிதி, ஆட்சியில் இருந்தபோது தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தார். அந்தத் தொலைக்காட்சி பெட்டிகளைக் கொள்முதல் செய்யவும், பொதுமக்களுக்கு வழங்கவும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டிதான் தொலைக்காட்சிப் பெட்டியின் தரத்தைப் பார்த்து விலைபேசியது. பணத்தைக் கொடுத்து வாங்கியது. அதில், சந்தேகப்படும்படியான எந்தவொரு செய்தியும் வரவில்லை. இதை முதலமைச்சர் மனதில் வைத்துக்கொண்டு மடிக்கணினிகள் வாங்கும் திட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒன்றுகூட்டி ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அதன்மூலமாக மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். ஏறக்குறைய மடிக்கணினி கொள்முதலில் மட்டும் 300 கோடி ரூபாய்க்குத் தவறுகள் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு, முதலமைச்சர் இடம் கொடுக்கக் கூடாது. பொதுப்பணத்தை விரயமாக்கக் கூடாது. 

`லேப்டாப் கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்?’ - முதல்வர் மீது கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

இன்றைய சூழலில் ராகுல் காந்தியைத் தவிர்த்து இன்னொரு தலைவரால் இந்தக் கட்சியை இயக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தொண்டர்களால் யார் விரும்பப்படுகிறார்களோ, அவர்கள்தான் தலைவராக இருக்கமுடியும். ஒரு தலைமையை வலுக்கட்டாயமாகத் திணித்தால் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை. அந்தத் தவற்றை காங்கிரஸ் கட்சி செய்யாது. ராஜீவ் கொலைகாரர்களை விடுதலை செய்வது குறித்து நீதிமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். கட்சிகள் முடிவுசெய்யக் கூடாது. ஒரு சில கட்சிகளும், அமைப்புகளும் ஏழு பேரை மட்டும் விடுதலை செய்யக் கோருவதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழர்கள் எவ்வளவோ பேர் 25 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தானே. ராஜீவ் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியை நாங்கள் சம்பந்தப்படுத்தியதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், சோனியா காந்தியே நளினியை மன்னித்தே விட்டார். சட்டம் இருக்கிறது. நீதிமன்றம் ஏழு பேரையும் விடுதலை செய்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’’ என்றார்.

Vikatan