Published:Updated:

''என்னால எந்தப் பாவமும் செய்யாத என் பையனும் பாதிக்கப்பட்டுட்டான்!'' - 'ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணின் வலி'

வெ.வித்யா காயத்ரி
''என்னால எந்தப் பாவமும் செய்யாத என் பையனும் பாதிக்கப்பட்டுட்டான்!'' - 'ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணின் வலி'
''என்னால எந்தப் பாவமும் செய்யாத என் பையனும் பாதிக்கப்பட்டுட்டான்!'' - 'ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணின் வலி'

"என்னோட பேரு ராஜாத்தி. சின்ன கிராமத்துல பெறந்தேன். என்னோட அப்பா, அம்மா கூலி வேலை பார்த்துதான் என்னையும் என் தங்கையையும் படிக்க வெச்சாங்க. பதினாறு வயசுல சொந்தக்காரர் ஒருத்தருக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. அவருக்கு ஹெச்.ஐ.வி இருக்குங்குற விஷயம் என்னோட அம்மாவுக்குத் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட அதை மறைச்சுட்டாங்க..." கலங்கிய கண்களோடு பேசுகிறார் ராஜாத்தி. 

ராஜாத்தியை வாழ்க்கை பலவாறு துரத்தியடித்திருக்கிறது. ஆனாலும் எல்லாத் துயரங்களையும் புறம்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையோடு வாழ்கிறார். அவரது கனிவான பேச்சும், உபசரிப்பும் அன்பானதோர் ஒட்டுதலை உருவாக்குகிறது. 

ஒருசிலர் அனுபவித்த வலிகளைக் கேட்கும் போது நம்மை அறியாமல் அவர்களோடு ஒன்றிவிடுவோம். தோளில் சாய்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறத்தோன்றும். அப்படித்தான் இருந்தது ராஜாத்தி அக்காவோடு பேசும்போது. உடம்பில் ஹெச்.ஐ.வியையும், மனதில் தீரா வலிகளையும் சுமந்துகொண்டு திடமாக நடக்கிற ராஜாத்தி அக்கா தன் வாழ்க்கைக்குள் என்னைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

" கல்யாணமாகி கொஞ்ச நாள்லயே நான் கர்ப்பமானேன். அப்போகூட அம்மா சொல்லலே. என் கணவரும், 'எனக்கு ஹெச்.ஐ.வி இருக்கு' - னு சொல்லல. எங்க அம்மாவைத் தப்பு சொல்ல முடியாது. படிக்காதது. ஹெச்.ஐ.வி பத்தி எதுவும் அதுக்குத் தெரியாது. அதைப்பொறுத்தவரை தலைவலி, காய்ச்சல் மாதிரி எயிட்ஸ்சும் ஒரு நோய். ஆனா. வீட்டுக்காரர்...? சொல்லியிருக்கணும்... ஆனா சொல்லலே... 

எனக்குக் குழந்தை பிறந்து மூணு மாசத்துலேயே இறந்துடுச்சு. அப்பவும் ஹெச்.ஐ.வினாலதான் குழந்தை இறந்துச்சுன்னு எனக்குத் தெரியல. குழந்தை இறந்து, கொஞ்ச நாள்லேயே என்னோட கணவரும் இறந்துட்டார். பதினெட்டு வயசுக்குள்ள என்னுடைய வாழ்க்கை ஆரம்பிச்சு, முடிஞ்சும் போயிடுச்சு... உங்களால கற்பனை செய்ய முடியுமான்னு தெரியலே... எதிர்காலமே எனக்குப் புரியலே... திக்குத்தெரியாம நின்னேன். எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும். அழுகையைத் தவிர வேற தீர்வே தெரியலே. வீட்டுக்குள்ள இருந்தா பைத்தியம் பிடிச்சுடுமோன்னு பயமா இருந்துச்சு. வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். 

வேலை, தைரியத்தைக் கொடுத்துச்சு. வாழனுங்கிற நம்பிக்கையைக் கொடுத்துச்சு. என்னோட வாழ்க்கை புதுசா மாற ஆரம்பிச்சிடுச்சு. அழுகையில இருந்து வெளியில் வர ஆரம்பிச்சேன். என்னோட அம்மாவும், தங்கையும்தான் என்னோட உலகம். அவங்களுக்காகவே வாழ ஆரம்பிச்சேன். வருஷம் ஓடிட்டே இருந்துச்சு. வயசும் முப்பது ஆச்சு. அந்தத் தருணத்துலதான் அந்த மனிதரைப் பார்த்தேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையில கொஞ்சம் வெளிச்சம் வந்தமாதிரி இருந்துச்சு..." 

கூட வேலை செஞ்சார்... ரொம்பவே ஆறுதலா இருந்தார். திருமணமானதும், கணவர், குழந்தை இறந்ததும் அவருக்குத் தெரியும். இருந்தும் என்னைத் திருமணம் செஞ்சுக்க விரும்பினார், எனக்கும் அவரைப் பிடிச்சிருந்துச்சு. அம்மாக்கிட்ட வந்து பேசச் சொன்னேன். அவரும் நானும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவங்கங்கிறதால அம்மா ஒத்துக்கலே. ஆனா, அந்தத் தருணத்தில அவர் எனக்கு முக்கியமா இருந்தார். வீட்டை எதிர்த்துக்கிட்டு அவருடைய மதத்திற்கே மாறி, அவரைத் திருமணம் செஞ்சுகிட்டேன். 

