Published:Updated:

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

JAYAVEL B

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்படும் கைகலப்பு வடமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களை அதிருப்தியில் ஆழ்த்தும் நிலை உள்ளது.

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?
புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

108 திவ்ய தேசங்களில் முக்கிய ஆலயமாகக் கருதப்படுகிறது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில். வரதருக்கு விழா என்றாலே உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடுவார்கள். வரதராஜ பெருமாளுக்கு வழிபாடு செய்வதில் வடகலை, தென்கலை என முரண்பாடு உள்ளதால் ஒவ்வொரு திருவிழாவின்போதும் இருபிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 40 வருடங்களுக்கு ஒருமுறை வரும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரச்னை நாளுக்குநாள் வலுத்துவருகிறது. இது, காஞ்சிபுரம் பக்தர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வரதராஜ பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கருட வாகனம், திருத்தேர் எனப் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவார். வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம்வரும்போது சுவாமிக்கு முன்னும்பின்னும் வடகலை மற்றும் தென்கலைப் பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் வேத மந்திரங்களையும் பாசுரங்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள்.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற எட்டாம் நாள் உற்சவத்தின்போது குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் திருவீதி உலா வந்தார். திருக்கச்சிநம்பி தெரு பகுதியில் வேடுபறி உற்சவத்தின்போது, தென்கலைப் பிரிவினர் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடத் தொடங்கினர். அப்போது, வடகலை பிரிவினர் தமிழில் பாசுரங்களைப் பாடவிடாமல் தடுத்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தென்கலைப் பிரிவினரை, வடகலைப் பிரிவினர் கடுமையாகத் தாக்கினர். தென்கலைப் பிரிவினரும் வடகலைப் பிரிவினரைத் திரும்பத் தாக்கினார்கள். பொதுவெளியில் இருபிரிவினருக்குள் ஏற்பட்ட மோதல் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெருமாள் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

இதேபோல கடந்த வருடம் பிரம்மோற்சவத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவையின்போது நம்மாழ்வார் சந்நிதியில் வரதராஜ பெருமாளை எழுந்தருளச் செய்து தென்கலைப் பிரிவினர் நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களைப் பாடினார்கள். அப்போது, பெருமாளை வஸ்திரத்தால் முழுவதும் மறைத்து, அப்பிரதட்சிணமாக வடகலைப் பிரிவினர் எடுத்துச் சென்றார்கள். இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஆனது. தங்கப் பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தபோது தென்கலைப் பிரிவினர்கள் தமிழில் பாசுரங்களைப் பாடினர். இதற்கும் வடகலையினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது ஏதாவது ஒரு திருவிழாவில் இரு பிரிவினரும் மோதிக் கொள்வது வாடிக்கையாகிவருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அத்திவரதர் தரிசனத்திலும் இருதரப்பினருக்கும் மோதல் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

1720-ம் ஆண்டுக்குப் பிறகுதான் வடகலை, தென்கலை என்ற பிரிவுகள் உருவாகின. நாமங்கள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் என இரண்டு பிரிவுகளும் வெவ்வேறானவை. வடகலைச் சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் வடகலையினர் வசமாகவும் தென்கலை சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் தென்கலை வசமாகவும் மாறத் தொடங்கின. ஆனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருபிரிவினரும் சமமாக இருந்தனர். இதுதான் பிரச்னைக்கு முக்கியக் காரணமானது. அப்போதிலிருந்து இருதரப்பினரும் மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 1825, 1852 ஆகிய ஆண்டுகளில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பு தென்கலைப் பிரிவினருக்குச் சாதகமாக இருந்தாலும் 1940-ம் ஆண்டு இந்தக் கோயிலில் வடகலையைச் சேர்ந்தவர்களுக்கே உரிமை அதிகம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் சந்நிதிகளைத் தவிர்த்து கோயிலின் அனைத்துச் சந்நிதிகளும் வடகலையைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையாயின. இதனால்,  இருபிரிவினர்களும் இன்று வரை மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

புகையும் வடகலை, தென்கலைப் பிரிவினை! காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் எதிரொலிக்குமா?

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொள்வதால் காவல் துறையினரால் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரமுடியவில்லை. இந்து அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் பலமுறை இதைத் தடுக்க முயன்றும் அவர்களுக்குள் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், இன்னும் ஒருமாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்படும் கைகலப்பு வடமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்களை அதிருப்தியில் ஆழ்த்தும் நிலை உள்ளது.  

இதுகுறித்து மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். ``வடகலைப் பிரிவினர், தென்கலைப் பிரிவினர், செயல் அலுவலர் என அனைத்துத் தரப்பினரும் புகார் அளித்திருக்கிறார்கள். பிரச்னை ஏற்படாமல் விழாவை நடத்த வேண்டும் எனக் கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் போட்டு வலியுறுத்தி இருக்கிறோம். காவல் துறையினர் பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்புதான் கொடுக்க முடியும். நீதிமன்றம்தான் தலையிட்டுப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியும்” என்றார்.

பெருமாளை வணங்குவதற்குப் பிரச்னை வேண்டியதில்லையே?

Vikatan