Published:Updated:

`கொரோனாவைக் கண்ணுல காட்டுங்க..!'- வாக்குவாதம் செய்த இளைஞரைக் கவனித்த புதுக்கோட்டை போலீஸ்

வாக்குவாதம் செய்த இளைஞர்
வாக்குவாதம் செய்த இளைஞர்

ஒருவர் மூலம் ஒருவருக்கு எளிதில் பரவும் நோய். அதனால்தான் நாம் வெளியே வரக்கூடாது என்று சொல்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த வீடியோவை எடுத்தோம்"

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று போலீஸார் வலியுறுத்துவதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் உயிரையும் பணயம் வைத்து போலீஸார் பணியாற்றி வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் போலீஸாரின் அறிவுறுத்தல்களைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை. புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறந்தாங்கிக்கு வந்துள்ளார். அங்கு பணியிலிருந்த பெண் போலீஸார் அந்த இளைஞரை வீட்டுக்குப் போகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ``நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன் இது என்னுடைய கோட்டை'' என்று கூறி ``உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று கூறி, அடம்பிடித்திருக்கிறார். அதன்பின்பு அங்கு வந்த எஸ்.ஐ ஸ்டேஷனில் வைத்து பேசுவதற்கு அழைத்துச் சென்று தங்களது பாணியில், பேசுகின்றனர்.

வாக்குவாதம் செய்த இளைஞர்
வாக்குவாதம் செய்த இளைஞர்

அதன்பின்பு ``வீட்டை விட்டு இனி வெளியே வருவீயா?' என்று அந்த இளைஞரிடம் கேட்க, `சத்தியமா இனி வரமாட்டேன்' என்று கூறுகிறார். இதை இரண்டு வீடியோவாக எடுத்து போலீஸார் வெளியிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞன், "யாரும் வரக்கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா நீங்க மட்டும் வெளியே நிக்கிறீங்க. உங்களைக் கொரோனா தாக்காதா?'' என்று கேட்க, பெண் போலீஸார், " சிஎம் தான் அறிவுறுத்தியிருக்காரு. அதைப் போய் சிஎம் கிட்ட கேளு'' என்கிறார். அதற்கு அந்த இளைஞன், "சிஎம்ம இங்க வரச்சொல்லுங்கள், இது என் ஊரு, என் கோட்டை. ஓட்டுக்கேட்டு மட்டும் வருகிறாருள்ள, இப்ப வரச்சொல்லுங்கள்". பெண் போலீஸ், "நீ ஹெல்மெட் போடலை, மாஸ்க் கட்டாம வந்திருக்கே இது சரியா, அதுக்கு மட்டும் பதிலைச் சொல்லு என்று கேட்கிறார். அதற்கு "என் உசுரு என் கையில், உங்களுக்குக் கொரோனா வந்திருச்சுன்னு என்னால எடிட் பண்ணி அனுப்ப முடியும்" என்கிறார். மேலும் அந்த இளைஞர் ``கொரோனாவைக் கண்ணில் காட்டுங்க'' என்றும் பெண் போலீஸாரிடம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் முதல் வீடியோ முடிகிறது.

இரண்டாவது வீடியோவில், எஸ்ஐ, "வீட்டுக்குப் போங்கன்னு முதலமைச்சர் வந்து சொன்னாதான் கேட்பீங்களா, அறந்தாங்கிக்கு எதற்கு வந்த, பெரிய சைன்டிஸ்ட்டாடா நீ, உனக்கு கொரோனாவைக் கண்ணுல காட்டணுமா, கண்ணுக்குத் தெரியாதது தாண்டா நுண்ணுயிரி, அத உனக்கு கண்ணுல காட்டணுமா, படிச்சிருக்கியா, உயிரைப் பணையம் வச்சு டாக்டர்ங்க, போலீஸ்காரங்க வேலைபார்த்துக்கிட்டு இருக்கோம். நீ சட்டம் பேசுக்கிட்டு இருக்க, இனிமே சட்டம் பேசுவியா? என்று லத்தியில் அந்த இளைஞனின் கையில் அடிக்கிறார். உடனே, நான் சட்டம் பேச மாட்டேன். மாஸ்க் போட்டுப் பாதுகாப்பாக இருப்பேன். வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்" என்கிறார்.

வாக்குவாதம் செய்த இளைஞர்
வாக்குவாதம் செய்த இளைஞர்

எஸ்ஐ சரவணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இதுபோன்று சொல்வதைக் கேட்காத சில இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் ஜாலி ரெய்டு வந்திருக்கிறார். பப்ளிசிட்டிக்காக, இந்த வீடியோவை எடுக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவருக்கு எளிதில் பரவும் நோய். அதனால் தான் நாம் வெளியே வரக்கூடாது என்று சொல்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த வீடியோவை எடுத்தோம்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு