`காலாவதி பைகளால் கொசு உற்பத்தி'- ஜொமொட்டோவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

அதிக அளவில் குவிக்கப்பட்ட இந்தப் பைகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதற்கு காரணமாகியுள்ளது. சமீபத்தில் அங்கு சோதனைக்குச் சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதைப் பார்த்துள்ளனர்.
ஆன்லைன் உணவு டெலிவரியான ஜொமொட்டோ அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்துவருகிறது. ஊழியர்கள் ஊதியம் தொடர்பான பிரச்னை, ஹலால் உணவு என தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது அந்த நிறுவனத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த அபராதம் எதற்காக என்கிறீர்களா.. உணவு டெலிவரி செய்யும் காலாவதியான பேக்குகளை ஜொமொட்டோவின் சேத்துப்பட்டு அலுவலகத்தின் மாடியில் வைத்துள்ளனர். அதிக அளவில் குவிக்கப்பட்ட இந்தப் பைகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதற்குக் காரணமாகியுள்ளது. சமீபத்தில் அங்கு சோதனைக்குச் சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதைப் பார்த்துள்ளனர்.

இதன்பிறகே ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதற்கான ரசீதை ஜொமொட்டோ பெற்றுக்கொண்டதாகவும் நாளை மறுநாளுக்குள் இந்த அபராதப் பணத்தைக் கட்டிவிடுவதாக ஜொமொட்டோ தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மழைக்காலம் வந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் அதிமாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 3,400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாக அட்மிட் செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. டெங்கு கொசு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு சோதனைகளை மேற்கொண்டு வருகிற நிலையில் ஜொமொட்டோ நிறுவனத்தின் செயல்பாடு தற்போது சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது.