Published:Updated:

`அம்மாவுக்குச் செய்யமுடியாத மரியாதை; தோள்கொடுத்த பாட்டி'- சேலத்தின் `பிதாமகள்' சீதா அக்கா!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் சீதா கடந்த 20 வருடங்களாக மயானத்தில் வேலை செய்து வருகிறார்.

சீதா
சீதா

இறந்த உறவுகளை வழியனுப்பப் பெண்களுக்குத் தெருக்கோடி வரைதான் அனுமதி. இறந்தவர், பெண்ணுக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவரின் அழுகை சுடுகாட்டில் கேட்பதில்லை. இதுதான் அந்தக் காலத்துப் பெண்களின் நிலை. ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள் கால்படாத இடமே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து வேலைகளிலும் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். அப்படி மயானத்தில் தன் பிழைப்பை நடத்தி வருகிறார் 32 வயதான சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த சீதா.

சீதா
சீதா

இளம் பெண்ணான இவர் தன் 12 வயது முதல் இந்த வேலை செய்து வருகிறார். அவர் எப்படி மயானத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பதை அறிந்துகொள்ள அவரிடமே பேசினோம். தன்னம்பிக்கையாக தன் பேச்சைத் தொடங்கினார் சீதா அக்கா, ``என் வீட்டில் நான் மற்றும் சகோதரிகள் உள்ளோம். என் சிறிய வயதில், அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து எங்களையும் அம்மாவையும் கொடுமைப்படுத்துவார். ஒரு கட்டத்தில் அப்பாவின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவரை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். அதிக தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் ஒரு மாதம் உயிருடன் இருந்தார். அப்போது அம்மாவின் முகம் தீக்காயங்களால் அதிகமாக வெந்துபோயிருந்தது. அவரது அருகிலிருந்து நான்தான் பார்த்துக்கொண்டேன். என்சிறுவயதிலேயே அதைப் பார்த்ததால் கோரம் எனக்குப் பழகிவிட்டது.

அம்மா இறந்த பிறகு செல்ல இடம் இல்லாத அநாதை போல் நின்ற என்னை, எங்கள் பக்கத்து வீட்டு ராஜம்மா பாட்டிதான் பார்த்துக்கொண்டார். அவர்களது வீட்டிலுள்ள பிள்ளைகளுடன் என்னையும் ஒருத்தியாக நினைத்து வளர்த்தார். என்னைப் படிக்கவைத்து இதுவரை பார்த்துக்கொள்வது என் ராஜம்மா பாட்டிதான். அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவிக்காமல் என்னை ஏற்றுக்கொண்டனர். பாட்டியின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக மயானத்தில்தான் வேலை செய்து வருகிறார்கள். பாட்டி மயானத்துக்குச் செல்லும் போது நானும் உடன் செல்வேன் அப்படிதான் இந்தத் தொழிலுக்குள் நான் நுழைந்தேன். 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன் இந்த வேலைக்கு வந்த பிறகு இது பழகிவிட்டது.

சீதா
சீதா

கடந்த 20 ஆண்டுகளாக இதே மயானத்தில்தான் வேலை செய்துவருகிறேன் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளேன். இந்தப் பணியில் ஒரு மன நிறைவும் திருப்தியும் உள்ளது. அதனால் தொடர்ந்து செய்து வருகிறேன். என் தாய் இறந்தபோது இறுதியாக அவரது முகத்தைப் பார்க்கமுடியாத சூழ்நிலை எனக்கு உருவானது. நான் வெளியூர் சென்று வீடு திரும்புவதற்கு முன்னதாகவே அம்மாவின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். என் அம்மாவுக்கு என்னால் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. அந்த வருத்தம் இன்னும் உள்ளது. ஆனால், இங்கு வரும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் சற்று நிம்மதி பெறுகிறேன்.

தினமும் இங்கு 2 முதல் 3 உடல்கள் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு வருவார்கள். அனைவருக்கும் அவர்களது முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்துவேன். மருத்துவமனைகளிருந்து வரும் உடல்களையும் அதே மரியாதையுடனே அடக்கம் செய்வேன். சில சமயங்களில் இரவு 12 மணிக்கு போன் செய்து அழைப்பார்கள் அந்த நேரத்திலும் நான் வந்து அடக்கம் செய்வேன்.

சீதா
சீதா

முதலில் என் சகோதரி மற்றும் உறவினர்கள் இந்த வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றுதான் கூறினார்கள். ஆனால், நான் அதைக் கேட்கவில்லை. இது எனக்குப் பிடித்திருக்கிறது நான் செய்கிறேன் எனத் தெரிவித்துவிட்டேன். பாட்டியும் என்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி பல முறை வற்புறுத்தியுள்ளார், ஆனால் அதில் எனக்கு இஷ்டம் இல்லை. இந்த வேலை எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறது. கன்னியாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் கடவுள்களுக்குச் சேவை செய்வதில்லையா அதே போல் இறந்த பிறகு இங்கு வரும் அனைவரும் கடவுள் போன்றவர்கள்தான். அவர்களுக்கு நான் சேவை செய்கிறேன்” என அதே தன்னம்பிக்கை குறையாமல் முடித்தார்.

உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் சீதா அக்கா!