Published:Updated:

``என் உயிர் போவதற்குள் பெற்றோரை நல்ல மனிதரிடம் ஒப்படைக்க வேண்டும்!'' -சேலம் இளைஞரின் கண்ணீர் கதை

வடிவேல் குடும்பம்
வடிவேல் குடும்பம் ( எம். விஜயகுமார் )

``இன்றைக்கோ, நாளைக்கோன்னு வாழ்நாளை எண்ணிட்டு இருக்கேன். நான் இறந்துட்டா, என்னை எடுத்துப் போட வயதான எங்க அப்பாம்மா இருக்காங்க. ஆனா, அவுங்களை எடுத்துப் போட சொந்த பந்தம் யாரும் இல்லங்கறது தான் என்னோட கவலை''

``வாழ்க்கையில் எப்போதாவது துன்பம் வரலாம். ஆனால், என் வாழ்க்கையே துன்பமாக மாறிவிட்டது. கண்களை மூடும் கடைசி நொடி கூட நிம்மதியாக மரணிக்க வாய்ப்பில்லை'' என்கிறார் இதய வால்வு அடைபட்டு இரண்டு கிட்னிகளையும் இழந்த வடிவேல்.

வடிவேல்
வடிவேல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாப்பாடியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஊரடங்கைப் போல வாடகை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வடிவேல். வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்தால் தான் உயிர் பிழைக்க முடியும். அதற்காக வடிவேலின் வயதான தாயார் பொது இடங்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்தால் தான் டயாலிசிஸ் செய்ய முடியும். ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் பிச்சை எடுக்க வழியில்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாமல் தவிப்பதாக கண்ணீர் விடுகிறார்கள்.

``வாழ்க்கையை நினச்சா ரொம்ப விரக்தியா இருக்கு'' என்று தொடர்ந்தவர், ``எங்க அப்பா பேரு பெருமாள், அம்மா லட்சுமி. என் கூட பிறந்தவங்க பூங்கொடி, தங்கம் என ரெண்டு அக்கா. நான் கடைசி பையன். எங்க அப்பாவும், அம்மாவும் கூலி வேலை செஞ்சு எங்களை நல்லா வளர்த்தாங்க. பெருசா பணங்காசு இல்லன்னாலும் மனதளவில் சந்தோஷமாக வாழ்ந்தோம். பதினைந்து வருஷத்துக்கு முன்பு புயலைப் போல எங்க வாழ்க்கை புரட்டி போட்டிருச்சு.

பெரிய அக்கா திருமணமாகி பிரசவத்தின்போது தாயும், சேயும் இறந்துட்டாங்க, சின்ன அக்கா திருமண வயதில் இறந்துட்டாங்க. இதனால் அப்பாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. எனக்கும் திடீரென்று வாந்தி, கை, கால் வீக்கம் வந்தது. டாக்டரை போய் பார்த்தோம். உடம்பில் நீண்ட நாள்களாக இருந்த வைரஸால் இதயம், கிட்னி பாதித்துவிட்டது. இதயத்துக்குப் போகிற ரத்த வால்வுகளில் அடைப்பு இருக்கு. இரண்டு கிட்னியும் போயிடுச்சு. டயாலிசிஸ் பண்ணினால்தான் பிழைக்க முடியுமென்று சொல்லிட்டாங்க.

அதையடுத்து 14 வருஷமாக வாரம் 3 முறை டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கிறேன். இப்ப எனக்கு 35 வயதாச்சு. டயாலிசிஸ் செய்ய அரசு மாதம் 8,000 கொடுக்கிறாங்க. அது ஒரு உதவியாக இருக்கிறதே தவிர முழுமையாக டயாலிசிஸ் பண்ண முடியாது. மருந்து, மாத்திரை செலவு, போக்குவரத்துச் செலவு, உணவு எனப் பார்த்தால் மாதம் குறைந்தது 14,000 வேண்டும்.

வடிவேல் குடும்பம்
வடிவேல் குடும்பம்

எங்க அம்மா தினமும் கோயில், கல்லூரி, பேருந்து நிலையமென பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு வரும் பணத்தில் டயாலிசிஸ் பண்ணுகிறேன். நான் 14 வருஷமாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். ஒருத்தர் துணை இல்லாமல் வாழ முடியாது. இன்றைக்கோ, நாளைக்கோன்னு வாழ்நாளை எண்ணிட்டு இருக்கேன். நான் இறந்துட்டா, என்னை எடுத்துப் போட வயதான எங்க அப்பாம்மா இருக்காங்க. ஆனா, அவுங்களை எடுத்துப் போட சொந்த பந்தம் யாரும் இல்லங்கறது தான் என்னோட கவலையாக இருக்கு.

அவுங்க ரெண்டு பேரும் ஓர் அப்பாவிகள். உலகத்திலேயே செல்போனில் பேசத் தெரியாதவங்க என்றால் அது எங்க அப்பா, அம்மாவாகத்தான் இருக்கும். என் உயிர் போவதற்குள் அவர்களை நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நல்ல இதயம் உடையவர்கள் எனக்கு உதவ வேண்டும்'' என்கிறார் வீட்டுக்குள் கூனிக் குறுகி படுத்துக் கிடக்கும் வடிவேல்.

அடுத்த கட்டுரைக்கு