Published:Updated:

`நான் கைத்தட்டலுக்காகப் பேசவில்லை!'- கேள்விகளால் அலுவலர்களைத் திணறடித்த இளைஞர்; வைரலான வீடியோ

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

``ஊராட்சி மன்றத் தலைவர் இப்போதுதான் பொறுப்பேற்றிருக்கிறார். அவரை நான் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. கடந்த 4 வருஷமாக ஊராட்சி செயலர், வட்டார வழங்கல் அலுவலர் இருவரும்தான் பொறுப்பில் இருந்துள்ளீர்கள்."

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. சில இடங்களில் ஆக்கபூர்வமான கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டாலும், பல இடங்களில் பெயரளவில் மட்டுமே நடைபெற்றுள்ளது. மதுரை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மாணவி பேருந்து வசதி கேட்டு தைரியமாகப் பேசினார். அதைப் பாராட்டியதோடு, மதுரை எம்.பி வெங்கடேசன், மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றி மாணவியை நெகிழ்ச்சியடைச் செய்தார். இந்த நிலையில், இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இளைஞர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார்.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

அதிகாரிகளோ, அந்த இளைஞரின் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூற முடியாமல் தவிக்கின்றனர். இதை அந்தப்பகுதி இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ``யாருடைய நேரத்தையும் நான் வீணாக்க விரும்பவில்லை. வெளிப்படையான ஊராட்சி நிர்வாகம் நடக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். யாரையும் துன்புறுத்துவதற்காக இல்லை" எனச் சொல்லி கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கிறார் அந்த இளைஞர். ``கிராம சபைக் கூட்டத்திற்கு வரும்போது, ஊராட்சி செயலர் 31பதிவேடுகள் கொண்டு வர வேண்டும். ஊராட்சி செயலர் அதைக் கொண்டு வந்திருக்கிறார? ஊராட்சி செயலர் செல்வம் இதற்குத் தயவு செய்து விளக்கம் கொடுங்கள்..." என்கிறார்.

அதற்கு, ஊராட்சி செயலரோ, ``31 பதிவேடுகள் கொண்டு வரவில்லை சார், இப்ப உள்ளது மட்டுமே கொண்டு வந்திருக்கிறேன்" என்கிறார்.

``அதுபோகட்டும், கிராம சபைக் கூட்டம் நடக்கும் போது, தொட்டியம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த 16 துறை அலுவலர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். நான் சொல்லலை, 1994 ஊராட்சி நடைமுறைச் சட்டம் சொல்லுது. மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் வந்திருக்கிறார்களா? தயவுசெய்து வட்டார வழங்கல் அதிகாரி பதில் கூற வேண்டும்" என்று இளைஞர் கேட்ட கேள்விக்குப் பதில் ஏதும் இல்லை. தொடர்ந்து, ``தொட்டியம்பட்டி ஊராட்சியில் 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில், வரவு ரூ.55,94,667, செலவு ரூ.44,02724 ஆகும்.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

இதற்கான அறிக்கையை ஊராட்சி செயலர் பொதுமக்கள் முன்பு காண்பிக்க முடியுமா?" என்று கேட்க, ஊராட்சி செயலரோ, ``ரூ. 44,00,000 நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை கையில் இல்லை’ என்று கூற, ``அது தவறு சார் கிராம மக்கள் முன்பு அறிக்கையைக் காட்ட வேண்டும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கிராம சபை நடக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் இப்போதுதான் பொறுப்பேற்றிருக்கிறார். அவரை நான் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. கடந்த 4 வருஷமாக தொட்டியம்பட்டி ஊராட்சிக்கு ஊராட்சி செயலரும், பொன்னமராவதி ஒன்றியத்திற்கு வட்டார வழங்கல் அலுவலரும் பொறுப்பிலிருந்துள்ளீர்கள். உங்களிடம் தானே கேள்வி கேட்க முடியும். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்" என்கிறார்.

அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இளைஞரின் கேள்விக்கு அதிகாரிகள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால், இடையில் குறுக்கிட்ட தற்போது பொறுப்பேற்றிருக்கும் ஊராட்சிமன்றத் தலைவர்,``அடுத்த கூட்டத்தில் அனைத்துப் பதிவுகளும் இருக்கும். கேட்கும் பதிவுகளைக் கூட்டத்தில் தூக்கிப்போடுவேன். அதுதான் வெளிப்படைத் தன்மையாக இருக்கும்" என்று ஆவேசமடைந்தார்.

தொடர்ந்து அந்த இளைஞர், ``கடந்த சில சமூகத் தணிக்கையில் மட்டும் லட்சக்கணக்கில் கையாடல்கள் நடந்துள்ளது. தொட்டியப்பட்டி கிராம மக்களின் வரிப்பணம், 2018-19ம் ஆண்டில் ரூ.39,47,532 கையாடல் நடந்துள்ளது. எந்தச் சமூகத் தணிக்கைக்கும் நடவடிக்கையும் இல்லை. பைல் அனைத்தும் பெண்டிங்கில் உள்ளது.

முதியோர் உதவித்தொகைக்கு ரூ.3000 லஞ்சம்... இளைஞர்களின் கேள்வியால் அதிர்ந்த தென்பசியார் கிராமசபை!

எந்தச் சமூகத் தணிக்கைக்கு நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்றார். அதற்கு, அலுவலரோ, ``நம் மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் தலைமையில் சமூகத் தணிக்கைக்கான கூட்டங்கள் நடக்கும். பாராளுமன்ற மற்றும் ஊராட்சிக்கான தேர்தல் வந்ததால், நடக்கவில்லை. விரைவில் கூட்டம் நடக்கும். அதில் நடவடிக்கை எடுப்போம்" என்றார். தொடர்ந்து அந்த இளைஞர், ``கிராம சபைக் கூட்டத்தில் வரவு செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையான கிராம சபைக் கூட்டம், எதுவுமே இல்லாமல் நடத்துவதற்குப் பெயர் கிராம சபைக் கூட்டம் இல்லை. இதை மக்களே முடிவு செய்யட்டும்" என்று கூற, கூட்டத்திலிருந்த அனைவரும் சிறிது நேரம் மௌனம் காத்தனர்.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

அதிகாரகளைக் கேள்வியால் துளைத்தெடுத்த இளைஞரின் பெயர் ஞானசேகர். அவரிடம் இது தொடர்பாகப் பேசினோம், ``மக்கள் பாதையின் புதுக்கோட்டை மாவட்ட நீதி திட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். நமது ஊராட்சியிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் கிராம சபைக்கூட்டத்திற்கு முன்பாகவே தரவுகளைத் திரட்டினேன். ஏற்கெனவே, தொட்டியம்பட்டி ஊராட்சியில் 2016-19 களில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருவதாக கலெக்டரிடம் மனு கொடுத்தேன். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத்திற்கு இணையானது கிராம சபைக் கூட்டம் என்பார்கள்.

அதற்காகவே, தரவுகளுடன் கிராம சபைக்கூட்டத்தில் பேசினேன். நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையிலும் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் வரையிலும் மௌனம் காத்தனர். இதனால், பொதுமக்களே அதிர்ச்சியில் இருந்தனர். கூட்டம் முடிந்த பிறகு சிலர் எனக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனாலும், நான் கைத்தட்டலுக்காகப் பேசவில்லை. மக்களிடம் இந்தத் தகவல்கள் எல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பேசினேன். இளைஞர்கள் குறிப்பாகப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பொதுவெளியில் இதுபோன்ற ஊழல்களுக்கு எதிராகப் போராட வேண்டும்" என்றார்.

பின் செல்ல