Published:Updated:

``நடவடிக்கை நிச்சயம்!” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி

ஐஷ்வர்யா
``நடவடிக்கை நிச்சயம்!” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி
``நடவடிக்கை நிச்சயம்!” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி

``நடத்துநர்கள் பேருந்தில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும்பட்சத்தில், வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல்தொகை செலுத்தும்போது, 10 ரூபாய்  நாணயத்தை முடிந்தவரை தவிர்க்குமாறு இதன்மூலம் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” - இப்படி எழுதப்பட்டு திருப்பூர் போக்குவரத்துக் கிளை மேலாளரின் கையொப்பமும் முத்திரையும்கூடிய கடிதம் தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப்பில் பரவியது, மக்களிடம் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. 

``நடவடிக்கை நிச்சயம்!” - 10 ரூபாய் நாணய விவகாரத்தில் ரிசர்வ் வங்கி

கடிதம் எழுதிய போக்குவரத்து பணிமனை தரப்பு கூறுகையில், ``வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே, அந்தச் சுற்றறிக்கை ஒட்டப்பட்டது. ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக அது பொதுமக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அந்தச் சுற்றறிக்கை  திரும்பப் பெறப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளனர். இருந்தும், பேருந்து நடத்துநர்கள் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்ப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

இதுகுறித்து விமர்சித்துள்ள பொருளாதார நிபுணர்கள் சிலர், `` `ரிசர்வ் வங்கி வெளியிடும் நாணயங்களை வாங்க மாட்டோம்' என மறுப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? பொதுமக்கள், ரிசர்வ் வங்கி புகார் அலுவலர்களிடம் இதுகுறித்து புகார் எழுப்ப வேண்டும் அல்லது எது எதற்கோ கேள்வி எழுப்பும் நீதிமன்றங்கள் இதற்கு எதிராகத் தாமாக முன்வந்து கேள்வி எழுப்ப வேண்டும்.  இவர்கள், 10  ரூபாய் நாணயங்களையே வாங்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே 20 ரூபாய் நாணயங்கள் வேறு வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர். 

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் புகார்கள் துறை சென்னை மேலாளர் மோகனிடம் பேசினோம், ``இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆனால், மேலதிக விவரங்கள் குறித்துப் பேச எங்களுக்கு அனுமதியில்லை” என்று பதிலளித்துள்ளார். 

Vikatan