Published:Updated:

செய்யும் உதவியை வெளிப்படுத்த விரும்பாத மனிதநேயர் டாக்டர் மு.வரதராசனார்!

இரா.மோகன்

பன்முக ஆற்றல்கள் கொண்ட நல்லாசிரியராகவும் பண்பாளராகவும் விளங்கியவர் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசனார். இவருடைய இயற்பெயர் திருவேங்கடம். இருப்பினும் இவரின் தாத்தா வரதராசனார் என்பவர் பெயரிலேயே இவர் மு.வரதராசனார் என்று அழைக்கப்பட்ட மு.வ பிறந்த தினம் இன்று. இன்றைய நாளில் மு.வ குறித்து தனது எண்ணங்களை விவரிக்கிறார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா.

செய்யும் உதவியை வெளிப்படுத்த விரும்பாத மனிதநேயர் டாக்டர் மு.வரதராசனார்!
செய்யும் உதவியை வெளிப்படுத்த விரும்பாத மனிதநேயர் டாக்டர் மு.வரதராசனார்!

தான் பிறருக்குச் செய்யும் உதவியை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத இலக்கிய உலகின் மனிதநேயராகத் திகழ்ந்தவர் டாக்டர் மு.வரதராசனார். பன்முக ஆற்றல்கள் கொண்ட நல்லாசிரியராகவும் பண்பாளராகவும் விளங்கியவர் மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசனார். இவருடைய இயற்பெயர் திருவேங்கடம். இருப்பினும் அவரின் தாத்தா வரதராசனார் பெயரிலேயே இவர் அழைக்கப்பட்டார். அவரின் பிறந்த தினத்தில் மு.வரதராசனார் குறித்து தன் எண்ணங்களை விவரிக்கிறார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சேவியர் ராஜப்பா.

''வடஆற்காடு என ஏற்கெனவே அழைக்கப்பட்ட மாவட்டத்தில் அடங்கிய திருப்பத்தூர் தாலுகா வேலம் எனும் ஊரில் முனுசாமி  - அம்மாக்கண்ணு தம்பதிக்கு 1912-ம் வருடம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி பிறந்த மு.வரதராசனார், திருப்பத்தூரிலேயே உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1931-ல் வித்வான் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சொந்தமாகப் படித்து, 1935-ல் வித்வான் தேர்வு எழுதிய அவர், மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ல் பி.ஓ.எல் தேர்ச்சி பெற்றார்.

1939 முதல் 1961 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதலில் விரிவுரையாளராகவும் பின்னர், 1945-ம் ஆண்டு முதல் அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிபுரிந்து அந்தப் பணி இடத்துக்குப் பொருத்தமான நபராக அடையாளமாகத் திகழ்ந்தார். தான் வகித்த பதவிக்குப் பெருமைசேர்க்கும் விதமாக நடந்து கொண்டார் மு.வரதராசனார். 1948-ம் ஆண்டில் மட்டும், தன்னுடைய முனைவர் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 

பச்சையப்பன் கல்லூரியின் 'கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்' என்ற பொறுப்பை ஏற்ற மு.வரதராசனார், 1944-ல் 'தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு எம்.ஓ.எல் பட்டம் பெற்றார். எழுத்தாளராகவும் கல்வி ஆராய்ச்சியாளராகவும் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும், பன்முகத்தன்மை கொண்ட தமிழ் அறிஞராக மு.வரதராசனார் வலம்வந்தார் என்றால் அது மிகையாகாது. இவரால் தமிழுக்குப் பெருமையா அல்லது தமிழால் இவருக்குப் பெருமையா என்று பிரித்து அறிய முடியாத அளவுக்கு, இவருடைய பங்கேற்பு, தமிழ்கூறும் நல்லுலகில் நீக்கமற நிறைந்துள்ளது.

இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றி பல சிறுகதைகள், புதினங்களையும் மு.வ படைத்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. பணியில் இருந்த காலங்களில் மாணவர்கள் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த நல்லாசிரியராகவும் பண்பாளராகவும் விளங்கினார். 20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற, புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மு.வ-வின் தமிழ்த்தொண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

1948-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் 'சங்க இலக்கியத்தில் இயற்கை' என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வரதராசனார் என்பது அவருக்குக் கிடைத்த மணிமகுடம் ஆகும். 1971-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, 1974-ம் ஆண்டுவரை சிறப்புறப் பணியாற்றினார். இவர் துணைவேந்தராகப் பணியாற்றிய காலங்களில் தமிழ் உட்பட பல்வேறு ஆராய்ச்சித் துறைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டன.

சென்னைப் பல்கலைக்கழகம், திருப்பதி பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினர் பதவியையும் மு.வரதராசனார் வகித்துள்ளார். கேரளா, மைசூர், உஸ்மானியா, பெங்களூரு, ஆந்திரா, டெல்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார். 1972-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வரதராசனார் மட்டுமே.

சாகித்திய அகாடமி, ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதிக் குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்ததோடு, அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் டாக்டர் மு.வரதராசனார். தமிழ் மொழி மீது தணியாத தாகம் கொண்டிருந்தாலும், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பல்வேறு மொழிகளையும் கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தவர் மு.வரதராசனார். 

தமிழ் இலக்கிய உலகுக்கு மு.வ அளித்த கொடைகளாக ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இலக்கியத்தின் மீது தணியா தாகம் கொண்ட டாக்டர்.மு.வ, தன் வாழ்க்கையிலும் மனிதநேயம் கொண்டவராகத் திகழ்ந்தார். மாணவர்களைத் தேடிச்சென்று உதவும் குணம் கொண்டவராகத் திகழ்ந்ததுடன், இரக்கக் குணமும் கருணையும், அன்பும் நிறைந்த மாமனிதராகத் திகழ்ந்ததால், மாணவ - மாணவிகளின் மனங்களில் இடம்பிடித்த, மாபெரும் மனிதநேயராக விளங்கினார். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். மாணவர்கள் நோயுற்ற போதும் உதவுவார். மாணவ - மாணவிகளை அன்போடு வழிநடத்தியதோடு, அவர்களுக்குப் பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்துள்ளார். தான் பிறருக்குச் செய்யும் உதவிகள் எதுவும் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த மு.வரதராசனார், எந்தவிதத்திலும் உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதைப்பற்றிய செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்து விடுவார்.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் கல்வித்துறை தொடர்பான ஆய்வு மாநாடுகளில் பங்குபெற்ற பெருமைக்குரியவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் மானுட நேயம் ஒன்றே தனக்கான மிகச்சிறந்த அடையாளம் என்பதில் உறுதியாகத் திகழ்ந்தவர் மு.வரதராசனார். பிறரால் போற்றப்படக்கூடிய அளவுக்கு வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் மு.வ'' என்றார்.

மு.வரதராசனாரைப் போன்ற மனிதநேயம் மிக்கவர்களாகவும் தமிழறிஞராகவும் வாழ, அவரின் பிறந்த நாளில் அனைவரும் உறுதி எடுப்போம்...