Published:Updated:

`உணவு, மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள்'- வருத்தம் தெரிவித்த ஜொமேட்டோ

உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ நிறுவனம் தனது ஊழியர் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனங்களில் ஜொமேட்டோவும் ஒன்று. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கிவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக வரவில்லை. இது குறித்து, ஜொமேட்டோ சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன். அப்போது அந்த சேவை மைய அதிகாரி, நீங்கள் உணவு ஆர்டர் செய்த உணவகத்தைத் தொடர்புகொண்டோம். மொழிப் பிரச்னையால், இது சம்பந்தமாக எங்களால் பேச முடியவில்லை' என்று பதிலளிக்கிறார்" என்றும்.

மேலும், ``தமிழகத்தில் இருந்துகொண்டு தமிழ் தெரியவில்லை என்றால் எப்படி? தமிழ் தெரிந்த ஒருவரைப் பணியில் நியமிக்க வேண்டாமா? உணவகத்தைத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, `இந்தி நமது தேசிய மொழி, அதை அனைவரும் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என்று பதிலளித்திருக்கிறார்" என்று அந்த சேவை மைய அதிகாரியுடனான உரையாடலைப் பதிவு செய்திருந்தார். அந்தச் சேவை மைய அதிகாரியின் உரையாடல் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அவரின் பதிவை அடுத்து #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் ஜொமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வணக்கம் தமிழ்நாடு, எங்கள் வாடிக்கையாளரின் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்திருக்கிறோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக் கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்" என்றும்,

மேலும், ``இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டைக்‌ குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காகத் தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மையமாக்கியுள்ளோம்‌. மேலும்‌ கோயம்புத்தூரில்‌ ஒரு உள்ளூர்‌ தமிழர்‌ கால்‌ சென்ட்டர்‌ / சர்வீஸ்‌ சென்டரை உருவாக்கும்‌ பணியில்‌ உள்ளோம்‌.

உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ இரண்டு அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌கொள்கிறோம்‌" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து ஜொமேட்டோ நிறுவனத்தின் உரிமையாளர் தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு