Election bannerElection banner
Published:Updated:

அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரிதாரக் குரல்... நடிகர்கள் அரசியல் பேசக்கூடாதா...?

அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரிதாரக் குரல்... நடிகர்கள் அரசியல் பேசக்கூடாதா...?
அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரிதாரக் குரல்... நடிகர்கள் அரசியல் பேசக்கூடாதா...?

அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரிதாரக் குரல்... நடிகர்கள் அரசியல் பேசக்கூடாதா...?

விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான் ”. - 2013 ம் ஆண்டு தனது விஸ்வரூபம் படத்திற்கு எதிராக எழுந்த பிரச்னையின்போது கமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. தன் தனிப்பட்ட பிரச்னைக்காக அவர் வெளியிட்ட உஷ்ணமான இந்த வார்த்தைகள், நான்காண்டு கழிந்த நிலையில் இன்று ஓர் அரசுக்கு எதிராகவும் திரும்பியிருக்கிறது. பரம வைரியாக விளங்கும் திமுகவே கூட அழுத்தமாக வைக்காத ஊழல் குற்றச்சாட்டை போகிற போக்கில் கமல் துணிந்து சொல்லியிருக்கிறார். ஆளும்கட்சி இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை; இன்றுவரை அதற்கான எதிர்வினையை ஆற்றிவருகிறார்கள்.

தமிழகத்தில் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாது. 50 களில் அண்ணாத்துரையின் அரசியலில் துவங்கி இந்த நுாற்றாண்டில் ஜெயலலிதா வரை அதன் வரலாறு மிகப்பெரியது. இந்த வரலாற்றில் அடுத்தடுத்த பக்கங்களை ரஜினி ஆக்கிரமிப்பார் என்பதுபோன்ற பரபரப்பான சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறிவந்த நிலையில் அவரது திரையுலக பங்காளி கமலஹாசன் அந்த வாய்ப்பை தட்டிப்பறித்துவிடுவாரோ என்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. 

திரையில் மட்டும் அரசியல் பேசிவந்த கமலை பொதுவெளியில் அதை பேசவைத்ததது விஸ்வரூபம் திரைப்படம். இசுலாமியர்களுக்கு எதிரானதாகப் பேசப்பட்ட அந்தத் திரைப்படத்தை வெளியிடுவதில் எழுந்த சிக்கல்தான் உண்மையில் கமல் பார்த்த முதல் அரசியல். படத்திற்கு எதிராக தமிழக அரசு காட்டிய முனைப்பு அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் எதிரொலியாக தனது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அமர்ந்துகொண்டு, 'மதச் சார்பற்ற வேறு மாநிலத்திற்கு சென்றுவிடுவேன்' என அவர் கொடுத்த பேட்டி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் சிவந்த மூக்கை இன்னும் சிவக்கவைத்தது. 

தன் திரைவாழ்க்கையில் எம்.ஜி.ஆர் , கருணாநிதி இவர்களுடன் நெருக்கமாக இருந்தவர் கமல். ஜெயலலிதாவிடம் அதைத்தொடர முடியவில்லை. அது ராஜபார்வை காலத்துப் பகை. கமலின் நுாறாவது படமான 'ராஜபார்வை' படத்தின் விழாவுக்குச் செல்லக்கூடாது என எம்.ஜி.ஆருக்கு 3 பக்கம் கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. இதற்கான ஆதியும் அந்தமும் அவர்கள் இருவருக்கு மட்டுமே வெளிச்சம். இதனால் இயல்பாகவே இருவருக்கும் இடையே ஆரோக்கிய நட்பு அப்போதிருந்தே இருந்ததில்லை. 

விஸ்வரூபம் பிரச்னையில் முற்றும்வரை, நேரடியாக அதுவரை கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்த ஜெயலலிதா, கமலின் 'வெளிநாடு' பேச்சினால் எரிச்சலானார். அதுவரை தனிப்பட்ட சினிமா சார்ந்த விஷயங்களை சட்டமன்றத்தில் பேசியிருக்காத அவர், கமலின் மீதான ஆத்திரத்தில் அந்த எல்லையை மீறினார். சட்டமன்றத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்து, கடுகடு முகத்தோடு கமலை வறுத்தெடுத்தார். 

பின்னர் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப்பின் விஸ்வரூபம் வெளியானது. ஆனால் கமலின் எதிர்பார்ப்பை அது நிறைவேற்றவில்லை. பொருளாதார ரீதியாக அதை சமாளித்தாலும் இந்த விஷயத்தில் அரசும் அதன் தலைமையான ஜெயலலிதாவும் காட்டிய வேகம் அவரை எரிச்சலுக்குள்ளாக்கியது. இப்போது அதுதான் கமலை இப்படி 'விஸ்வரூபம்' எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள்.

சென்னையில் கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு அதை சரியாக சமாளிக்கவில்லை என்பதுபோன்று அவர் வெளியிட்ட கருத்தால் கமலின் ஆழ்வார்பேட்டை வீடு சிலநாள்கள் மின்சாரத்தைக் காணமுடியாமல் போனதாக சொல்வார்கள். ஜெயலலிதா இதற்கு நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. பன்னீர்செல்வம் மூலம் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் முதல்வராக ஓ.பி.எஸ் பொறுப்பேற்றபின் தமிழக அரசு சந்தித்த முதல் போராட்டம் ஜல்லிக்கட்டு. விஸ்வரூபம் விவகாரத்தை இப்போதும் கமல் மறக்கவில்லை என்பது கமல் இந்த விவகாரத்தில் காட்டிய அணுகுமுறையில் புரிந்தது.

'காலுடைந்திருப்பதால் தன்னால் இளைஞர்களை சந்திக்கமுடியவில்லை' என கவலைப்பட்ட அவர், அதை ஈடுகட்டும்விதமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துகள் அதிரடி ரகம். புரிந்தும் புரியாத அவரது பொதுவெளி மொழியிலேயே இருந்த அந்த நிலைத்தகவல்கள் தமிழக அரசுக்கு அதிர்ச்சியை தந்த அதேநேரம், தமிழக மக்களுக்கு ஆச்சர்யத்தையும் அளித்தது. 

அப்போது பெரிய அளவில் அரசிடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை கமலுக்கு. அதேசமயம் கமல் அதோடு பின்வாங்கிவிடவும் இல்லை. சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட சமயம் எதிர்கட்சிகள் மட்டுமே தங்களது கருத்துகளை கூறி வந்தபோது, 'தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம். எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்' என்று திரையுலகிலிருந்து முதல் குரலாகப் பதிவிட்டார். கமலின் அதிகார வர்க்கத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் அவர் ஏதோவோர் அரசியல் பிரவேசத்திற்கு முன்னோட்டமா என்று கருதும் அளவுக்கு இருந்தது. ஆனால் நத்தை ஓட்டுக்குள் புகுந்துவிடுவதுபோல் அமைதியானார் கமல்.

இப்படி ஜெயலலிதாவின் மீதான கசப்பை ஏதாவது ஒருவழியில் அவ்வப்போது காட்டிவந்த கமல் ஏதாவது அரசியல் முடிவுக்கு தள்ளப்பட்டுவிடுவார் என்பதுபோன்ற நிகழ்வுகள்  இப்போதுதான் துவங்கியுள்ளன. அவர் தொகுத்து வழங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சி தொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது தமிழக அரசை கடுமையாகத் தாக்கினார். எல்லாதுறைகளிலும் ஊழல் மலிந்துகிடப்பதாக அவர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அவர் ஓர் ஆளே இல்லை எனக் கடுகடுப்பான கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கமலை ஒருமையில் பேசி அனலைக் கிளப்பினார். தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் கமல் மீது வசைமாரி பொழிந்தார்கள். தன் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த கமலின் மலிவான வணிக யுக்தி என்றனர். 

எப்போதும் இரட்டையர்கள் சாம்ராஜ்ஜியம் செய்யும் தமிழ்சினிமாவில் ரசிகர்கள் என்ற பெரும் கூட்டத்தை தக்கவைத்து தங்கள் அரசியல் நாடியை ஆராய்ந்துபார்த்தவர்களில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் முக்கியமானவர்கள். இதில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி அளப்பரியது. சிவாஜி அரசியல்வாதியாக மிளிர்ந்தாலும் ஒரு தலைவராக அவரை அங்கீகரிக்க மறுத்தது தமிழகம். இவர்களுக்குப்பின் உருவான ரஜினி - கமல் இருவரில் கமல் ஆரம்பத்திலேயே தனக்கு  அரசியல் ஆசை இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக தன் ரசிகர்மன்றங்களை ஒரேநாள் இரவில் கலைத்தார். அவை நற்பணி மன்றங்களாக இனி செயல்படும் என அறிவித்தார். திரையில் அவர் கோலோச்சிய காலத்திலேயே இது நிகழ்ந்தது. அன்றுமுதல் இன்று வரை அவை நற்பணி மன்றங்களாகவே செயல்பட்டுவருகின்றன. இந்த சூழலில் அவர் ஒரு கலைஞனாக இருந்துகொண்டு மாநில அரசுக்கு எதிராக கச்சைகட்டுவது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. அரசியல் ஆசையில் இருப்பதாக சொல்லப்படும் ரஜினிக்கும் கூட இன்றுவரை வராத துணிச்சல் கமலுக்கு வந்ததன் பின்னணி என்ன என்பதும் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. 

கமலின் இந்தத் தாக்குதலுக்கு ஆளும்கட்சி பதற்றமடைவது ஏன்  என அதிமுகவின் தலைமைக்கழகப் பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம்.

கமல் போன்றவர்களின் பேச்சு கட்சிக்கோ அரசுக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதை நாங்கள் பொருட்படுத்தவுமில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் குற்றஞ்சாட்டுவதைத்தான் அமைச்சர்கள் கண்டித்தனர். ஓர் அரசின் மீது விமர்சனம் வைப்பவர் அதற்கான ஆதாரத்துடன் பேசவேண்டும். அதை நிரூபிப்பதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒட்டுமொத்தமாக போகிற போக்கில் அவர் குற்றஞ்சாட்டுவது மற்றவர்கள் உரிமையில் தலையிடுவதுபோலத்தான். உண்மையில் கமலின் இந்தப் பேச்சின் பின்னணியில் இருப்பது மலிவான வணிக யுக்தி. மார்க்கெட் இழந்த நடிகரான கமல் திரைத்துறையிலிருந்து தொலைக்காட்சிக்கு வந்துவிட்டார். பழைய இமேஜை தக்கவைத்துக்கொண்டால்தான் வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். அதற்காகத்தான் இப்படியெல்லாம் பேசிவருகிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் தற்போது அவர் நடத்திவரும் நேரலை நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தவே அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறார். இன்னும் 80 நாள்கள் அந்த நிகழ்ச்சி ஓடவேண்டும். மக்களிடம் அது பரபரப்பாக பேசவைக்கப்பட இப்படி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார். விஸ்வரூபம் துவங்கி இன்றைக்கு இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை தன் தனிப்பட்ட நலனுக்காகவே சமூகப்பொறுப்புள்ளவர் போல அவர் கருத்துகளைத் தெரிவித்து வருவது ஊரறிந்த விஷயம். உண்மையில் கமல் சமூக அக்கறை கொண்டவரென்றால் அதே நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பயன்படுத்திய வார்த்தையை கண்டித்திருக்கவேண்டாமா? தீண்டாமையை அப்பட்டமாக வெளிப்படுத்திய இந்தக் குற்றச்செயலுக்கு எதிராக இப்படி ஒரு நிகழ்ச்சியை இனி நான் நடத்தமாட்டேன் என வெளியேறிவிட்டாரா...எதுவும் செய்யாமல் வாங்கிய காசுக்கு சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு இன்னமும் விளம்பரம் செய்துகொண்டுதானே இருக்கிறார். 