திருமணமாகி ஒருசில மாதத்துல கர்ப்பமானேன். செக்கப்புக்காக மருத்துவமனைக்குப் போயிருந்தோம். அங்கேதான் எனக்கு ஹெச்.ஐ.வி இருக்குன்னு தெரிய வந்துச்சு. ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். உடனே அபார்ஷன் பண்ணச் சொன்னேன். ஆனா, கரு நல்ல வளர்ந்துடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டார். குழந்தை, கணவரோட இறப்புக்கான காரணம் ஹெச்.ஐ.வி தான்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சுச்சு. கணவர்கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவருக்கும் அப்போ ஹெச்.ஐ.வி பற்றித் தெரியாததால அவர் பெருசா எடுத்துக்கல. என்மேல ரொம்ப அன்பாதான் இருந்தார். எனக்கு ஆண் குழந்தை பிறந்துச்சு. ஹெச்.ஐ.வி என் மகனையும் விட்டு வைக்கல.எந்தப் பாவமும் செய்யாம அவனும் அந்தக் கொடூர நோயைச் சுமக்குறான். இப்போ ரெண்டு பேரும்  தினசரி மருந்து எடுத்துக்கிட்டிருக்கோம். இப்போ அவனுக்கு பதிமூணு வயசாகுது. இவ்வளவு துயரத்திலயும் சின்ன நிம்மதி, என் கணவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லே. 

ஆனா, அவர் முன்னமாதிரி இல்லை. பையன் பிறந்து கொஞ்ச நாள்லேயே மாறிட்டார். குடிக்கு அடிமையாகிட்டார். அவரைத் திருத்த எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்விலதான் முடிஞ்சுச்சு. அவருடைய நண்பர்கள் ஹெச்.ஐ.வி பத்திச் சொல்லி பயமுறுத்தினதால அவருடைய நடவடிக்கைகள் மாறிடுச்சு. எந்த வேலைக்கும் போகாம குடிச்சிட்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கார். தற்கொலை பண்ணிக்கலாம்னு பலமுறை முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா, கடைசி நிமிடத்துல என் பையனோட முகம் கண்ணுக்கு முன்னாடி வரும். அவனுக்காகத்தான் இப்போ வரைக்கும் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். குழந்தை இறந்தப்பவோ, கணவர் இறந்தப்பவோ எனக்கு ஹெச்.ஐ.வி இருக்குன்னு தெரிஞ்சிருந்தா சத்தியமா இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருக்கவே மாட்டேன். இப்போ என்னால என் பையனும் கஷ்டப்பட்டுட்டு இருக்கான்..." - கண்கள் ததும்புகிறது ராஜாத்தி அக்காவுக்கு. நான் ஆறுதல் சொல்ல வழியற்று அமர்ந்திருக்கிறேன். 

சிறிது நேர விசும்பல்களுக்குப் பிறகு இயல்புக்கு வருகிறார். 

"நானும் படிக்கலே. அவரும் படிக்கலே. பிள்ளையையாவது நல்லா படிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிணோம். இப்போ எட்டாவது படிக்குறான். அவனுக்கு இப்படி ஒரு நோய் இருக்குங்குறதையே நாங்க அவன்கிட்ட சொல்லல. ஆனா, தினமும் மருந்து சாப்பிடுறதைப் பார்த்துட்டு, 'ஏம்மா இவ்வளவு மாத்திரை',-ன்னு கேட்க ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துக்கு மேல என்னால எதையும் மறைக்க முடியலே. அந்தச் செய்தியைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு அவனோட இயல்பே மாறிடுச்சு. யாரும் தன்மேல இரக்கம் காட்டிடுவாங்களோன்னு நினைச்சு மத்தவங்கக்கிட்ட பேசுறதைக் கூட குறைச்சுட்டான். எப்பவும் அமைதியா இருக்கான். நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். அவன் துளி கூட மாறலே..

கொஞ்ச நாளாவே,  'எனக்கு ஒரு மாதிரி இருக்கும்மா.. மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ'--ன்னு சொல்லிக்கிட்டே இருக்கான். அவனை சீக்கிரமா டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போகணும். தப்பா ஏதாவது முடிவு எடுத்துறக் கூடாது..." -

அதற்கு மேல் ராஜாத்தி அக்காவால் பேசமுடியவில்லை. எனக்கும் கேட்கும் மனநிலையில் இல்லை. 

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்  என்றாலே அவர் தவறானவர், முறைதவறி நடந்தவர் என்ற பார்வை நம்மில் பலருக்கு இருக்கிறது. உண்மையில், பெரும்பாலானோர் எவ்விதத் தவறும் செய்யாமல் அந்த நோயைச் சுமந்துகொண்டு வாழ்கிறார்கள். ராஜாத்தி அக்காவைப் போல... ஏற்கெனவே உடம்பில் நோயைச் சுமந்துகொண்டு தவிக்கும் அவர்களை நம் புறக்கணிப்பும் முகச்சுளிப்பும் மேலும் துயருக்குள்ளாக்கும். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம். அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!