விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பிரம்மன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி கிராமத்தில் இயங்கிவருகிறது.
நாக்பூர் உரிமம் பெற்று ஃபேன்சி ரக பட்டாசுகள் இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து கிளம்பும் நேரத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் ஓர் அறை தரைமட்டமானது.
இதையடுத்து தகவலறிந்த வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தில், சாத்தூரை அடுத்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ராமர் (20) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பட்டாசு வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் ஆலை உரிமையாளர் பிரம்மன், ஆலை மேலாளர், ஆலை ஃபோர்மேன் ஆகிய மூன்று பேர்மீது ஆஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்திவருகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று பேரைத் தேடிவருகின்றனர்.