Published:Updated:

குல்ஃபி. பர்ஃபி, காஜ் கதலி... டேஸ்டியான நட்ஸ் ரெசிப்பி!

சு.சூர்யா கோமதி

ஆரோக்கியம் நிறைந்த ஈஸியான நட்ஸ் ரெசிப்பிகள்

குல்ஃபி. பர்ஃபி, காஜ் கதலி... டேஸ்டியான நட்ஸ் ரெசிப்பி!
குல்ஃபி. பர்ஃபி, காஜ் கதலி... டேஸ்டியான நட்ஸ் ரெசிப்பி!

குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸை நிரப்புவதற்கு ஏற்ற ஆரோக்கியம் நிறைந்த ஈஸியான நட்ஸ் ரெசிப்பிகள்

பாதாம் அல்வா
தேவையானவை:

 பாதாம் பருப்பு - 2 கப்
 சர்க்கரை  - 2 கப்
 குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன்
 உருக்கிய நெய் - 2 கப்


செய்முறை:
சுடுநீரில் பாதாம் பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பதம் மிகவும் முக்கியம். பச்சை வாசனை நீங்கி, வெந்த வாசனை வரும் சமயம், சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும். கலவை பூத்தாற்போல் பொட், பொட் என வெடித்து வரும்போது, மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறவும். கலவை வெந்திருக்க வேண்டும், அடுப்பில் இருந்து இறக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். பட்டர் பேப்பரில் மடித்தும் வைக்கலாம்.
நட்ஸ் குல்ஃபி
தேவையானவை:

 நட்ஸ் பவுடர் - கால் கப் (முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, அக்ரூட், பிஸ்தா, சாரைப்பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தது)
 சர்க்கரை சேர்க்காத கோவா - 100 கிராம்
 சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
 குல்ஃபி எசனஸ் - 2 துளிகள்
 கொழுப்பு நீக்காத பால் - அரை லிட்டர் (ஆவின் ஆரஞ்சு கலர் பால்பாக்கெட் பயன்படுத்தலாம்)
 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை:
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் (சிறிது எடுத்து தனியாக வைக்கவும்), கோவா, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை குறைந்த தீயில்வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பால் சுண்டி வரும் சமயம், சிறிது பாலில் சோள மாவைக் கரைத்து, இதில் சேர்க்கவும். இப்போது அடர்த்தி அதிகரித்திருக்கும். அதில் நட்ஸ் பவுடர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையில் குல்ஃபி எசன்ஸ் சேர்த்து ஆறவிடவும். குல்ஃபி மோல்டில் இந்தக் கலவையைச் சேர்த்து, ஃப்ரீஸரில் 10 மணி நேரம் வைத்து எடுத்துச் சுவைக்கவும்.

காஜ் கதலி
தேவையானவை:

 முழு  முந்திரிப் பருப்பு  - ஒரு கப்
 நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - ஒரு கப்


செய்முறை:
முந்திரியைச் சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கை விடாமல் கிளறவும். சிறிது நேரத்தில் வெந்து சுருண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவையை சப்பாத்தி மாவு போல தேய்த்து, டைமண்ட் வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

முந்திரி பக்கோடா
தேவையானவை:

 உடைத்த முந்திரிப் பருப்பு - ஒரு கப்
 கடலை மாவு - அரை கப்
 அரிசி மாவு - அரை கப்
 சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 இஞ்சி - அரை அங்குலத் துண்டு
 பச்சை மிளகாய்  - 5 
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு


செய்முறை:
மாவு வகைகளைச் சலித்து வைக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் சலித்த மாவு வகைகள், சமையல் சோடா, சோம்பு, நெய், இஞ்சி - மிளகாய் விழுது, மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசறவும். உடைத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து, மாவை 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிச் சேர்த்து, பொன்னிறமாக மாறியதும் மறுபுறமும் வேகவைத்து சூடாகப் பரிமாறவும்.