Published:Updated:

ஏன் சீருடைப் பணியைத் தேர்வு செய்தீர்கள்? - பிரதமர் மோடி, தமிழக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கலந்துரையாடல்

பிரதமருடன் கலந்துரையாடும் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி
பிரதமருடன் கலந்துரையாடும் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி

`புதிதாகப் பணிக்கு வரும் காவலர்கள், `சிங்கம்’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, மக்கள் தங்களைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நினைக்கக் கூடாது’ என்றார் மோடி.

ஐதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் 28 பெண்கள் உட்பட, 131 இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்களின் 42 வாரப் பயிற்சியை முடித்திருந்தனர். பயிற்சியை முடித்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம், இன்று பிரதமர் மோடி காணொளி மூலமாகக் கலந்துரையாடினார்.

 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் கலந்துரையாடும் பிரதமர்
ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் கலந்துரையாடும் பிரதமர்

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடமும் பேசினார். பிரதமருடன் பேசிய கிரண் சுருதி, தமிழகத்திலுள்ள காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க, தமிழக அரசு அமல்படுத்திவரும் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

``காவல்துறையினருக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் `வெல் பீயிங்’ (well-being) திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். காவல்துறையிலுள்ள அனைத்துப் பிரிவுக் காவலர்களும் கட்டாயமாக இந்தத் திட்டத்தின் கீழ் நல்ல ஆலோசனைகளைப் பெறுகிறார்கள். அவர்களில் யாருக்கேனும், ஏதேனும் தனிப்பட்ட அல்லது துறைசார் பிரச்னை இருப்பின், அவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக அவர்களின் மன அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பணியை இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் செய்ய முடிவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் என்னை மிகவும் ஈர்த்திருக்கிறது” என்று கிரண் சுருதி தெரிவித்தார்.

`பொறியியல் படித்த நீங்கள் எப்படி இந்த துறையைத் தேர்வு செய்தீர்கள்?’ என்று மோடி, கிரண் சுருதியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ``எனக்கு குடிமைப் பணியில் சேர வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்காகப் பொறியியல் படித்த பின்னர் சிவில் சர்வீஸுக்காக என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன்'’ என்றார்.

பிறகு பிரதமர், `சீருடைப் பணியை ஏன் தேர்வு செய்தீர்கள்?’ என்று கிரண் சுருதியிடம் கேட்டார். அதற்கு, ``என்னுடைய பெற்றோரும் நான் சீருடை அணிந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால்தான் காவல்துறையைத் தேர்வுசெய்தேன். கிரண்பேடியைப்போல வர வேண்டும் என்பதற்காகத்தான் என் பெற்றோர், எனக்கு `கிரண் ஸ்ருதி ’என்று பெயர் வைத்தனர்’’ என்று கூறினார். இதைக் கேட்டதும் மோடி புன்னைகைத்தார்.

கிரண் சுருதியிடம் பிரதமர் மோடி தமிழில் ``வணக்கம்’’ கூறிப் பேசத் தொடங்கினார்.

``புதிதாகப் பணிக்குவரும் காவலர்கள் `சிங்கம்’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, மக்கள் தங்களைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நினைக்கக் கூடாது. காவல்துறை அதிகாரிகள் மக்களோடு எளிமையாகப் பணியாற்ற வேண்டும். காவல்துறை உடை அணிந்திருப்பதைப் பெருமையாகக் கருத வேண்டும், அந்த உடையின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது’’ என்று வலியுறுத்தினார் பிரதமர்.

அடுத்த கட்டுரைக்கு