குமரி: பிரசவத்தின்போது இறந்த இளம்பெண்; மருத்துவமனை கண்ணாடி உடைப்பு! - போராட்டத்தில் உறவினர்கள்

மருத்துவமனையில் அனுபவமிக்க எந்த டாக்டரும் இல்லாததால் பிரசவத்தில் ரத்தப்போக்கு அதிகமாகி பவித்ரா இறந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரும் பவித்ரா (26) என்ற இளம்பெண்ணும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கர்ப்பிணியான பவித்ரா கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றுவந்துள்ளார். பின்னர் பிரசவத்துக்காகவும் அதே தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த திங்கள்கிழமை காலை சுமார் 7 மணியளவில் பிரசவ வலி எற்பட்டதையடுத்து டாக்டர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
பவித்ராவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே பவித்ராவுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கை நிறுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பவித்ராவை கன்னியாகுமரியில் உள்ள வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பவித்ரா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்திரமடைந்த பவித்ராவின் உறவினர்கள், கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் அங்கு சென்று இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆஸ்பத்திரியில் அனுபவமிக்க எந்த டாக்டரும் இல்லாததால் பிரசவத்தில் ரத்தப்போக்கு அதிகமாகி பவித்ரா இறந்ததாக உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல பிரசவங்கள் அங்கு நடந்துள்ளதாக டாக்டர்கள் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், அதிகாரிகள் இதுகுறித்து விசாரிப்பதாகக் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜான்பிரிட்டோ கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார். பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டறிந்தார். ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த இணை இயக்குநரின் காரை விடாமல் முற்றுகையிட்டு ஆஸ்பத்திரியை மூடவேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் ஆவேசமாகக் கூறினர்.

அப்போது கூட்டத்தில் நின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் திடீரென மருத்துவமனை மீது கவ்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கண்ணாடி உடைந்து சிதறியது. இதையடுத்து போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினார். ரோட்டிற்கு வந்த இளைஞர்கள் ஆஸ்பத்திரியின் வாசலில் அமர்ந்து மறியல் செய்ததோடு அங்கிருந்த ஆஸ்பத்திரி விளம்பர போர்டையும் உடைத்தனர். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் மறியல் செய்த பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இளம் பெண் மரணத்தைத் தொடர்ந்து உறவினர்கள் அடிக்கடி போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.