Published:Updated:

`எங்கு ஊருக்கு வராதீங்க..!' - மலைவாழ் கிராம இளைஞர்களின் முயற்சிக்கு ராயல் சல்யூட் அடித்த காவலர்கள்

கொரானோ தடுப்பு பெரம்பலூர் போலீஸார்
கொரானோ தடுப்பு பெரம்பலூர் போலீஸார்

எங்களது கிராமத்தையே சுற்றி லாக்டவுண் செய்தோம். அதன் பிறகு மக்களின் தேவைகள் என்ன என்பதை தேடி அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம்.

கொரானோ வைரஸ் பரவுதலைத் தடுக்க மலையாளப்பட்டி கிராமத்துக்குள் உள்ள இளைஞர்கள், `யாரும் தயவு செய்து எங்கள் கிராமத்திற்கு வராதீர்கள். உங்களால் நாங்களும், பிள்ளைகளும் பாதிக்கப்படுவோம்' என்று கிராமத்தை லாக்டவுண் செய்திருக்கிறார்கள். அத்தோடு கொரானோ எதிர்கொள்ள ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலும் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து பெரம்பலூர் போலீஸார் ராயல் சல்யூட் அடித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

கொரோனோ வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் இந்த வைரஸ், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனோவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தமுடியாமல் மற்ற நாடுகள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனைகள் கொடுப்பது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மேலும், காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். கொரானோ ஊரடங்கு எதிரொலியாக வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கள் ஊருக்கு வராத அளவுக்கு அக்கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.

கொரானோ தடுப்பு பெரம்பலூர் போலீஸார்
கொரானோ தடுப்பு பெரம்பலூர் போலீஸார்

அதனோடு எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், சமூக இடைவெளியோடு இருங்கள், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசின் அறிவிப்பை மக்களிடம் வலியுறுத்தி வந்துள்ளதோடு ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும் நடத்தி வருகிறார்கள் அந்த இளைஞர்கள். இந்த நிலையில், கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணிக்குச் சென்ற காவலர்கள், இளைஞர்களின் செயலைக் கண்டு வியந்து, அவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பாராட்டுகளோடு ராயல் சல்யூட் அடித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அக்கிராமத்து இளைஞர்கள் சிலரிடம் பேசினோம். ``கொரானோ வைரஸால் உலக நாடுகளே நிலைகுலைந்து நிற்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து தனித்திருக்க என்ன வழி என்பதை எங்களது நண்பர்களிடம் பேசியபோது முதலில் யாரும் கிராமத்தை விட்டு வெளியேறவும் கூடாது. வெளியே உள்ளவர்கள் உள்ளே வரவும் கூடாது என்பதை முடிவு செய்து எங்களது கிராமத்தையே சுற்றி லாக்டவுண் செய்தோம்.

பணியில் இளைஞர்கள்
பணியில் இளைஞர்கள்

அதன் பிறகு மக்களின் தேவைகள் என்ன என்பதைத் தேடி அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறோம். அத்தோடு நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப் இதற்காகவே ஆரம்பித்திருக்கிறோம். அதில் எங்களுடைய ஸ்டேட்டஸே எங்களது கிராமத்துக்கு யாரும் தயவுசெய்து வராதீர்கள். உங்களால் எங்களது பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப் பழி பாவத்துக்கு ஆளாகாதீர்கள் என்பதுதான். எங்களின் முயற்சிகளால் ஒரு சிலர் மாற வாய்ப்பிருக்கிறது என்பதால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். மக்களிடம் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக எங்களது முயற்சி" என்றார் முகமலர்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு