Published:Updated:

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

விருதுநகரில் நடந்த ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஏலத்தை எதிர்த்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சதீஷ் குமார்
சதீஷ் குமார்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு மிகத் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான உள்ளூர் ஏலம் களைகட்டி வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் ஆணையம்

இது சட்டத்துக்குப் புறம்பானது என்றாலும் கடந்த சில நாள்களில் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சிகளில் இதுபோன்ற முறைகேடான ஏலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக தஞ்சை, கடலூர் போன்ற பல மாவட்டங்களில் ஏலம் நடக்கும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதே ஏலம் தொடர்பாக விருதுநகரில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஊர்க் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கடலூர் ஏலம்
கடலூர் ஏலம்

அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராமசுப்பு என்பவரைப் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்துள்ளனர். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `ஆளுங்கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால் ஊருக்கும் கோயிலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்’ என்று ராமசுப்பு தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர்.

தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் ரூ.15 லட்சம்- கடலூரில் ஏலம்போன ஊராட்சி மன்றப் பதவிகள் #Video

இதை ஏற்காத சதீஷ் குமார் `தேர்தலின் மூலமே ஊராட்சி மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ எனக் கூறி ராமசுப்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சதீஷ்குமாருக்கும் ராமசுப்பு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவை போட்டியின்றி தேர்வு செய்தால் ஊருக்கும் கோயிலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
ஊர் தலைவர்கள்
`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஏல விவகாரம் தொடர்பாக ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராமசுப்பு, சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.