Published:Updated:

`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!

சிந்து ஆர்
`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!
`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோகனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு கட்சித் தலைமைக்கு புகார் அளித்துள்ளது. இந்தப் பிரச்னையை சமாளிக்க தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தனது ஆதரவானவர்களை செயலாளர்களாக்கி கோலோச்சி வருகிறார் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம். இந்த நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஏ.அசோகனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கடந்த மாதம் சில நிர்வாகி குழுவாக சென்னை சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதில் அசோகனை நீக்கிவிட்டு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சி.என்.ராஜதுரையை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை அறிந்த எஸ்.ஏ.அசோகன் தனது முகநூல் பக்கத்தில் 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிறான்' என்று கிண்டலடித்திருந்தார். இதனால் அ.தி.மு.க-வின் உள்கட்சி பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது.

`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!


இந்த நிலையில் நேற்று தோவாளை ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் தலைமையில் சிலர் சென்னை சென்று துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.அசோகனுக்கு எதிராக மனு அளித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டச் செயலாளருக்கு எதிராக மனுக்கொடுத்த ராஜாக்கமங்கலம் ஒன்றிய மகளிரணி செயலாளர் பூமதியிடம் பேசினோம், "மாவட்டச் செயலாள அசோகன் கட்சியினருக்கு எந்த உதவியும் செய்வதில்லை. நான் உள்ளூரில் தி.மு.க-வினரை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். அரசியல் ரீதியாக எனக்கு பிரச்னை ஏற்பட்டபோது மாவட்டச் செயலாளர் அசோகன் எனக்கு உதவி செய்யவில்லை. மகளிர் அணி கூட்டத்தில் எங்களை மதிக்காமல் செயல்படுகிறார். அ.தி.மு.க நிர்வாகியாகச் செயல்படாமல் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக மட்டுமே செயல்படுகிறார்.

முக்கிய நிகழ்ச்சிகளில் பன்னீர்செல்வம் படத்தை பெரிதாகவும் முதல்வர் படத்தை சிறியதாகவும் போட்டு விளம்பரங்கள் செய்து வருகிறார். பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருக்கு மட்டும்தான் பதவிகள் கொடுக்கிறார். அனைவரும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். எனவே, அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் சி.என்.ராஜதுரை போன்றவர்கள் மாவட்டச் செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் தன்னிச்சையாக மனுக்கொடுத்துள்ளோம்" என்றார். 

`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!


இந்தப் புகார்கள் குறித்து மாவட்டச் செயலாளர் அசோகனிடம் பேசினோம், ``சி.என்.ராஜதுரை கட்சியினரை தூண்டிவிட்டு தலைமைக்கு மனுக்கொடுக்க வைக்கிறார். அவர் அ.தி.மு.க-விலிருந்து வெளியே சென்றுவிட்டு ஏழு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் கட்சியில் வந்தார். அதற்குள் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆசைப்படுகிறார். நான் மாவட்டச் செயலாளர் ஆன பிறகு, பல புதிய நிர்வாகிகளை நியமித்தேன். அதில் பதவி கிடைக்காத பழைய நிர்வாகிகள் பலர் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். கட்சியில் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. சென்னையில் புகார் கொடுத்தவர்கள் யாருமே முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் அல்ல. எனவே, இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.

`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்!' - சமாதானம் செய்யும் தளவாய் சுந்தரம்!

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராஜதுரையிடம் பேசினோம், "அரசியலைப் பொறுத்தமட்டில் ஏழையாக இருப்பவர்கள் தங்களுக்கு வருமானத்துக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பார்கள். வசதியாக இருப்பவர்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க-வில் இந்த இரண்டும் கிடைக்காது. எனவேதான் பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். நான் என்னுடைய சொந்தப் பணத்தில் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் உதவி வருகிறேன். ஆகவே, நான் மாவட்டச் செயலாளராக வேண்டும் என்று கட்சியினர் விரும்பி அவர்களாகவே தலைமைக்கு மனு அளிக்கிறார்கள். நான் யாரையும் தூண்டிவிடவில்லை. மக்கள் செல்வாக்குள்ள என்னை மாவட்டச் செயலாளர் அவமானப்படுத்துகிறார். ஒருகட்டத்தில் 'பிடிக்கவில்லை என்றால் வெளியே போங்க' என்று என்னிடம் சொன்னார்கள். கட்சியைவிட்டு வெளியே போகச் சொல்வதற்கு இவர்கள் யார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அசோகன் இருப்பது வரை கட்சி வளராது" என்றார் ஆவேசமாக.

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க-வின் அதிகார மையமாக விளங்கும் தளவாய் சுந்தரம் இந்தப் பதவிச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இருதரப்பையும் சமாதானபடுத்தும் படலத்தில் இறங்கியிருக்கிறார்.