Published:Updated:

``இல்லாதவங்க எடுத்துக்கங்க, விருப்பமுள்ளவங்க வைங்க!'' - உணவு வங்கிக்குக் குவியும் பாராட்டுகள்!

உணவு வங்கி
உணவு வங்கி

"இப்ப எல்லாம் எங்க கடைப்பக்கம் யாசகம் கேட்டு வர்றவங்க ரொம்பவே கொறஞ்சிருக்காங்க. அப்படி வர்றவங்க எல்லாம் யாசகம் கேட்காம சாப்பாடை எடுத்துக்கிட்டு போறாங்க."

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தாலுகா அலுவலக சாலையில் இருக்கிறது வீனஸ் எலக்ட்ரிக்கல் கடை. இந்தக் கடையின் முன்பு உணவைப் பகிர்வோம் என்ற போர்டுடன், கண்ணாடிப் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்குள் சாப்பாடு பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்மீது 'உணவைப் பகிர்வோம்' என்ற வாசகத்துடன் போர்டு வைக்கப்பட்டிருந்தது. கடைக்கு முன்பு ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே எனப் பக்கத்தில் சென்று பார்க்கும் நேரத்தில் கண்ணாடிப் பெட்டியைப் பலரும் திறந்து அதிலிருந்து சாப்பாடு பொட்டலங்களை எடுத்துச் சென்றவாறு இருந்தனர்.

உணவு வங்கி
உணவு வங்கி

பெட்டிக்குள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த சாப்பாடு பொட்டலங்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் காலியாகிவிட்டன. அறந்தாங்கியில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கும், கடை, கடையாக யாசகம் கேட்டு வருபவர்களுக்கும் மூன்று வேலை சாப்பாடே இந்தக் கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கும் பொட்டலங்கள்தான். அந்த எலக்ட்ரிக்கல் கடையில் பணியாற்றும் இளைஞர்கள் இருவர் இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்த ஒருவேளைச் சாப்பாட்டையாவது கொடுப்போம் என்ற நல்ல எண்ணத்தில் துவங்க இன்று அறந்தாங்கியில் உள்ள பல உணவு நிறுவனங்களும் உணவுப்பொட்டலங்களை இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளன. மூன்று நேரமும் உணவு வங்கியில் சாப்பாடு கிடைக்கிறது. இளைஞர்களின் முயற்சிக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்தச் செயலை முன்னெடுத்தவர்களில் ஒருவரான கதிரிடம் பேசினோம். "ரொம்ப வருஷமா இந்த எலக்ட்ரிக்கல் கடையில வேலை பார்த்திக்கிட்டு வர்றோம். பசிக்குதுங்க சாப்பாட்டுக்கு வழியில்லைன்னு சொல்லி யாசகம் கேட்டு பலரும் வருவாங்க. சாப்பாடு கிடைக்காம, அவசர, அவசரமா கடையில் தண்ணீரைக் குடிச்சிக்கிட்டே இருப்பாங்க. பார்ப்பதற்கு பாவமா இருக்கும். சாப்பாடு வேணுமான்னு கேட்டு பக்கத்துல உள்ள கடையில வாங்கிக்கொடுப்போம். சாப்பாடு இல்லாம இருக்கறவங்கவங்களுக்கு நிரந்தரமா சாப்பாடு கிடைக்க ஏதாவது செய்யணும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச ஐடியாதான் இது. ஃபிரிட்ஜ் சர்வீஸ் சென்டர்ல இருந்து பழுதாகிப்போன ஃபிரிட்ஜ்ஜை எடுத்து வந்து முன்பக்கம் கண்ணாடியைப் பொறுத்தி கொஞ்சம் எல்லாத்தையும் மாத்தினோம். மொத நாளு திட்டமிட்டோம்.

உணவு வங்கி
உணவு வங்கி

அடுத்த நாள் கடை வாசல்ல கொண்டு வந்து வச்சோம். எல்லாரும் இப்போ இதை உணவு வங்கின்னு சொல்றாங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடையில 7 பேர் வேலை பார்க்கிறோம். எல்லாரும் அவங்களால முடிஞ்ச பணம் கொடுப்பாங்க. அதை வச்சு, காலையில 10 பொட்டலம், மதியம் 20 பொட்டலம், இரவு 10 பொட்டலமுன்னு சாப்பாடு வைப்போம். செவ்வாய்க்கிழமை கொஞ்சம் அதிகமாகப் போகும். அன்னைக்கு மட்டும் கூடுதலாக வைக்கணும். இலவசமாகக் கொடுத்தாலும், தரமான சாப்பாடு கொடுக்கணும்ல... சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பார்த்துதான் அந்தக் கடையிலிருந்து வாங்கி வருவோம்.

"உணவைப் பகிர்வோம்... உணவை எடுத்துக்கொள்ளுங்கள், விருப்பம் உள்ளவர்கள் உணவை வழங்குங்கள்" என்றுதான் போர்டு வச்சிருப்போம். இப்போ நாங்க செய்றதைப் பார்த்துட்டு பலரும் தாமாக முன்வந்து சாப்பாடுகளை வைக்கிறாங்க. பக்கத்தில் இருக்க நந்தினி மெஸ், ஜோதி மெஸ்ன்னு சாப்பாட்டுக்கடைகள்ல இருந்தும் சாப்பாடு வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. ரொம்ப வருஷமா இப்படி செய்யணும்னு யோசிச்சோம். அது இப்பத்தான் நிறைவேறியிருக்கு. அதே நேரத்துல இந்த உணவு வங்கியைப் பாதுகாக்கிறதும் ரொம்ப முக்கியம். அடிக்கடி சுத்தப்படுத்தணும். சாப்பாடு வாங்கி வைக்கணும். பழைய சாப்பாடா இல்லாம பார்த்துக்கணும். அதுக்காகத்தான் கடை வாசல்ல வச்சோம்.

உணவு வங்கி
உணவு வங்கி

எங்க கடை ஓனர் ரொம்பவே சப்போர்ட் பண்றாரு. அதனால,தான் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்கு. அதோட அவரும் சாப்பாடு கொடுப்பதற்குப் பங்களிக்கிறாரு. இப்ப எல்லாம் எங்க கடைப்பக்கம் யாசகம் கேட்டு வர்றவங்க ரொம்பவே குறைஞ்சிருக்காங்க. அப்படி வர்றவங்க எல்லாம் யாசகம் கேட்காம சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போறாங்க. உண்மையா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுறவங்களுக்கு உதவுவதற்காகத்தான் இதனைத் தொடங்கினோம். 90 சதவிகிதம் அவங்களுக்கு இந்த உணவு வங்கி மூலமா சாப்பாடு கிடைக்குது. பல இடங்கள்ல இதுபோன்ற உணவு வங்கியை வைக்கணும். சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்களே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கணும்ங்கிறதுதான் எங்களோட ஆசை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு