Published:Updated:

'பணத்தைப் பற்றி கவலையில்லை; மக்கள் நல்லா இருக்கணும்!' -சேலத்தில் கவனம் ஈர்க்கும் குஜராத் தொழிலதிபர்

பிரசாந்த்ஷா
பிரசாந்த்ஷா ( எம். விஜயகுமார் )

``இப்பணிக்காக நான் யாரிடமும் அன்பளிப்பாக ஒரு பைசா கூட வாங்குவதில்லை. ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 வரை செலவு செய்கிறேன். பணம் செலவாவதைப் பற்றி துளியும் கவலையில்லை. மக்கள் அனைவரும் நன்றாக இருக்கணும்.''

``லாக் டவுணால் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. தெய்வங்கள் அனைத்தும் மருத்துவமனையிலும், தூய்மைப் பணியில் இருப்பதால்...'' எனப் பரவும் ஃபார்வேட் வாட்ஸ்அப் மெசேஜைப் படித்து, இந்த தருணத்திலாவது சுகாதாரப் பணியாளர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் கடவுளுக்கு நிகராகப் பார்த்து வருகிறோம். சில பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர் சில தன்னார்வலர்கள்.

காவலர்களுக்கு உதவி
காவலர்களுக்கு உதவி

இவ்வேளையில் சேலத்தில் வசிக்கும் குஜராத்தைச் சேர்ந்த பிரசாந்த்ஷா என்ற இளம் தொழிலதிபர் ஒருவர் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியார்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் என மக்கள் பணி செய்யக் கூடியவர்களுக்கு வியக்க வைக்கும் அளவுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஆம்னி மற்றும் மினிடோர் வாகனங்களில் பிரியாணி, தண்ணீர் பாட்டில், ஃப்ரெஷ் ஜூஸ் கொடுத்து அசத்துகிறார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காவல்துறையினருக்கும், ஊடகவியலாளர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த பிரசாந்த்ஷாவிடம் பேசியபோது, ``என்னுடைய பூர்வீகம் குஜராத் மாநிலம். நான் பதினைந்து வருடமாகச் சேலத்தில் இண்டஸ்ரியல் மினரல்ஸ் அண்ட் ரீபேக்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என்னுடைய நிறுவனத்தில் சேலம் பகுதியைச் சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள்.

பிரசாத்ஷா
பிரசாத்ஷா

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு கடந்த 24-ம் தேதி லாக் டவுண் பிறப்பித்தது. வேலையின்றி வருமானம் இல்லாமல் மக்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள் என்று களத்தில் இறங்கினேன். அதையடுத்து, 25-ம் தேதியிலிருந்து இந்தப் பணிகளைச் செய்துவருகிறேன். இரண்டு நாள்கள் ஓமலூர் செல்லபிள்ளைகுட்டை கிராமத்தில் 1,700 வீடுகளுக்குத் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தேன்.

பிறகு ஓமலூரில் தொடங்கி சேலம் மாநகராட்சி முழுவதும் வழி நெடுக சாலையோரப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி வந்தேன். என்னைப்போல பல தன்னார்வலர்கள் சாலையோர வாசிகளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து வந்தார்கள். அதனால் நான் கடந்த ஒரு வாரமாக மக்களுக்காக உழைக்கக் கூடிய சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்களுக்கு மட்டும் தினந்தோறும் சாப்பாடு, தண்ணீர் மற்றும் ஆரஞ்ச், லெமன், தர்பூசணி போன்ற ஃப்ரெஷ் ஜூஸ் கொடுத்து வருகிறேன்.

உதவிகள்
உதவிகள்

அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கிச் சாப்பிட்டு தங்கள் பணிகளை உற்சாகமாகச் செய்துவருகிறார்கள். இப்பணிக்காக நான் யாரிடமும் அன்பளிப்பாக ஒரு பைசா கூட வாங்குவதில்லை. ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 வரை செலவு செய்கிறேன். பணம் செலவாவதைப் பற்றி துளியும் கவலையில்லை. மக்கள் அனைவரும் நன்றாக இருக்கணும். என்னோடு என் நண்பர்கள் மக்களுக்கு உதவிகள் செய்ய களத்துக்கு வந்துள்ளார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு