Published:Updated:

`சத்தமில்லாமல் உதவும் போலீஸ் எஸ்.பி-கள்; 2 மணிநேரப் பணி!' - மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இளைஞர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல்துறையினர்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல்துறையினர்

`எங்கள் அன்றாட அலுவலக வேலை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறோம். தினமும் இரவு 2 மணிநேரம் இதற்காகச் செலவிடுகிறோம்."

கொரோனா லாக்டெளனால் வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சத்தமில்லாமல் உதவிவருகிறது சென்னையைச் சேர்ந்த `Lit The Light’ அமைப்பு. உதவி கேட்பவரின் வீடு தேடி மளிகைப் பொருள்கள் செல்கின்றன. அதைக் கொண்டுசென்று கொடுப்பது காவல்துறையினர். சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதுவரை 22 மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாற்றுத்திறனாளி குடும்பங்கள், இந்த அமைப்பினால் பயன்பெற்றிருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல்துறையினர்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல்துறையினர்

இந்த அமைப்பின் நிறுவனர் பரத், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் அன்றாட அலுவலகப் பணிகளுடன், இந்த உதவிகளையும் செய்துவருகிறார். பாராட்டுக்குரிய இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசுகிறார் பரத்.

``லாக்டெளன் தொடங்கிய பிறகு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சில மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினோம். படிப்படியாய்ப் பல மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் உதவிகள் கேட்டார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் பேசி அனுமதி வாங்குவோம். அவர்கள் மூலம் உதவி கேட்கும் மக்கள் வசிக்கும் ஊரிலுள்ள காவல்துறையினர் தங்கள் பகுதியிலுள்ள ஒரு கடையில் மளிகைப் பொருள்களை ஆர்டர் செய்துவிட்டு எங்களுக்குத் தகவல் சொல்வார்கள். நாங்கள் கடைக்கு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவோம். பிறகு மளிகைப் பொருள்களை காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே கொண்டுசென்று கொடுப்பார்கள் அல்லது ஓரிடத்தில் அனைவரையும் வரவழைத்தும் கொடுப்பார்கள்.

பரத்
பரத்

எங்கள் அமைப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறது. பார்வையற்றோர் மட்டுமல்லாமல் எல்லா மாற்றுத்திறனாளிகளுமே லாக்டெளனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுகிறோம். குறிப்பாக, குடிசைத் தொழில் செய்வோர், ரயில் மற்றும் பேருந்துகளில் சில பொருள்களை விற்பனை செய்வோர், வேலைக்குச் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்” என்கிறார்.

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 18 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுக்கிறது இந்த அமைப்பு. இதன் விலை 1,200 ரூபாய். புதிதாய் உதவிகள் கேட்டுள்ள 500 குடும்பங்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டும் பணிகளில் கவனம் செலுத்திவருகின்றனர்.

 ‘Lit The Light’ அமைப்பினர்
‘Lit The Light’ அமைப்பினர்

``தற்போதைய பணிகளில் எங்கள் அமைப்பிலுள்ள பத்துப் பேர் ஈடுபடுகிறோம். எங்கள் அன்றாட அலுவலக வேலை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறோம். தினமும் இரவு இரண்டு மணிநேரம் இதற்காக நேரம் செலவிடுகிறோம். எங்கள் பணம் தவிர, நண்பர்கள் சிலர் உதவியுடன் நிதி திரட்டுகிறோம். இதுதான் மிகச்சவாலாக இருக்கிறது. சில மாவட்ட கண்காணிப்பாளர்கள், நாங்கள் அடையாளம் காட்டும் சில மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருள்கள் கிடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களும் சத்தமின்றி உதவுகிறார்கள். மக்களின் பசியைப் போக்க சிறு உதவியாய் இருப்பதில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி” என்று நிறைவாகக் கூறுகிறார் பரத்.

அடுத்த கட்டுரைக்கு