Published:Updated:

நாகை: `கொரோனா இல்லை... இருக்கு; மன உளைச்சலில் நாடு திரும்பிய இளைஞர்!’ - நடந்தது என்ன?

நாகை
நாகை

ஒரு வார முடிவில் ஊருக்குப் புறப்பட்டபோது மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்து, இரண்டே நாளில் `பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்திருப்பதாகக் கூறி, `மருத்துவமனையில் தங்குகிறீர்களா அல்லது இந்த லாட்ஜிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய இளைஞருக்கு முதலில் `கொரோனா இல்லை’ என்றும், பிறகு `இருக்கிறது’ என்றும் அலைகழிக்கப்பட்டதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது மீண்டு வந்திருக்கிறார்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை

நாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு. இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்துவருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த  ஊருக்கு வந்து செல்வார். சிங்கப்பூரில் 15 தினங்களுக்கு ஒரு முறை அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அதன்படி சிங்கப்பூரில் மூன்று முறை கொரோனா டெஸ்டுகள்  எடுக்கப்பட்ட பாலகுருவுக்கு `நெகட்டிவ்’ என்றே ரிசல்ட் வந்திருக்கிறது.

இந்தநிலையில், கடந்த 22 -ம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கம்பெனி மருத்துவரிடம் முழு உடல் பரிசோதனை செய்து, `கொரோனா தொற்று இல்லை’ என்று சான்றிதழ் பெற்று திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறார். திருச்சி ஏர்போர்ட்டில் அவருக்கு கொரோனா டெஸ்ட்  எடுக்கப்பட்டு, அங்கிருந்து  நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மறுநாள் காலை கொண்டு வந்து,  மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவமனை சுகாதாரச்  சீர்கேட்டின்  மையமாக இருப்பதாகக் கூறும் அவர், பழுதடைந்த படுக்கைகள், துர்நாற்றம் வீசும் கழிவறைகள் என அங்கு தங்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் வழிகாட்டிய தனியார் லாட்ஜ் ஒன்றில் வந்து தங்கியிருந்திருக்கிறார். நாளொன்றுக்கு ரூ. 500 வாடகை. உணவுச் செலவுகள் தனி. இரண்டு நாள்களில் தர வேண்டிய கொரோனா டெஸ்ட்  முடிவை ஒரு வாரம் கழித்து பாலகுரு வலியச் சென்று கேட்டபோதுதான் சொல்லியிருக்கிறார்கள்.

``உங்களுக்ககு `நெகட்டிவ்’  என்று ரிசல்ட் வந்திருக்கிறது. இருந்தாலும் நீங்கள் ஒரு வாரம் கழித்துதான் ஊருக்குச் செல்ல முடியும்’’ என்று கூறியிருக்கிறார்கள். அதன்படி ஒரு வார முடிவில் ஊருக்குப் புறப்பட்டபோது மீண்டும் ஒரு டெஸ்ட்  எடுத்து, இரண்டே நாளில்  `பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்திருப்பதாகக் கூறி, ``மருத்துவமனையில் தங்குகிறீர்களா அல்லது இந்த லாட்ஜிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

மயிலாடுதுறை அரசு பெரியார் பொது மருத்துவமனை
மயிலாடுதுறை அரசு பெரியார் பொது மருத்துவமனை

அதன் பிறகு நடந்தவற்றை பாலகுரு நம்மிடம் விளக்குகிறார், ``சிங்கப்பூரில் மூன்று முறையும், திருச்சி ஏர்போர்ட்டில் ஒரு முறையும், நாகையில் ஒரு முறையும் என ஐந்து முறை எனக்கு `நெகட்டிவ்’ என்று ரிசல்ட் வந்த நிலையில், திடீரென ஒரு டெஸ்ட் எடுத்து, `பாசிட்டிவ்’ என்று சொல்லி அந்த மருத்துவமனையில் தங்க முடியாது என்பது தெரிந்தும், `லாட்ஜில் தனிமைப்படுத்திக்கொள்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள். இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

மேலும் `பாசிட்டிவ்’ என்பதற்கான ஆதாரம் எதையும் அவர்கள் எனக்குக் காட்டவில்லை. வாய்மொழியாகவே சொல்கிறார்கள். மேலும், 15 நாள்கள் நான் லாட்ஜில் தங்கினால் அதன் மூலம் சிலருக்கு ஏதோ லாபம் கிடைக்கும்போல் எனக்குத் தோன்றியது. எனவே, `என்னை மயிலாடுதுறைக்கு அனுப்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். அதன்படி, மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனைக்கு என்னைக் கூட்டி வந்தார்கள். இங்கு எல்லாமே சிறப்பாக இருந்தன. இங்கு மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்ததில் `நெகட்டிவ்’ என்று ரிசல்ட் வந்ததால் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால், நானும் என் குடும்பத்தினரும் அடைந்த மன உளைச்சலை வார்த்தைகளில் சொல்ல முடியாது. தஞ்சை, திருவாரூர் போன்ற இடங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை ஐந்து நாள்கள் மட்டுமே வைத்திருந்து அனுப்பிவிடுகிறார்கள். நாகையில்தான் இவ்வளவு பிரச்னைகள்" என்றார்.

நாகை: `3 குடும்பத்தாருக்கு முடி வெட்டக் கூடாது!' - அதிர்ச்சி கொடுத்த கிராமப் பஞ்சாயத்து

இது பற்றி  நாகை அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பு அலுவலர் லியாகத் அலியிடம் பேசினோம். ``வெளிநாட்டிலிருந்து  வருபவர்களுக்கு  இரண்டு  டெஸ்ட் எடுக்கப்படும். முதல் டெஸ்ட்டில் தெரியாது. இரண்டாவது டெஸ்ட்டில்தான் சரியான முடிவு தெரியும். `பாசிட்டிவ்’ என வந்தால், நாகை அல்லது மயிலாடுதுறை மருத்துவமனையில்தான் இருக்க முடியும். மறுபடி அவருக்கு மயிலாடுதுறையில் டெஸ்ட் எடுக்க வாய்ப்பில்லை. இதெற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு