Published:Updated:

காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!

JAYAVEL B
எம்.குமரேசன்
காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!
காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை தங்க மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜப்பா என்ற அர்ச்சகரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் மும்பை விமானநிலையத்தில் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே சிலைகள், பழைமை வாய்ந்த தூண்கள் காணாமல் போவதாக புகார் சொல்லப்பட்டது. இதற்கிடையே 1600 ஆண்டுகள் பழைமையான சோமாஸ்கந்தர் சிலை, ஏலவார்குழலி சிலைகள் சேதமடைந்ததாகக் கூறி புதியதாக சிலை செய்ய பக்தர்களிடமிருந்து தங்கம் திரட்டப்பட்டது. நன்கொடையாக 2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் கிடைத்தது. புதிய சிலை செய்யப்பட்டபோது, நன்கொடையாகக் கிடைத்த தங்கத்தைச் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

புதிதாகச் செய்யப்பட்ட சிலைகளில் இந்து சமய அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ள 5 சதவிகிதம் தங்கம் கலந்திருக்க வேண்டும். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் நடத்திய உலோகச் சோதனையில் புதிதாகச் செய்யப்பட்ட சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை என்று தெரிந்தது. சிலையில் தங்கம் கலக்காமல், 8.7 கிலோ தங்கத்தை மோசடி செய்தது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!

சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா, ஸ்தபதி முத்தையா, கோயில் குருக்கள் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிந்தனர். வீரசண்முகமணி, கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோயில் குருக்கள் ராஜப்பா கனடா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

விசாரணை காலத்தில் கனடாவுக்குத் தப்பி ஓடிய ராஜப்பா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. கனடாவில் பதுங்கியிருந்த குருக்களுக்கு நீண்ட நாள்கள் அந்த நாட்டில் இருக்க முடியவில்லை. இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கனடாவில் இருந்து மும்பை வந்த ராஜப்பாவை போலீஸார் கைது செய்து தமிழக சிலைக் கடத்தல் காவல்துறையிடத்தில் ஒப்படைத்தனர். மும்பையிலிருந்து நேற்று கும்பகோணத்துக்கு போலீஸார் அவரை அழைத்து வந்து நீதிபதி மாதவராமனுஜர் முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி, குருக்கள் ராஜப்பாவை ஜூலை 5-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜப்பா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த 2016-ம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இதை ஸ்தபதி முத்தையா செய்தார். சிலை 5.75 கிலோ தங்கம் கொண்டு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிலையை பி.எம்.ஐ இயந்திரம் வழியாகச் சோதனை செய்யப்பட்டதில் தங்கம் கொஞ்சம்கூட இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு -  கனடாவில் பதுங்கிய முன்னாள் குருக்கள் கைது!

மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்து பக்தர்களிடையே ராஜப்பாவுக்கு செல்வாக்கு உள்ளது. சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்காக தங்கம் தேவைப்படுகிறது என கனடா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பக்தர்களிடம் இருந்து தங்கம் நன்கொடை பெற்றிருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் இதற்கான ஆதாரங்களைத் திரட்டி இருந்தார்கள். 

இந்த நிலையில், சாட்சிகளை மறைப்பதற்காகக் கடந்த 20 தினங்களுக்கு முன்பு போலி பாஸ்போர்டில் கனடா சென்றதாகவும் கூறப்படுகிறது. சாட்சிகளிடம் பேசிவிட்டு இந்தியா திரும்பும்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜப்பா  ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக தலைமைப் பொறுப்பில் இருந்தபோது பழைமையான கந்தர் சிலை, பள்ளியறை சிவன்-பார்வதி சிலை என சிலைகள் திருடு போயின. சிறையில் இருக்கும் ராஜப்பாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். ராஜப்பா கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Vikatan