Published:Updated:

மீன்வரத்து அதிகம்; விலைவீழ்ச்சி! - தடைகாலம் முடிந்த முதல்நாளில் மீனவர்கள் சோகம்

இரா.மோகன்
மீன்வரத்து அதிகம்; விலைவீழ்ச்சி! - தடைகாலம் முடிந்த முதல்நாளில் மீனவர்கள் சோகம்
மீன்வரத்து அதிகம்; விலைவீழ்ச்சி! - தடைகாலம் முடிந்த முதல்நாளில் மீனவர்கள் சோகம்

 மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து  கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு அதிகளவு இறால் மீன்கள் கிடைத்தன. ஆனாலும், உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் மகிழ்ச்சி இழந்தனர்.

மீன்வரத்து அதிகம்; விலைவீழ்ச்சி! - தடைகாலம் முடிந்த முதல்நாளில் மீனவர்கள் சோகம்

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் 60 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கன்னியாகுமரி நீரோடி பகுதி தொடங்கி சென்னை பழவேற்காடு பகுதி வரையிலான கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதை நம்பியிருந்த மீன் பிடி கூலித் தொழிலாளிகள் மாற்று தொழிலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக அமல்படுத்தப்பட்டிருந்த தடைக்காலம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மீனவர்கள் சனிக்கிழமை முதல் மீன் பிடிக்கச் செல்ல மீன்துறை அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில்  ராமேஸ்வரம் துறைமுகத்தில் உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் வெள்ளிக்கிழமை மாலையே மீன்பிடிக்கச் சென்றனர்.

மீன்வரத்து அதிகம்; விலைவீழ்ச்சி! - தடைகாலம் முடிந்த முதல்நாளில் மீனவர்கள் சோகம்

 வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற படகுகளில் சில படகுகளில் பழுது ஏற்பட்டதால் நேற்று பகலில் கரை திரும்பின. பாதியில் கரை திரும்பிய இந்தப் படகுகளில் சுமார் 200 கிலோ வரை இறால் மீன்கள் சிக்கின. இந்நிலையில் முழு மீன்பிடிப்பில் ஈடுபட்ட எஞ்சிய படகுகள் அனைத்தும் இன்று காலை முதல் கரைக்குத் திரும்பி வரத் தொடங்கின.

இவ்வாறு வந்த படகுகள் ஒவ்வொன்றிலும் சுமார் 300 கிலோ முதல் 800 கிலோ வரை இறால் மீன்கள் பிடிபட்டிருந்தன. இதனால் 60 நாள்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். ஆனால், மீனவர்கள் இடையே ஏற்பட்ட மகிழ்ச்சி கரை திரும்பியதும் காணாமல் போனது. அதற்குக் காரணம், ஒரே நாளில் பல ஆயிரம் கிலோ இறால் மீன்கள் பிடிபட்டதால் அவற்றை மீனவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கிச் செல்லும் ஏற்றுமதி நிறுவனங்கள் இறால் மீன்களின் விலையை அதிரடியாகக் குறைத்ததுதான். வழக்கமாக ஒரு கிலோ முதல் நிலை இறால் மீனுக்கு ரூ.700 வரை விலை கொடுக்கும் ஏற்றுமதியாளர்கள் இன்று அதிகபட்சமாக ரூ.450 மட்டுமே வழங்கினர். இதனால் அதிக அளவு இறால் மீன் கிடைத்தும் அதன் லாபம் மீனவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இறால் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் இதுபோன்ற நாள்களில் ஏற்றுமதியாளர்கள் நிர்ணயிப்பதே விலையாக உள்ளது. இதைத் தவிர்க்க மீனவர்களால் பிடிக்கப்பட்டு வரும் இறால் மீன்களைச் சேமித்து வைத்திருக்க எந்த வசதியும் ராமேஸ்வரம் பகுதியில் இல்லை. இதனால் பிடித்து வந்த இறால் மீன்கள் கெட்டுப்போகும் முன் கேட்கும் விலைக்குக் கொடுக்கும் நிலையே தொடர்கிறது. எனவே, அரசு சார்பில் ராமேஸ்வரம் பகுதியில் மீன் பதனிடும் கிடங்கு அமைக்கப்படுவதன் மூலமே இது போன்ற நிலையைத் தடுக்க முடியும் என மீனவர்கள் கூறுகின்றனர்.  

Vikatan