Published:Updated:

`எனக்கொரு பிரச்னை; தீர்த்துட்டு போங்க, இல்லைனா..!'- எடப்பாடி காரை கத்தியுடன் வழிமறித்த இளைஞர்

முதலில் கான்வாய் முன்னே கிளம்ப, முதல்வரின் கார் பின்னால் வந்தது. வண்டி கிளம்பும்போது திடீரென உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர், முதல்வர் காரை வழிமறித்தார்.

கைதுசெய்யப்பட்ட சுதாகர்
கைதுசெய்யப்பட்ட சுதாகர்

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டன. அதன் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

முதலில் திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகும் விழா நடந்தது. அதை முடித்துக்கொண்டு, இரண்டாவதாக ராணிப்பேட்டை தொடக்க விழாவுக்கு வந்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு புதிய மாவட்டத்தைத் தொடங்கிவைத்து திட்டங்கள் சிலவற்றை அறிவித்தவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், விழாவை முடித்துக்கொண்டு 3.15 மணிக்கு விழா அரங்கிலிருந்து கிளம்பினார்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கான்வாய் முன்னே கிளம்ப, பின்னால் முதல்வரின் கார் வந்தது. வண்டி கிளம்பும்போது திடீரென உள்ளே புகுந்த இளைஞர் ஒருவர், முதல்வர் காரை வழிமறித்தார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ``எனக்கொரு பிரச்னை இருக்கு. பிரச்னையைத் தீர்க்காமல் சென்றால் செத்துருவேன்" என்று கூறிவிட்டு, பையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தில் வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் பதற்றமடைந்த பாதுகாப்புப் போலீஸார், `சி.எம் வாகனம் செல்ல வேண்டும்' எனக் கூறி சிரமங்களுக்கு இடையில் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர்.

`தினமும் 100 பேருக்கு சாப்பாடு... ஜனவரியில் புது இலக்கு!' -வில்லன் நடிகரின் `மக்கள்' சேவை

அவரிடம் இருந்த கத்தியைக் கைப்பற்றிய போலீஸார், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (30 வயது) என்பது தெரியவந்தது. திருமணம் ஆகாத சுதாகர், அப்பகுதியில் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் இருந்த அவரைக் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

தனது நிலைகுறித்து எஸ்.பி அலுவலகம் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். அதனால்தான், `எனது பிரச்னைக்குத் தீர்வு காண முதல்வரிடம் மனு கொடுக்க வந்தேன். அவரைப் பார்க்க முடியாத சூழலில் கத்தியை வச்சு மிரட்டிப்பார்க்கலாம் என கத்தியை எடுத்துவந்தேன்' என்றுகூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

சுதாகரை கூட்டத்துக்கு அழைத்துவந்த அ.தி.மு.க பிரமுகர்கள், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸிடம் அவரை விடுவிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதை மறுத்த போலீஸார், சுதாகரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.