Published:Updated:

` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்

தினேஷ் ராமையா
` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்
` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று ஒருநாள் (17.6.2019) நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது சயத் என்ற முதியவர் கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே அதற்குக் காரணம் என்று கூறி ஜூனியர் மருத்துவர்கள் இருவர் மீது, அவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மேற்குவங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால், நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில், வேலைநிறுத்தத்தைக் கைவிடக் கோரி மருத்துவர்களிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கடந்த வியாழக்கிழமை பேசிய மம்தா, `மதியம் 3 மணிக்குள் பணிக்கு வர வேண்டும்' என கெடு விதித்தார். ஆனால், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டும் என்று கூறி மம்தாவின் அழைப்பை அவர்கள் நிராகரித்தனர். மேலும், மேற்குவங்க மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர். 

அதேபோல், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்க மருத்துவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் போராட்டத்தை அடுத்து இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று காலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் என்றும் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக தலையில் கட்டுகளுடனும் ஹெல்மெட்டுடனும் பணிபுரிந்து தங்கள் எதிர்ப்பை மருத்துவர்கள் பதிவு செய்தனர். அதேபோல், பேரணி, ஆர்ப்பாட்டம் எனவும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்

இந்தப் போராட்டத்துக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இன்று மதியம் 12 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அவர்கள் பாதுகாப்புக்கென சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவுறுத்தியிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் மேற்குவங்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். 


இந்திய மருத்துவ சங்கத்தின் கோரிக்கை என்ன?

* மருத்துவமனையில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்.

* மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். மூன்றடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், பார்வையாளர்கள் வருகை குறித்த உரிய வழிமுறைகள் உள்ளிட்டவைகள் தேசிய அளவில் வகுக்கப்பட வேண்டும். 

* மருத்துவமனையில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து உரிய முறையில் வழக்குகள் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், போக்ஸோ சட்டத்தில் உள்ளதுபோன்ற வழிமுறைகளை மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கும் கொண்டுவர வேண்டும்.   

` போக்ஸோ சட்டத்தில் இருப்பதுபோல பாதுகாப்பு!' - தமிழகத்திலும் களமிறங்கிய 60,000 மருத்துவர்கள்

Photo Credit: Tamilnadu Government Doctors Association

தமிழகத்தில் என்ன நிலை?

நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நோயாளிகளுக்கான சிகிச்சைகள் பாதிக்கப்படாத வகையில் தமிழகத்தில் மருத்துவர்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். கையில் கறுப்புப் பட்டை அணிவது, தலையில் ஹெல்மெட்டுடன் எதிர்ப்பைப் பதிவு  செய்வது என தமிழக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகப் பிரிவு தலைவர் ரவிசங்கரிடம் பேசினோம். ``மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தேசிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை இந்தப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இந்த நேரத்தில் அவசர சிகிச்சைகள் தவிர புறநோயாளிகள் பிரிவு போன்றவை செயல்படாது. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 60,000 மருத்துவர்கள் ஈடுபடுகிறார்கள். சென்னையின் பெரிய தனியார் மருத்துவமனைகள் முதல் அரசு மருத்துவமனை வரை இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது'' என்றார். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிப்பைக் கணக்கில்கொண்டு பணியைப் புறக்கணிக்காமல் மருத்துவர்கள், தங்கள் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்து பணிசெய்து வருகிறார்கள்.