Published:Updated:

சமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்!

சி.ய.ஆனந்தகுமார்
சமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்!
சமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்!
சமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகம் முழுவதும் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்தவகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் காரணமாக மாரியம்மனுக்கு முடி காணிக்கை வழங்குவார்கள். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் மொட்டை அடிப்பதும், பெண்கள் சிலர் பூமுடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம்.

சமயபுரம் கோயிலில் ஒரு வாரத்துக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துகிறார்கள் எனக் கோயில் நிர்வாகம் கூறுகிறது. அப்படி முடி காணிக்கை செலுத்துவதற்குத் தலைக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மொட்டையடிக்க பணம் செலுத்தும் பக்தர்களுக்கு, பிளேடு மற்றும் சந்தன வில்லை வழங்கப்படுகிறது. அதை முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் உள்ள முடிதிருத்துவோரிடம் கொடுத்து மொட்டை போட்டுக் கொள்ளலாம்.  பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் முடித்திருத்துவோர் பணியில் 160 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மொட்டை போடுவதற்கு ரூபாய் 25 ரூபாய் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணமோ, கையூட்டோ பெறக் கூடாது. பக்தர்கள் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் கோயிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடி திருத்தம் செய்பவர்கள், தலைக்கு 50 ரூபாய் வீதம் பக்தர்களிடம் கூடுதலாக கட்டாய வசூல் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

சமயபுரத்தில் மொட்டை போடுவதற்கு கூடுதல் பணம்.. அதிரடி காட்டிய கோயில் இணை ஆணையர்!

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில், சமயபுரம் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் முடி திருத்தும் மண்டபத்தில் ஆய்வுகள் செய்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்ததில் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்த முடிதிருத்துபவர்களான கார்த்தி, செந்தில், லோகநாதன், ரவி உள்ளிட்ட 13 பேரை கோயில் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை குறித்து கோயில் இணை ஆணையர் அசோக்குமார், ``சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் மையத்தில் காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 பேர் குறித்து தெரியவந்தது. அதனால் சம்பந்தப்பட்ட நபர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். கோயிலில் முடி காணிக்கை செலுத்துவோரிடம் அதற்கான கட்டணம் தவிர கூடுதலாக யாரும் வசூலிக்கக் கூடாது. மீறியும் யாராவது பணம் கேட்டால் பக்தர்கள் கொடுக்க வேண்டாம். இது தொடர்பாக யாரேனும் மிரட்டி பணம் வசூல் செய்தால். அது குறித்து பக்தர்கள் உடனடியாக கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் உறுதியாக.

மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்யும் இடத்தில், கூடுதல் கட்டணம் வசூலித்த 13 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan