தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிற பிரச்னைகளை விகடனிடம் பகிர்ந்து கொள்பவர்களுக்கு, `நாங்கள் இருக்கிறோம் உதவிக்கு' என்று பலமுறை கைகொடுத்திருக்கிறார்கள் விகடன் வாசகர்கள். 'என் சின்னஞ் சிறிய மகளுக்கு மூளையில் கட்டி', 'வாழ்வாதாரத்துக்குத் தள்ளுவண்டி வேண்டும்', 'குடல் பொசுங்கிக் கிடக்கும் கணவரையும் குடும்பத்தையும் காப்பாற்ற உதவுங்கள்' என்று எத்தனையோ கோரிக்கை குரல்களுக்கு நம் விகடன் வாசகர்கள் ஓடி வந்து பண உதவி செய்திருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வரிசையில், சென்ற வருடம் அக்டோபர் மாதம், `என் காலை மட்டுமல்ல, வாழ்க்கையையும் பறிச்சிடுச்சு கறுப்புப் பூஞ்சை' என்று நம்மிடம் கண்ணீருடன் பேசியிருந்தார் விழுப்புரம் இளைஞர் விஜயகுமார். அவருடைய கண்ணீரையும் துடைத்திருக்கிறார்கள் முகமறியா விகடன் வாசகர்கள் பலர். இதோ, இரண்டு தினங்களுக்கு முன் அழைத்தவர், ''செயற்கைக் கால் பொருத்தியாச்சு மேம். எனக்கு உதவிசெஞ்ச விகடன் வாசகர்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்'' என்று அழுகையும் சிரிப்பும் கலந்த உணர்ச்சிக்கலவையாக பேசப் பேச, அவருடைய மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிஜயகுமாரைப் பற்றிய சின்னதொரு ஃப்ளாஷ்பேக். இவர் விழுப்புரத்தை அடுத்த தலைக்காணி குப்பத்தைச் சேர்ந்தவர். அப்பா விவசாயி. அம்மா பால்வாடி ஸ்கூல் டீச்சர். டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தவுடன், ஆஸ்துமாவுடன் போராடிக்கொண்டிருந்த அப்பாவை வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, தான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இரண்டு வருடங்கள் கழித்து சொந்த ஊரில் காய்கறிக் கடை திறந்திருக்கிறார்.
2021 ஏப்ரல் மாதம். விஜயகுமாரின் வலது கால் மீது தவறுதலாக மண்வெட்டி விழுந்து காயம் ஏற்படுத்த, சின்னக் காயம்தானே என டிடி இன்ஜெக்ஷன் போடாமல் விட்டிருக்கிறார். விளைவு, ஐந்து நாள்களில் காயம் செப்டிக் ஆகிவிட்டது. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் விஜயகுமார். செப்டிக் ஆகி கறுப்பான தசைப்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அதன் பிறகும் கால் வீங்கி வலியெடுத்துக்கொண்டே இருக்க, மறுபடியும் மருத்துவமனை சென்றிருக்கிறார். அங்கு, விஜயகுமார் காலில் கறுப்புப் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள், விஜயகுமாரின் வலது காலை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள்.
''என்னோட காலைக் காப்பாத்த எங்களுக்குன்னு இருந்த நிலத்தையும் அப்பா வித்துட்டாரு. அப்படியும் என் காலை காப்பாத்த முடியலை. செயற்கைக் கால் வைக்க ஒண்ணு, ரெண்டு லட்சம் செலவாகும்னு சொல்றாங்க. இப்போ என்னை காப்பாத்த அப்பா மறுபடியும் வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டார். குடும்பத்தை காப்பாத்த வேண்டிய நான் ஒரு கால் இல்லாம வீட்டுக்குள்ளேயே கிடக்கிறேன்'' என்று தன் நிலைமையைக் கண்ணீருடன் விகடனிடம் பகிர்ந்திருந்தார் விஜயகுமார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவருடைய பேட்டியை விகடன் டிஜிட்டலில் பதிவேற்றினோம். அதனுடன், விஜயகுமாரின் அம்மா பேசியிருந்த, தன் மகனுக்கு உதவி செய்யக்கோரிய வீடியோவையும் இணைத்திருந்தோம். மேலும், 'விஜயகுமாருக்கு உதவ விரும்புபவர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

விஜயகுமாருக்கும் அவரின் அம்மாவுக்கும் விகடன் வாசகர்கள் பலர் தங்கள் ஆறுதல்களைப் பின்னூட்டத்தில் தெரிவிக்க, சில வாசகர்கள் help@vikatan.com மூலம் அவருக்குப் பண உதவியும் செய்தார்கள். அவையனைத்தும் விஜயகுமாரின் வங்கிக்கணக்குக்குச் சென்றது. இதோ, சில தினங்களுக்கு முன் இழந்த கால் கிடைத்துவிட்டது விஜயகுமாருக்கு. நம்மிடம் பேசியபோது, ''மேம், எனக்குச் செயற்கைக்கால் பொருத்தியாச்சு. நான் இப்போ நடக்க ஆரம்பிச்சிட்டேன். விகடன் வாசகர்கள் செஞ்ச பண உதவியாலதான் நான் மறுபடியும் நடக்க ஆரம்பிச்சிருக்கேன். அவங்க கொடுத்த ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயை முன்பணமா கொடுத்துதான் செயற்கைக்கால் பொருத்திக்கிட்டேன். முகம்கூட தெரியாத அந்த நல்ல உள்ளங்களுக்கும், விகடனுக்கும் நானும் என் குடும்பமும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்'' - குரல் அழுகையில் உடைந்தது. இந்த முறை அது ஆனந்த அழுகை!