Published:Updated:

''தயவுசெய்து சாத உணவு  கேக்காதீங்க!''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்

எம்.குமரேசன்
''தயவுசெய்து சாத உணவு  கேக்காதீங்க!''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்
''தயவுசெய்து சாத உணவு  கேக்காதீங்க!''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்

சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைப் பார்த்தது போல, வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நீண்ட நாள்கள் சென்னையில் மழை பொழியாத ஆண்டாக இந்த ஆண்டு  அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 194 நாள்கள் சென்னையில் ஒரு சொட்டு மழைகூட தூறவில்லை. 2015- ம் ஆண்டு பெரு வெள்ளத்தின்போதும், சென்னையில் இதுபோன்று வறட்சி இருந்தது. பின்னர், பெருமழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மிதந்தது வரலாறு.

''தயவுசெய்து சாத உணவு  கேக்காதீங்க!''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்

இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை , சேப்பாக்கம் பகுதிகளில் உள்ள மேன்ஷன்கள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஹோட்டல்களில் வாஷ் ரூமை பூட்டிவிட்டு சிறிய வாளியில் தண்ணீர் வைத்து கை கழுவச் சொல்கிறார்கள். இதனால், தண்ணீரை சிறிது மிச்சப்படுத்த முடிகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்னகம் ஹோட்டல் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.  தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்தவுடன் ஹோட்டல் மீண்டும் திறக்கப்படும் என்று ஹோட்டல் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

வழக்கமாக 12, 000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,200 வாங்கிக்கொண்டிருந்த டேங்கர் லாரிகள் இப்போது, ரூ. 7,000 கட்டணம் வசூலிக்கின்றன. இதனால், ஹோட்டல் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் தண்ணீர்ப் பிரச்னை இருக்கத்தான்செய்கிறது. பணம் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலையில் அல்லாடவேண்டியது உள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் பல ஹோட்டல்களில் சமைக்க அதிக தண்ணீர் தேவைப்படும் உணவுகளைச் சமைப்பதில்லை. அதாவது, சாதம் போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர் பயன்பாடு குறைவாகத் தேவையுள்ள உணவை வாடிக்கையாளர்களை ஆர்டர் செய்யச் சொல்கின்றனர். சாத உணவைத் தவிர்க்குமாறும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. 

''தயவுசெய்து சாத உணவு  கேக்காதீங்க!''- விழிபிதுங்கி நிற்கும் ஹோட்டல்கள்

வழக்கமாக, ஹோட்டல்கள் காலை முதல் இரவு வரை திறந்திருக்கும். இப்போது, ஹோட்டல்கள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் சங்க நிர்வாகிகள்,தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் சென்னையில் நிலவுகிறது. ஜூன் 19-ம் தேதி, தெலங்கானாவில் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 20-ம் தேதியில் இருந்து சென்னையில் படிப்படியாக வெப்பம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Vikatan