Published:Updated:

`உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன்!’-கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு குடும்பத்தை நெகிழ வைத்த இளைஞர்

சீக்கிரமே நல்லது நடக்கும் எனச் சொன்னீங்க. அதுபோலவே எங்களை யாருன்னே தெரியாத ஒருத்தர் பெத்த பிள்ளை போல் இருந்து எங்க கஷ்டத்தை என்னன்னு கேட்டுச்சு. என்ன கஷ்டம் என ஆதரவா ஒரு வார்த்தை கேட்கும் போதே எனக்கு கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சுருச்சு என்றார் ஜோதி.

 நடராஜன் ஜோதி
நடராஜன் ஜோதி

கஜா புயலின் போது சேதமடைந்த குடிசை வீட்டைச் சீரமைக்க முடியாத வறுமை, மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்த ஒரத்தநாடு பெற்றோர் குறித்து விகடனில் எழுதியிருந்தோம். இதைப் படித்த வாசகர் ஒருவர் அவருக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி உடனே அந்தப் பணிகளை தொடங்கியுள்ளார். இப்பதான் என் பொண்ணுமுகத்தில் முதல் சிரிப்பைப் பார்க்க முடிகிறது என அந்தப் பெற்றோர் தெரிவித்தனர்.

வீடு கட்டும் பணி
வீடு கட்டும் பணி

ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருவதால் குடும்பத்தை நடத்தும் அளவிற்குப் போதுமான வருமானம் இல்லை. இதனால் வறுமையில் தவித்துக்கொண்டிருக்கிறது இவர் குடும்பம். இவருடைய மனைவி ஜோதி இவர்களுக்கு ஒரு பெண், மூன்று ஆண் என மொத்தம் நான்கு பிள்ளைகள். இதில் மகள் ஸ்ரீலேகா, மகன் தவசி ஆகியோர் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தானாகச் செல்ல முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பதுதான் பெரும் வேதனை.

இந்த நிலையில் கடந்த வருடம் வீசிய கஜா புயல் இவர்களின் குடிசை வீட்டையும் கலைத்துப்போட்டுச் சென்று விட்டது. அதன் பிறகு அரசு அறிவித்த நிவாரணம் ஒரு ரூபாய் கூட இந்தக் குடும்பத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. தன்னார்வலர்கள் கொடுத்த தார்ப்பாயைக் கொண்டு கூரை அமைத்தனர். நாள்கள் ஓடிய நிலையில் அந்த தார்ப்பாயிலும் ஓட்டை விழுந்தது. இதனால் மழை பெய்தால் ஒழுகும் நிலைக்குச் சென்றுவிட்டது.

பழைய வீடு
பழைய வீடு

குடிசை வீட்டின் கூரையைச் சீரமைக்க முடியாத வறுமை, சுவர்களின் இடிபாடுகளுக்கு இடையிலும் இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகள், ஒரு மகனுக்குத் தொண்டையில் பிரச்னை என அத்தனை இன்னல்களையும் தாண்டி ஒரு விடிவு பிறக்காதா எனத் தவித்துக்கொண்டிருந்தனர் அந்தப் பெற்றோர். நமக்கு வறுமையைக் கொடுத்த ஆண்டவன், மாற்றுத்திறனாளி பிள்ளைகளையும் கொடுத்து நம்மை மேலும் வேதனையில் தவிக்கவிட்டுள்ளானே என நினைத்து இருவரும் கண்ணீர் வடிக்காத இரவுகளே இல்லை.

இந்த நிலையில் நடராஜன், ஜோதி குறித்த தகவல் நமக்குக் கிடைத்ததும் ``வருஷம் ஒண்ணாச்சு ஒரு ரூபா கூட வரல மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்” என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டோம். சவுதியில் பணிபுரியும் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இளைஞர் புவனேஷ்வரன் என்பவர் இந்தச் செய்தியைப் படித்து மனம் கலங்கியதுடன், உடனே நண்பர் ஒருவரை நடராஜன் வீட்டுக்கு அனுப்பி வைத்து இது உண்மைதானா என விசாரிக்க வைத்துள்ளார்.

வீடு கட்டும் பணி
வீடு கட்டும் பணி

நேரில் சென்றதும் நடராஜன், ஜோதி தம்பதியர் படும் அவஸ்தைகளைக் கண்டு கலங்கியதுடன் உடனே புவனேஸ்வரனிடம் கூறியிருக்கிறார். சற்று யோசிக்காமல் உடனே அந்தக் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். அப்போது நடராஜன் தான் குடியிருக்கும் வீடு அவருக்கு சொந்தமானதில்லை எனத் தெரியவருகிறது. இதையடுத்து நடராஜன் அருகிலேயே இருந்த தனக்குச் சொந்தமான ஒரு இடத்தைக் காண்பித்து அந்த இடத்தில் கட்டிக்கொடுங்க என்றிருக்கிறார். புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமன் செய்து மேடாக்கினர்.

`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..!’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்

இந்தப் பணிகளைச் செய்வதற்காக தனது நண்பரான ஈஸ்வர் என்ற இன்ஜீனியரை நியமித்தார் புவனேஸ்வரன். அதன் பிறகு வீடு கட்டுவதற்கான பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின. தரையில் கான்கிரீட் தளம் அமைத்து நான்கு புறமும் ஹாலோபிளாக் கல்லால் சுவர் எழுப்பி, ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு கூரை அமைத்து வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இப்போதுதான் நடராஜன் தம்பதியின் முகத்தில் ஓரளவிற்கு நிம்மதி தெரிகிறது.

வீடு கட்டும் பணி
வீடு கட்டும் பணி

இது குறித்து புவனேஸ்வரனிடம் பேசினோம், ``கஜா புயல் சமயத்தில் நான் எனது நண்பர்களோடு இணைந்து குடிசை வீட்டில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உதவிகளைச் செய்தோம். அந்தச் சமயத்தில் இவர்களைப் பற்றி எனக்கு தெரியாமல் போய்விட்டது. மாற்றித்திறனாளி பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருக்க முறையான வீடு இல்லாமல் இந்தப் பெற்றோர் அடைந்த துயரத்தைப் பற்றி விகடனில் படித்தேன்.

உடனே இவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என முடிவு செய்து என நண்பர் ஈஸ்வர் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பியதுடன் உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன். மாற்றித்திறனாளி பிள்ளைகள் இருப்பதால் இரண்டு அறைகள் இருப்பது மாதிரி வீட்டைக் கட்டச் சொன்னேன். அத்துடன் மின்சாரம் இணைப்பு கொடுத்து மின்விசிறி மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்.

பிள்ளைகள்
பிள்ளைகள்

அவர் களத்தில் இருந்து அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். மொத்தம் ரூ.50,000 மதிப்பில் இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் எனக்குத் தெரிந்த டாக்டர்களிடம் பேசி வருகிறேன். அந்தப் பிள்ளைகளுக்கு என்ன பிரச்னை எனப் பார்த்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

ஜோதியிடம் பேசினோம், ``எங்க நிலையைப் பார்த்தப்பவே ஒண்ணும் கவலை படாதீங்கம்மா சீக்கிரமே நல்லது நடக்கும் எனச் சொன்னீர்கள். அது போலவே எங்களை யாருன்னே தெரியாத ஒருத்தர் பெத்த பிள்ளை போல் இருந்து எங்க கஷ்டத்தை என்னன்னு கேட்டுச்சு. என்ன கஷ்டம் என ஆதரவா ஒரு வார்த்தை கேட்கும் போதே எனக்கு கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சுருச்சு. இப்ப வீடு கட்டித் தரேன் எனக் கூறி அந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். என் பிள்ளைகளுக்கும் சிகிச்சை அளிப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

 நடராஜன் ஜோதி
நடராஜன் ஜோதி

உங்களுக்கு புண்ணியாமா போகும் முதலில் என் பிள்ளைகளின் தலையெழுத்தை மாத்துங்கப்பா எனச் சொன்னேன். வீடு கட்டுற வேலையைப் பார்க்கும் போது என் மகள் முகத்தில் முதல் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. இனி எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்பிக்கை வந்திருக்கு. இதற்கு காரணமாக இருந்த விகடனை எங்க வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம்” என்றார்.