Published:Updated:

``கையில் கிடைத்த உன்னைத் தொலைத்துவிட்டேன், மன்னித்துவிடு’’ - கடத்தப்பட்ட மனைவி; உயிரைவிட்ட இளைஞன்

சக்திவேல்

‘‘நான் ஆசைப்பட்ட மாதிரியே உன் போட்டோவை என் வீட்டுல மாட்டிட்டேன். நீ ஆசைப்பட்டதைப்போலவே உன் கணவனாக உயிர் நீக்கம் செய்யறேன். மன்னிச்சிடு பாப்பா’’ என்று கடிதம் எழுதிவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

``கையில் கிடைத்த உன்னைத் தொலைத்துவிட்டேன், மன்னித்துவிடு’’ - கடத்தப்பட்ட மனைவி; உயிரைவிட்ட இளைஞன்

‘‘நான் ஆசைப்பட்ட மாதிரியே உன் போட்டோவை என் வீட்டுல மாட்டிட்டேன். நீ ஆசைப்பட்டதைப்போலவே உன் கணவனாக உயிர் நீக்கம் செய்யறேன். மன்னிச்சிடு பாப்பா’’ என்று கடிதம் எழுதிவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

Published:Updated:
சக்திவேல்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த ஜி.கே.எம் தெருவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சக்திவேல், வயது 25. இவரின் தந்தை ஜான்சன், தாய் தனலட்சுமி இருவரும் கொரோனா காலகட்டத்தில் மரணமடைந்துவிட்டனர். ‘உறவு’ என ஒரே தங்கை மட்டுமே சக்திவேலுவுக்கு இருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலிருக்கும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சக்திவேல் பணிபுரிந்துவந்தார். அதே தொழிற்சாலையில் வேலை செய்துவந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் சக்திவேலுவுக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது. இருவரும் மனம்விட்டுப் பேசி காதலித்துவந்தனர். இது குறித்து, பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் மகளை வேலையைவிட்டு நிறுத்தி, வீட்டுக்கு வரவழைத்துக்கொண்டனர். ஆனாலும், அவர்களுக்கு இடையேயான காதல் முறியவில்லை. செல்போனில் பேசிவந்திருக்கிறார்கள்.

சக்திவேல்
சக்திவேல்

இதற்கிடையே, பெற்றோர் இடத்திலிருந்து தன் ஒரே தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துவைத்திருக்கிறார் சக்திவேல். அதன் பிறகு அவரின் வாழ்க்கை தனியாகவே நகர்ந்ததால், காதலியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருக்கிறார். காதலிக்கு போன் செய்து வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல், வேலூர் வந்துவிடுமாறு கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல், அந்தப் பெண்ணும் வீட்டிலிருந்து வெளியேறி, பேருந்தைப் பிடித்து ஒரு வழியாக வேலூர் வந்து சேர்ந்தார். சக்திவேலுவும் வேலூர் பேருந்து நிலையத்தில், காதலியை பிக்கப் செய்துகொண்டு, சென்னைக்குச் சென்றார். ஆகஸ்ட் 3-ம் தேதி, சென்னை திருவொற்றியூரில் இருவரும் மணமாலை மாற்றி, பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். ஐந்து நாள்கள் கழித்து, பாதுகாப்புக் கோரி ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரத்தில் பாதுகாப்பு வழங்கி, பெண்ணின் பெற்றோரைச் சமாதானம் செய்யுமாறு எஸ்.பி அலுவலகத்திலிருந்து வாலாஜாபேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவு பறந்தது. புதுக்கோட்டையிலிருக்கும் இளம்பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் விரைந்து வந்தனர். பெண்ணின் பெற்றோரை எச்சரித்துவிட்டு, நண்பர்களுடன் காதல் ஜோடியை போலீஸார் அனுப்பிவைத்திருக்கிறார்கள். சக்திவேல் வேறு சமூகம் என்பதால், பெண்ணின் பெற்றோருக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எப்படியாவது பிரித்து, தங்கள் மகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று உள்ளூரிலேயே ஆட்களோடு பதுங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. உள்ளூரில் இருந்தால் பிரச்னை தொடரும் என்பதால், காதல் ஜோடியை பெங்களூருக்கு அனுப்பிவைக்க நண்பர்கள் முடிவு செய்து, ஆம்னி பேருந்தில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

கடிதம்
கடிதம்

வாலாஜாபேட்டையிலிருந்து சேர்க்காடு வழியாக பேருந்து சென்றபோது, பெண்ணின் உறவினர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து சென்று பேருந்தை மறித்து, பேருந்துக்குள் ஏறி, சக்திவேலுவைத் தாக்கிவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. பதறிப்போன சக்திவேல், ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று, காதல் மனைவியை மீட்டுத்தருமாறு புகார் அளித்திருக்கிறார். சம்பவம் நடந்த இடம், வேலூர் மாவட்டம் திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்டு வருவதால், அங்கு செல்லுமாறு கூறி அனுப்பிவைத்ததாக சக்திவேல் எழுதி வைத்திருக்கிறார். மேலும் திருவலம் காவல் நிலையம் வந்த சக்திவேலுவை, இரு தரப்பு பஞ்சாயத்து நடந்த வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். வாலாஜாபேட்டை சென்றவரை மீண்டும் திருவலத்துக்கே அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்து, வேலூர் சரக டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு வந்தவரை, ‘உயர் நீதிமன்றத்தை அணுகி ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்யுமாறு அனுப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சக்திவேல், கடந்த 12-ம் தேதி எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, 16-ம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேலுவின் உடல் நேற்று முன்தினம் அவரின் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, சக்திவேல் தற்கொலை முயற்சியின்போது டைரியில் எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்

அந்தக் கடிதத்தில், ‘‘என் ஆசை பொண்டாட்டி. என்னை மன்னித்துவிடு. உன் முகத்தைப் பார்க்கும் அருகதை எனக்குக் கிடையாது. இனி ஒரு பிறவி இருந்தால், நாம் அங்கு சந்திக்கலாம். உன்னுடன் இருந்த அநிது நாள்களிலேயே என் உறவினர்களையும், நண்பர்களையும் தூக்கி எறிந்துவிட்டேன். உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன். தற்கொலை என்பது கோழைத்தனம் என நானே பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், என்ன செய்வதென்று அறியாமல், உன்னைவிட்டு, இவ்வுலகைவிட்டு, என் அன்னையிடம் செல்கிறேன்.

சக்திவேல்
சக்திவேல்

யாரை நம்புவது என்றே தெரியவில்லை. முடிந்தால், நான் சென்ற பிறகாவது என்னை மறக்காமல் இரு. நாம் மூன்று வருடங்கள் தொலைதூரக் காதலில் இருந்தோம். ஆனால், இந்த ஐந்து நாள்களிலேயே திருமண வாழ்க்கை சீக்கிரம் முடியும் எனக் கனவிலும்கூட நினைக்கவில்லை. பேருந்தில் ஏறிவிட்ட பிறகு, இனி நமக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. நம்மை யாராலும் பிரிக்க முடியாது என பேசிக்கொண்டே பயணம் செய்தோம். ஆனால், உன் வீட்டு விசுவாசிகள் இப்படிச் செய்வார்கள் என நினைக்கவில்லை. நானும் ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், வாலாஜா போலீஸ் ஸ்டேஷன், திருவலம் போலீஸ் ஸ்டேஷன், ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகம், வேலூர் டி.ஐ.ஜி அலுவலகம் சென்று புகார் கொடுத்து உன்னை மீட்டுவிடலாம் என எண்ணினேன். ஆனால், ஏமாந்துபோய்விட்டேன். கையில் கிடைத்த பொருளைத் தொலைத்த பாவி ஆகிவிட்டேன். நான் ஆசைப்பட்ட மாதிரியே உன் போட்டோவை என் வீட்டுல மாட்டிட்டேன். நீ ஆசைப்பட்டதைப்போலவே உன் கணவனாக உயிர்நீக்கம் செய்யறேன். மன்னிச்சிடு பாப்பா; இப்படிக்கு உன் ஆசை புருஷன்’’ என்று முடித்திருக்கிறார். ஆறுதல் சொல்ல பெற்றோரும் இல்லை. அரவணைக்க உறவுகளும் இல்லாத சூழலில், சக்திவேலுவின் வாழ்க்கைப் பயணமும் 25 வயதுக்குள்ளேயே முடிந்திருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்
தற்கொலை தடுப்பு மையம்