Published:Updated:

’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்!" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive

சனா
’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்!" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive
’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்!" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive

துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதை யார் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்களோ இல்லையோ மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்கள். சென்னையில் தற்போது மழை பெய்து வருவதைப் பார்த்து, 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம்போல் இந்த வருடமும் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கும் வேளையில், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் எல்லோரும் தங்கள் பங்குக்குச் சமூக வலைதளங்களில் ஜாலியான மீம்ஸை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். 

அப்படிப்பட்ட மீம்ஸ்களில் ஒன்றுதான் ரிப்போர்ட்டர் அன்பழகன் பற்றிய மீம்ஸ். இடுப்பளவு தண்ணீரில் தனது சேனல் மைக்கைப் பிடித்தபடி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் நியூஸ் கொடுப்பது போலிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது இந்தப் போட்டோ மீம்ஸ் பற்றி கலகலப்பாகப் பேச அன்பழகனைத் தொடர்புகொண்டோம். 

''எனக்கே ரொம்ப சிரிப்பாக வருதுங்க. நேற்று இரவிலிருந்து என் போட்டோ மீம்ஸில் வருவதைப் பார்க்கும்போது நல்லா வாய்விட்டுச் சிரிக்கிறேன்'' என்று சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் கரூர் ஏரியா ரிப்போர்ட்டர் அன்பழகன். ''எனக்குச் சின்ன வயதிலிருந்தே சமூக சேவைகள் மீது ஆர்வம் அதிகம். ஸ்கூல் படித்த காலத்திலிருந்து NSS கேம்பில் முதல் ஆளாகயிருப்பேன். அப்போதிலிருந்தே ரத்ததானம் முதல் பல சேவைகள் செய்வேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். ரிப்போர்ட்டர் வேலைக்குச் சேர்ந்ததுக்குப் பிறகு எந்த நியூஸாகயிருந்தாலும் தைரியமாகக் கொடுப்பேன். எப்போதும் எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில்லை. இப்போது என்னைப் பற்றி நிறைய மீம்ஸூகள் வருகின்றன. அதையே எனக்கான அங்கீகாரமாக நினைத்துக்கொள்கிறேன்'' என்று சென்ட்டிமென்ட்டாகப் பேசத் தொடங்கியவர், 2015-ம் ஆண்டு நடந்த வெள்ள சம்பவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

''இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் அந்தப் புகைப்படம் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது நான் புதிய தலைமுறையில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் சென்னையில் இல்லை கரூர் தாலுகா ரிப்போர்ட்டராக இருந்தேன். தற்போது நியூஸ் 18 சேனலில் கரூர் ரிப்போர்ட்டராக இருக்கிறேன். அந்த நேரத்தில் சென்னையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரூரில் இருந்த எனக்கு டி.வி.யில் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, ''என்னடா இப்படி வெள்ளமாகயிருக்கே... நம்ம ஏதாவது பண்ணணும்’னு தோணுச்சு. அந்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் இருந்த என் நண்பர்கள் அனைவரும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப்போகலாம் என்று முடிவெடுத்தோம். ஏன்னா, எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியும். என் நண்பர்களாகிய தென்காசி மகேஷ், வள்ளியூர் ராஜன் மற்றும் குடியாத்தம் நண்பர் என அனைவரும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானோம். அவர்களும் ரிப்போர்ட்டர்கள்தான். அப்போது சென்னைக்கு எந்தப் பேருந்தும் செல்லவில்லை. நான் எப்படியோ வண்டியைப் பிடித்து சென்னை வந்துவிட்டேன். குற்றாலம் மற்றும் வள்ளியூர் ரிப்போர்ட்டர் திருவனந்தபுரம் போய் அங்கேயிருந்து ஃப்ளைட் பிடித்து பெங்களூரு போயிட்டாங்க. அங்கேயிருந்து சென்னைக்கு வண்டி பிடித்து வந்தாங்க. 

நாங்க மூன்று பேரும் சென்னைக் கோயம்பேட்டில் சந்தித்துக்கொண்டோம். அப்போது கோயம்பேட்டில் ஒரே ஒரு மெட்ரோ ரயில் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பிடித்து கிண்டி புதிய தலைமுறை ஆபிஸூக்குப் போனோம். அங்கு ஏற்கெனவே வெள்ளத்தால் ஆபிஸ் ரொம்ப அடிப்பட்டிருந்தது. அப்போதிருக்கும் சி.இ.ஓ எங்களைப் பார்த்தவுடன் ''மீட்புப் பணிகள் செய்துகொண்டே நியூஸூம் கொடுங்க''னு சொன்னார். 

அப்போது கேமரா மேன் லெனின் எங்களுடன் வந்தார். பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாத்தையும் தேடிப் போய் மீட்புப் பணிகள் மற்றும் நியூஸ் என இரண்டு வேலைகளையும் செய்துகொண்டிருந்தோம். அப்போது சென்னை நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் காலனி பகுதிகளில் எல்லாம் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. மீம்ஸில் வருகின்ற போட்டோகூட அந்த இடத்தில் எடுத்ததுதான். 

அந்த இடத்தில் பார்த்தால் ஒரு வீட்டில் அம்மா, மகள், மகன் என மூன்று பேரும் வீட்டின் உள்ளே வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள். அதிலும் இறந்த அந்தப் பையன் சென்னை வெள்ளத்தின்போது நிறைய மக்களை மீட்டு வெளியே கொண்டுவந்தவர். தன் வீட்டில் அம்மாவும் அக்காவும் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க வீட்டுக்குள்ள போனான். அதிலும் அவர்கள் அக்கா ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களைக் காப்பற்றப் போய் அந்தப் பையனும் இறந்து அந்த அம்மாவும் பொண்ணும் இறந்துவிட்டார்கள். ரொம்பத் துயரமான சம்பவம் அது. அதைப் பற்றிதான் அந்த வீட்டின் முன்னே நின்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது என்னைச் சுற்றி தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் பாம்பு சென்றுகொண்டிருந்தது. அந்தச் சம்பவத்தை வாழ்க்கையில் மறக்க மாட்டேன். ஒரு 10 நாள்கள் அங்கேயிருந்து எங்களால் முடிந்த அளவுக்கு எல்லோரையும் மீட்டோம். மாற்றுத் துணிகூட கொண்டு போகவில்லை. இரண்டு சட்டைகள் மட்டும் வைத்துக்கொண்டுதான் நியூஸ் கொடுத்தேன். சைதாப்பேட்டை பகுதியில் பல இடங்களை மீட்டு, சுத்தப்படுத்தவும் செய்தோம். 

பலபேர் டி.ஆர்.பி-காக சில விஷயங்களை மீடியா செய்கிறது என்று சொல்லும்போது எனக்கு ஆத்திரம், சிரிப்பு இரண்டும் சேர்ந்துதான் வந்தது. பல உயிர்களைக் காப்பற்ற வேண்டும். மக்கள் படும் வேதனைகளை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதால்தான் செய்கிறோம். ஏன்னா, அந்த நேரத்தில் நான் தாலுகா ரிப்போர்ட்டர். சென்னை வந்த முதல் நோக்கமே பல பேரை மீட்க வேண்டுமென்பதால்தான். சேனல் சொல்லி சென்னைக்கு நாங்கள் வரவில்லை. நான் தண்ணீரில் தைரியமாக இறங்கியவுடன்தான் பல சேனல் ரிப்போர்ட்டர்கூட தைரியமாக இறங்கினார்கள். டி.ஆர்.பி-க்காக எல்லாம் எந்த ரிப்போர்ட்டரும் தங்கள் உயிரைப் பணையம் வைக்க மாட்டார்கள். என்னைவிட என்னுடன் வந்த கேமரா மேன் லெனின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஷூட் செய்வதற்கு ரொம்பச் சிரமப்பட்டார். அவர் இந்த ஷூட்டை தனது தலையில் கேமராவை வைத்துக்கொண்டுதான் எடுத்தார். அதுவும் மழை வெள்ளத்தில் கேமரா, மைக் எல்லாவற்றுக்கும் எதுவும் பாதிப்பு ஆகாமல் வைத்திருப்பதே பெரிய டாஸ்க். 

என் மனைவி நான் செய்யும் எந்த நல்ல காரியத்துக்கும் குறுக்கே நிற்க மாட்டார். இப்போதும் சென்னையில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் கண்டிப்பாக வந்து எல்லோரையும் மீட்பேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர், நடிகைகள் பற்றி மீம்ஸ் வரும் வேலையில் ஒரு செய்தியாளரைப் பாராட்டி மீம்ஸ் வருவது மகிழ்ச்சியாகயிருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் அன்பழகன்.