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கண்டித்து இந்து அமைப்புகள் உள்பட பலதரப்பினரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற முறையில் கமலஹாசன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கமல் அரசியலுக்கு வருவது எந்தக்காலத்திலும் நடக்காது. அவர் வரவும் முடியாது. விமர்சனங்களற்ற தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டவரல்ல அவர்.  ரஜினியையாவது பல விதங்களில் ஏற்கலாம். ஆனால் கமலுக்கு அரசியலுக்கு வரும் தகுதி துளியுமில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சையான விஷயத்தை கட்டுப்படுத்த தெரியாத கமலஹாசன் பெரிய சமூகப் புரட்சியாளர்போல பேசுவது அறியாமை” என்றார்.

என்னதான் முடிவில் இருக்கிறார் கமலஹாசன்... அரசியல் பிரவேசம் செய்யத்தயாராகிவிட்டாரா என நடிகரும் கமலின் ஆரம்பகால நண்பருமான எஸ்.வி சேகரிடம் கேட்டோம்.

ஒரு அரசு அமைய வாக்களித்த எந்த குடிமகனுக்கும் சுதந்திரமாக தங்கள் கருத்தை கூற உரிமை இருக்கிறது. பல லட்சம் பேரால் பின்பற்றப்படும் ஒரு திரைப்படத்துறையின் மூத்த நடிகனுக்கு ஒரு கருத்தை தெரிவிக்க உரிமை இல்லையா... இன்று சினிமா உலகில் ஒழுங்காக வருமானவரிகட்டுபவர்களில் கமல் ஒருவர். இந்தத் தகுதி போதாதா?... ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் சொன்னாலும் அலட்டிக்கொள்ளாத அமைச்சர்கள், கமல் சொல்லும்போது பதற்றமடைவது எதற்காக..? எதிர்கட்சிகள் சொல்வதை மக்கள் சம்பிரதாயமான கடந்துவிடுவார்கள். அதையே மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவர் சொல்லும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் அமைச்சர்கள் தகுதியைவிட்டு இறங்கி ஒருமையில் பேசுகிறார்கள்.

கமல் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் வந்தால் நான் வரவேற்பேன். அதேசமயம் அரசியல்வாதியாக மாறித்தான் அதிகார வர்க்கத்தை எதிர்க்கவேண்டும் என்பதில்லை. சமூக அக்கறை கொண்ட யாருக்கும் அந்தத் தகுதி உண்டு. உண்மையில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில விஷயங்களை பட்டவர்த்தனமாகக் கூற சங்கடப்பட்டிருக்கலாம். இப்போது அந்த அச்சம் இல்லாததால் வெளிப்படையாகப் பேசுகிறார். அமைச்சர்கள் எப்படி தொலைக்காட்சி நேரலைக்கு வருகிறார்களோ அதுபோல். 

ஜெயலலிதாவுக்குப்பிறகு தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஊழல் புகார் சொன்னால், இல்லை என்பதை நிரூபி. அதைவிட்டு வன்கொடுமைச் சட்டம் பாயும் என மிரட்டுவது சர்வாதிகாரம். தனி மனித ஒழுக்கம் குறித்துப் பேசினால் அரசியலிலும் அரிதாகத்தான் அப்படி சிலரை பார்க்கமுடியும். சைக்கிள் கடை நடத்தி, பழக்கடை வைத்திருந்து, அரசியலுக்கு வந்து இன்று சட்டம் இயற்றும் தகுதியை அடைந்திருக்கும்போது பல லட்சம் மக்களால் பின்பற்றப்படும் ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாதா...

உண்மையில் ரஜினி, கமல் இவர்களுடன் அஜித், விஜய் போன்றவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகிறேன். அப்படி நடந்தால் இன்றைய அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். இவர்கள் யாருக்கும் இனிமேல்தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற நிலை கிடையாது என்பதால் ஊழலற்ற ஓர் ஆட்சியைத் தர முடியும். ஜெயலலிதாவுக்குப்பின் அப்படி யாரும் திரையுலகில் இருந்து வந்துவிடக்கூடாது என்பதால்தான் கமலின் குரலை ஆரம்பத்திலேயே ஒடுக்க நினைக்கிறார்கள். கமல் அரசியலுக்கு வருவார் னு சொல்லலை... வந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!” என முடித்தார் எஸ்.வி.சேகர்.

எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள்...கமலையும் அரசியல்வாதிகள் அரசியலுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு