Published:Updated:

`தினசரி 100 டு 150 கி.மீ!’- சட்ட விழிப்புணர்வுக்காக இளைஞர்களின் நெகிழவைக்கும் முயற்சி

மிதிவண்டி பயணத்தில் இளைஞர்கள்
மிதிவண்டி பயணத்தில் இளைஞர்கள் ( உ.பாண்டி )

காயங்களுடன் தவிப்போரை மீட்க முன்வருபவர்கள் தங்கள் பெயர், முகவரி போன்றவற்றை விருப்பம் இல்லாத நிலையில் மருத்துவமனையிலோ, காவல் நிலையங்களிலோ தெரிவிக்க வேண்டியதில்லை.

விபத்து மற்றும் குற்றச்சம்பவங்களில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மீட்டு உயிர் காக்கும் பணியில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் இருவர் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விழிப்புணர்வு பயணத்தில் இளைஞர்கள்
விழிப்புணர்வு பயணத்தில் இளைஞர்கள்
உ.பாண்டி

விபத்துகள், குற்றச்சம்பவங்களில் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம், காயமடைந்தோரை மீட்க முன்வருபவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள்தான். மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றம் என அவர்கள் அலைக்கழிக்கப்படுவதால், `நமக்கேன் வம்பு?’ என ஒதுங்கி விடும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால், இந்தியாவில் விபத்து மற்றும் குற்றச்செயல்களில் காயமடைந்து உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலையில் ஒரு மணி நேரத்துக்கு 14 உயிர்கள் பறிபோகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கவும், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வோரைப் பாதுகாக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி காயங்களுடன் தவிப்போரை மீட்க முன்வருபவர்கள் தங்கள் பெயர், முகவரி போன்றவற்றை விருப்பம் இல்லாத நிலையில் மருத்துவமனையிலோ, காவல் நிலையங்களிலோ தெரிவிக்க வேண்டியதில்லை. போலீஸார் இது குறித்து வற்புறுத்தினால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு மூலம் ரிவார்டு வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. 2016-ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இது குறித்த விழிப்புணர்வு இன்னும் பொதுவெளியில் சென்றடையவில்லை.

இளைஞர்கள் விக்னேஷ், பிரேம்குமார்.
இளைஞர்கள் விக்னேஷ், பிரேம்குமார்.

இந்த நிலையில், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இரு இளைஞர்கள் மாநிலம் முழுவதும் மிதிவண்டியில் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். வேலூரைச் சேர்ந்த விக்னேஷ், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகிய இருவரும் கடந்த 13-ம் தேதி வேலூரிலிருந்து பிரசார பயணத்தைத் தொடங்கினர். பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் வழியாக நேற்று இவர்கள் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

பயணம் செல்லும் ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த இவர்களுக்கு `கொரானோ' விடுமுறையினால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. இதையடுத்து, பயணத்தின் இடையே உள்ள முக்கிய ஊர்களில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வியாபார நிறுவனங்களிலும் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாம்பனில் விழிப்புணர்வு பிரசாரம்
பாம்பனில் விழிப்புணர்வு பிரசாரம்

ராமேஸ்வரத்திலிருந்து பயணத்தைத் துவக்கிய இவர்கள் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் வழியாக மீண்டும் வேலூரில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனர். நாள்தோறும் 100 முதல் 150 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள இந்த இளைஞர்களை பாரம்பர்ய மீனவர்கள் சங்க நிர்வாகி சின்னத்தம்பி, கனிஷ்டன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு